Published : 30 Jun 2017 10:09 AM
Last Updated : 30 Jun 2017 10:09 AM

அறிவோம் ஜிஎஸ்டி: வரி விகிதத்தை மாற்றும் அதிகாரம் யாருக்கு உண்டு?

சில உணவுப் பொருட்கள் பூஜ்யம் வரி விகிதத்தில் உள்ளன. ஆனால் இதுவே பிராண்ட் தயாரிப்பாக இருந்தால் 5 சதவீதம் என்பது சாமான்ய மக்களை பாதிக்காதா?

பெரிய நிறுவனங்கள் 5% ஜிஎஸ்டி வரி செலுத் தும்பொழுது அதனை பிராண்ட் செய்வதற் கான செலவுகள், உதாரணமாக விளம்பரச் செலவுகள் போன்றவற்றுக்கான உள்ளீட்டு வரியை வரவாக எடுத்துக் கொண்டு மீதியை மட்டும் வரியாக செலுத்தினால் போதும். இதனால் 5% என்பது உள்ளீட்டு வரி மற்றும் வெளியீட்டு வரி இரண்டையும் சரி செய்து கொள்ளலாம். ஆகவே இது சாமானிய மக்களை பாதிக்காது. மேலும் பிராண்ட் அல்லாத பொருட்களை வியாபாரம் செய்பவர்களுக்கு விலை வித்தியாசத்தில் ஒரு சின்ன அனுகூலம் இருப்பதாகவும் அமைந்திருக்கும் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம்.

ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாநில அரசோ, மத்திய அரசோ நிர்ணயிக்க அதிகாரம் உள்ளதா?

மாநில அரசும் மத்திய அரசும் 101வது அரசியல் சாசன சட்டத்தின்படி வரி விதிக்கும் உரிமை பெறுகிறார்கள். ஆனால் ஜிஎஸ்டிக் கான வரிவிகிதம் மொத்தமாக மத்திய, மாநில இரண்டு அரசுகளும் சேர்ந்து 40%க்கு மேல் வரிவிதிப்பதற்கு சட்டம் அனுமதிக்கவில்லை. எந்தப் பொருளுக்கு எந்த வரி என்பதை நிர்ணயம் செய்யும் அதிகாரம் ஜிஎஸ்டி கவுன்சிலை சேர்ந்தது. இதில் மூன்றில் இரண்டு பங்கு மாநில நிதி அமைச்சர்களும், மூன்றில் ஒரு பங்கு மத்திய நிதி அமைச்சர் மற்றும் இணை அமைச்சரும் இடம் பெற்று இருப்பார்கள். 50 சதவீதம் உறுப்பினர்கள் பங்குபெறும் நிலையில் 75 சதவீத உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு சட்ட வடிவம் பெறும். எனவே தன்னிச்சையாக மாநில அரசோ அல்லது மத்திய அரசோ வரி விகிதங்களை முடிவு செய்ய இயலாது.

வரிவிலக்கு பெற்ற மற்றும் வரிவிலக்கு பெறாத பொருட்களை விற்று வருகிறேன். இதற்கான உள்ளீட்டு வரி வரவு (Input Tax Credit) எடுக்க முடியுமா?

விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களுக்கான, சேவைகளுக்கான உள்ளீட்டு வரியை வரவாக (Credit) எடுத்துக் கொள்ள முடியாது. மாறாக வரிவிலக்கு பெறாத பொருட்களான உள்ளீட்டு வரியை மட்டும் எடுத்து கொள்ளலாம்.

எந்த வகையான வரி செலுத்துவோர் வருடாந்திர கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்? அதற்கான கால அவகாசம் என்ன?

ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட வரிதாரரும் தங்களது வருடாந்திர கணக்கை தாக்கல் செய்வது அவசியமாகிறது. ஜிஎஸ்டிஆர் 9 என்கிற படிவத்தை பூர்த்தி செய்து அடுத்த வருடம் டிசம்பர் 31க்கு முன்பாக வரி தாக்கல் செய்வது அவசியமாகிறது.

கணக்கு மற்றும் தணிக்கை கட்டாயமா? மேலும் இதற்குரிய வரம்புகள் என்ன?

