Published : 02 Sep 2014 12:00 AM
Last Updated : 02 Sep 2014 12:00 AM

தவிர்க்க வேண்டிய தவறுகள்

நாம் எல்லோரும் டீல்கள் போடுகிறோம். இவை எல்லாவற்றிலுமே நாம் ஜெயிக்கமுடியாது. நடத்தும் பேச்சு வார்த்தைகளில், பாதியாவது உங்களுக்கு சாதகமாக, சுமுகமாக முடிகின்றனவா? டீல்களை முடிப்பதில் நீங்கள் கெட்டிக்காரர். பாதிக்கும் அதிகமான உங்கள் பேச்சு வார்த்தைகள் முறிந்து போகின்றனவா, இழுபறியாகின்றனவா அல்லது நீங்கள் உங்கள் பெரும்பாலான கோரிக்கைகளை விட்டுக்கொடுக்க நேர்கிறதா? அப்படியானால், உங்கள் அணுகுமுறை தவறு என்பது நிச்சயம்.

நாம் செய்யும் தவறுகள் பலவகை.

1. உங்களுடைய திறமை, அதிகாரம் ஆகியவற்றை மிகைப்படுத்தி நினைத்தல்

நீங்கள் ஒரு கம்பெனி முதலாளி அல்லது உயர் அதிகாரி என்று வைத்துக்கொள்வோம். ஒரு இளைஞர் வேலைக்கான இன்டர்வியூவுக்கு வருகிறார். அவர் வருங்காலம் உங்களை நம்பியிருக்கிறது, நம் விருப்பத்துக்கு அவர் சம்பளத்தை நிச்சயிக்கலாம் என்று நீங்கள் கணக்குப் போடுவீர்கள். அவரிடம் ஏதேனும் தனித்துவத் திறமைகள் இருந்தால், உங்கள் அணுகுமுறை தோற்றுப்போகும். தன் எதிர்பார்ப்புகளை அவர் சொல்லுவார். அவர் சேவை உங்கள் நிறுவனத்துக்குத் தேவை என்றால், நீங்கள்தான் கீழ் இறங்கி வரவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

2. உங்களுடைய திறமை, அதிகாரம் ஆகியவற்றைத் தாழ்வாக நினைத்தல்

மேலே சொன்ன நிகழ்ச்சியைத் தலைகீழாக்கிப் பாருங்கள். ஏராளமானவர்களுக்குத் தம் பலங்கள் தெரிவதில்லை: தெரிந்தவர்களுக்கும், என்னை வேலைக்கு எடுத்தால் ‘உங்கள்’ கம்பெனி வளர்ச்சிக்கு என் திறமைகள் எப்படி உதவும் என்று தங்களை மார்க்கெட் பண்ணத் தெரிவதில்லை, ஆழமாக, அழுத்தமாகக் கம்யூனிகேட் பண்ணத் தெரிவதில்லை.

3. அடுத்தவர் கண்ணோட்டத்தில் பிரச்சினைகளை அணுகாமை

டீல்களில் நமக்கு என்ன லாபம், என்ன நஷ்டம் என்று மட்டுமே நினைக்கிறோம். மறுதரப்பின் பிரச்சினைகள் என்ன, நம் கோரிக்கைகளுக்கு இணங்கினால், அவர்களுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும் என்று சிந்திக்கவேண்டும். அப்போதுதான், பேச்சு வார்த்தைகள் முன்னோக்கி நகரும்.

4. எதிர்த் தரப்பினரைக்கண்டு பயப்படுதல்

உங்கள் குடியிருப்பில் ஒரு அரசு அதிகாரி நாய் வளர்க்கிறார். இரவு நேரங்களில் நாய் குரைக்கிறது, உங்கள் வீட்டார் தூக்கத்தைக் கலைக்கிறது. அவருடைய பதவி, அதிகாரம் ஆகியவற்றைக்கண்டு பயப்படுகிறோம். அவரோடு பேசத் தயங்குகிறோம், இந்தப் பய உணர்வுகளை வென்று அவரோடு பேசாவிட்டால், உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் ஒவ்வொரு இரவும் சிவ ராத்திரிதான்!

