Published : 29 Nov 2013 12:00 AM
Last Updated : 29 Nov 2013 12:00 AM

பற்றாக்குறை எல்லையைத் தாண்டாது: அரவிந்த் மாயாராம்

நாட்டின் பற்றாக்குறை அதன் எல்லையை ஒருபோதும் தாண்டாது. கடன் வாங்கும் அளவு அதிகரித்தால்தான் பற்றாக்குறை அதிகரிக்கும். அந்த வகையில் நாடு எந்த அளவுக்குக் கடன் சுமையைத் தாங்கும் என்பது தெரியும். எனவே பற்றாக்குறையை கட்டுக்குள் வைத்திருப்பதும் தெரியும் என்று பொருளாதார விவகாரங்களுக்கான செயலர் அரவிந்த் மாயாராம் தெரிவித்தார்.

நாட்டின் நிதிப்பற்றாக்குறை 4.8 சதவீத அளவு என்பது எல்லையாகும். இந்த எல்லையை அது ஒரு போதும் தாண்டாது. அதற்காக வருவாயை அதிகரிக்கும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. 4.8 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த முழு வீச்சிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசு பங்குகளை விற்பனை செய்வதின் மூலம் நடப்பு நிதி ஆண்டில் ரூ. 40 ஆயிரம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 7 மாதங்களில் இதுவரை ரூ. 1,150 கோடி மட்டுமே திரட்டப்பட்டுள்ளது. அலைக்கற்றை ஒதுக்கீடு மூலம் அதிக வருவாய் கிடைக்குமா என்று கேட்டதற்கு, அதில் அதிக அளவு வருவாய் வரும் என்று குறிப்பிட்டார்.

நடப்பு நிதி ஆண்டில் அரசின் கடன் அளவு ரூ. 5.79 லட்சம் கோடி டாலர் அளவுக்குக் கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 76 சதவீத அளவு ஏற்கெனவே கடந்த 7 மாதங்களில் பயன்படுத்தப்பட்டு விட்டது. எஞ்சியுள்ள ரூ. 2.35 லட்சம் கோடியைக் கொண்டு அக்டோபர் முதல் மார்ச் வரையான காலத்தை ஓட்ட வேண்டும். முதலீட்டு அளவு அதிகரிக்கும்போது ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியைக் குறைக்கும் என நம்புவதாக மாயாரம் கூறினார்.

தற்போது பங்குச் சந்தையில் ஸ்திரமற்ற நிலை காணப்படுகிறது. அமெரிக்க பெடரல் அரசு மானிய உதவியை படிப்படியாகக் குறைக்கக் கூடும் என்பதே இதற்குக் காரணமாகும். இதனாலேயே டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பிலும் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. சர்வதேச அளவில் இந்திய சந்தையில்தான் அதிக அளவு நம்பிக்கை காணப்படுகிறது. அது ஏற்றம் பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

பொருளாதார வளர்ச்சியைப் பொருத்தமட்டில் அது எதிர்பார்த்த வளர்ச்சியை எட்டும் என்றார். முதலீட்டுக்கான அமைச்சரவை அளித்துள்ள ஒப்புதல் காரணமாக முதலீடுகள் மேலும் வரும் என்று மாயாராம் நம்பிக்கை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x