ஒவ்வொரு வணிகரும் தங்களது கணக்கு புத்தகங்கள் மற்றும் ஜிஎஸ்டி சார்ந்த அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். நிதி ஆண்டிற்கான வருடாந்திர தாக்கல் செய்யும் குறிப்பிட்ட நாளிலிருந்து மேலும் 72 மாதங்கள் முடியும் வரை பத்திரமாக பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். தணிக்கை என்பது ஆண்டு வர்த்தகம் இரண்டு கோடிக்கு மேல் இருந்தால் தணிக்கையாளர் (Auditor) மூலமாகவும் செலவு கணக்காளர் (Cost Accountant ) மூலமாகவும் கணக்கை தாக்கல் செய்வது அவசியமாகிறது.

ஜிஎஸ்டி வரியில் முன்தொகை (Advance) பெறும்போது வரி செலுத்த வேண்டும் என்று சொல்கிறார்களே?

ஆம். முந்தைய முறையில் உற்பத்தி வரி மற்றும் மதிப்பு கூட்டு வரி, முன்தொகை பெறும் போது ஏதும் செலுத்த வேண்டியதில்லை. மேலும் முந்தைய சேவை வரியில் முன்தொகை (Advance) பெறும்பொழுது அது வரி நீங்கலாக கருதப்பட்டு அதற்குரிய வரித் தொகையை முன்தொகை(Advance) பெற்ற நாளிலிருந்து முன்தொகை பெற்ற நபர் கட்ட வேண்டும். ஆனால் ஜிஎஸ்டி முறையில் விநியோகம் செய்த நாளிலிருந்தே வரிவிதிப்பு நிகழ்வாக கருதப்பட்டு அதற்கான வரியை பிடித்து செலுத்துவது அவசியமாகிறது.

ஐஜிஎஸ்டி செலுத்தும்போது கவனிக்க வேண்டியவை என்ன?

ஐஜிஎஸ்டி செலுத்தும்போது விநியோக இடம் மற்றும் விநியோக நேரத்தை கண்டறிவது அவசியம். உதாரணமாக மும்பையை சேர்ந்த யாத்ரீகர் மதுரை கோவிலுக்கு வரும்போது அங்குள்ள நகைக் கடையில் ரூ.2 லட்சத்திற்கு தனது நிரந்தர கணக்கு எண் (PAN) மற்றும் முகவரி கொடுத்து நகை வாங்குகிறார் என்றால் இது ஒரு வெளிமாநில விநியோகம். எனவே ஐஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இவ்வாறே அவர் துணிக்கடையில் நிரந்தர கணக்கு எண் (PAN) மற்றும் முகவரி ஏதுமில்லாமல் துணி வாங்கினால், இது உள்மாநில விநியோகமாகும். இதற்கு சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.

பல்வேறு மாநிலங்களில் வியாபாரம் செய்யும் போது அதாவது திருச்சியை சேர்ந்த வணிகர் குஜராத்திற்கும் மஹாராஷ்டிராவிற்கும் விநியோகம் செய்தால் அம்மாநிலங்களிலும் பதிவு பெற வேண்டுமா?

பல்வேறு மாநிலங்களில் விநியோகம் செய்யும் போது அம்மாநிலங்களிள் பதிவு செய்ய வேண்டியதில்லை. மேலும் அங்கு அவருக்கு ஏதேனும் கிளைகள் இருந்தால், கிளைகளுக்கு விநியோகம் செய்யும்போது பதிவு செய்வது அவசியமாகிறது.

கூலி உற்பத்தியாளர்களுக்கு (Job Work) பொருட்கள் கூடுதல் வேலைப்பாடுகளுக்காக அனுப்பினால் எத்தனை நாட்களுக்குள் திரும்ப பெற வேண்டும்?

கூலி உற்பத்தியாளர்களுக்கு பொருட்களை அனுப்பும்போது 1 வருட காலத்திற்குள் (மூலதன பொருட்களாக இருந்தால் 3 வருடத்திற்குள்) திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் அதுவும் விநியோகமாக கருதப்பட்டு ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x