5. எதிர்த் தரப்பினருக்கு

மதிப்புத் தராமைஎதிர்த் தரப்பினர், உங்களைவிடப் பணத்தில், பதவியில், வாழ்க்கைத் தரத்தில் தாழந்தவர்களாக இருக்கலாம். அவர்களைச் சரிசமமாக நடத்தினால்தான், பேச்சு வார்த்தைகளின் முடிவுகளை ஏற்பார்கள், அவற்றுக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள். இல்லாவிட்டால், சம்மதிப்பதுபோல் நடித்துவிட்டு, காற்று அவர்கள் பக்கமாக அடிக்கும் வேளைகளில் உங்களை மிரட்டுவார்கள்.

6. அனுபவச் சுமைகள்

நீங்கள் செல்போன் கடையில் சேல்ஸ்மேன். ஒரு கஸ்டமர் அடிக்கடி வருவார். எவ்வளவு விலை குறைக்கமுடியும் என்று அடிமாட்டு பேரம் பேசுவார். ஆனால், அவர் உங்கள் கடையில் செல்போன் வாங்கியதே கிடையாது.

மீண்டும் வரும்போது “இவர் எங்கே வாங்கப்போறார்?” என்று பழைய அனுபவங்கள் உங்களுக்குச் சொல்லும். இந்த மனப்பாங்கோடு அவரிடம் நீங்கள் பேசத் தொடங்கினால், வியாபாரம் நடக்கவே நடக்காது. இன்று வாங்குவார் என்னும் நம்பிக்கையோடு அவருக்கு வரவேற்பு தாருங்கள்.

7. டீல்கள் யுத்தங்களல்ல

பக்கத்து வீட்டில் புதிதாகக் குடித்தனம் வந்திருக்கிறார்கள். அவர் வீட்டு வேலைக்காரி உங்கள் வீட்டின் முன்னால் குப்பையைக் கொட்டிவிட்டார். பக்கத்து வீட்டுக்காரரிடம் பேச வேண்டும். சாதாரணமாக என்ன செய்கிறோம்? அவரை “ஒருவழி” பண்ணிவிட வேண்டும் என்று நம்மைத் தயார்படுத்திக்கொண்டு போவோம். இப்படிப் போனால், சண்டை நிச்சயம்.

8. பிரச்சினைகளை எளிமைப்படுத்துதல்

உங்கள் ஆபீசில் பலர் பஸ்ஸிலும், டூ வீலர்களிலும் வருகிறார்கள். பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் ஏறுகிறது. உங்களுக்குப் பெட்ரோல் செலவு கம்பெனி தருகிறார்கள். எனவே, விலை ஏற்றம் உங்களுக்குப் பிரச்சினையே இல்லை. ஊழியர்களுக்கு இந்தச் சுமை தாங்கமுடியாததாக இருக்கலாம். இதனால், அவர்கள் அதிக அலவன்ஸ் கேட்கலாம். அவர்கள் கோரிக்கைகளை உதறித் தள்ளாமல், திறந்த மனத்தோடு கேளுங்கள்.

9. அடுத்தவர் மெளனம்

“மெளனம் சம்மதம்.” இது பழமொழி. பேச்சு வார்த்தைகளுக்கு இது பொருந்தவே பொருந்தாது. பிரச்சினைக்கு நீங்கள் ஒரு தீர்வை முன்வைக்கிறீர்கள். எதிராளி “சம்மதம்” என்று வெளிப்படையாகச் சொன்னால்தான், அதை அவர் ஏற்றுக்கொண்டால்தான், அவர் அதை ஒப்புக்கொண்டார் என்று அர்த்தம். இல்லாவிட்டால், “உங்கள் மெளனம் எங்களுக்குப் புரியவில்லை. எங்கள் ஆலோசனையை ஏற்கிறீர்களா இல்லையா என்று தெளிவாகச் சொல்லுங்கள்” என்று கேட்டுவிடுங்கள். இந்த உறுதியான பதில் கிடைக்கும்வரை, பேச்சு வார்த்தை முழுமை பெறாது, தொடரும் என்று அவர்களுக்குத் தெளிவாக்குங்கள்.10. நம் மிகப் பெரும் பலவீனங்கள்

ஹீரோ வில்லனை எதிர்க்கிறார், அவனுடைய ஊழல்களை அம்பலமாக்குகிறார். வில்லனின் ரகசியங்கள் அடங்கிய சி.டி(CD) அவர் கைவசம். ஹீரோவுக்கு அவன் தங்கைமேல் உயிர். வில்லன் தங்கையைக் கடத்துகிறான். “சி.டி கொண்டு வா, தங்கையைக் கூட்டிக்கொண்டு போ” என்று ஹீரோவை வரச் சொல்கிறான். ஹீரோவுக்குத் தங்கைபோல், நம் எல்லோருக்கும் “பெரும் பலவீனங்கள்” உண்டு. நம் பலவீனங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று பலர் தயாராக இருப்பதேயில்லை.

11. ஒத்திகைகள்

மிக முக்கியமான பேச்சு வார்த்தைகளுக்குப் போகிறீர்களா? உங்கள் கருத்துகளைத் தெளிவாக, உறுதியாக முன்வைக்க வேண்டும். இதற்கு எல்லோரும் சொல்லும் வழி – ஒத்திகை பார்த்தல். நல்ல வழிதான், ஆனால், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. பேச்சு வார்த்தைகள் ஜெயிக்கவேண்டுமானால், இரு தரப்பிலும், இயற்கையாக, தன்னிசையாகக் கருத்துக்கள் வெளிப்படவேண்டும். ஒத்திகை செயற்கைத்தனத்தை, எந்திரத்தனத்தைக் கொண்டு வரும், பரஸ்பர நம்பிக்கை ஏற்படுவதைத் தடுக்கும். நீங்கள் ஒத்திகை பார்ப்பவராக இருந்தால், இத்தகைய சூழ்நிலை ஏற்படாமல் கவனமாக இருங்கள்.

12. நானா, நாங்களா?

பேச்சு வார்த்தைகளில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் சொற்கள், “நான்” மற்றும் “எனக்கு.” நான் சொல்கிறேன், எனக்கு சம்மதம் என்று நம் ஈகோ நம்மைப் பேசவைக்கிறது. பிரச்சினையில், உங்கள் தரப்பில் முழு முடிவெடுக்கும் அதிகாரம் உங்களுக்கு இருந்தால் மட்டுமே, “நான்” என்று பேசுங்கள். இல்லாவிட்டால், “நாங்கள்” தான். உங்கள் பேச்சு வார்த்தைக் குழுவினரின் அர்ப்பணிப்பை அதிகமாக்கவும், “நாங்கள்” உதவும்.

13. திக்குத் தெரியாத கப்பல்

எந்தத் துறைமுகத்தை நோக்கிப் பயணிக்கிறோம் என்று மாலுமிக்குத் தெரியும். பேச்சு வார்த்தைகளுக்குப் போகும்போது, நாம் தெளிவாக, உறுதியாக இருக்கவேண்டிய சமாச்சாரங்கள்:

“பிரச்சினை என்ன?

காரணங்கள் என்ன?

எத்தகைய தீர்வுகள் வரலாம்?

எத்தகைய தீர்வுகளை நாம் ஏற்றுக்கொள்ளலாம்?

எத்தகைய தீர்வுகளை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது?

நாம் எந்த அம்சங்களில், எந்த அளவு விட்டுக்கொடுக்கலாம்?

எந்தக் கால அளவுக்குள் தீர்வு காணவேண்டும்? ”

தவறுகளைத் திருத்துவோம். வெற்றி வாய்ப்புகளைப் பெருக்குவோம்!

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x