Published : 22 Feb 2018 01:20 PM
Last Updated : 22 Feb 2018 01:20 PM

ஏர்செல் வாடிக்கையாளர்கள் தவிப்பு: வேறு மொபைல் சேவைக்கு மாறும் வசதியும் கிடைக்காததால் அவதி

ஏர்செல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் அந்நிறுவன வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்தின் சேவைக்கு மாறி வருகின்றனர். ஆனால் அதற்குரிய போர்ட்டபிளிட்டி வசதியும் சரியாக கிடைக்காததால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

செல்போன் இணைப்பு சேவையில் முக்கியப் பங்கு வகிக்கும் ஏர்செல் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். குறிப்பாக, தமிழகத்தில் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக ஏர்செல் இணைப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்கத் தொடங்கின.

கடந்த 2 நாட்களாக பல பகுதிகளில் ஏர்செல் சேவை முற்றிலுமாக முடங்கியது. தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஏர்செல் சேவை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. ஏர்செல் இணைப்புகள் செயலிழந்ததால் பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் சிரமத்துக்குள்ளாகினர்.

டவர் பிரச்சினை காரணமாக செல்போன் இணைப்புகள் கிடைப்பதில் பிரச்சினை இருப்பதாகவும், விரைவில் இந்தப் பிரச்சினை சரியாகிவிடும் எனவும் ஏர்செல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பிரச்சினை தீருவதற்கு பதில் அதிகரித்துள்ளது. சென்னை உட்பட பல்வேறு நகரங்களிலும் இன்று 90 சதவீத அளவிற்கு சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏர்செல் வாடிக்கையாளர்கள் எஸ்எம்எஸ் அனுப்பி வேறு நிறுவன மொபைல் சேவைக்கு மாற முயன்று வருகின்றனர். இதன்படி தங்கள் நெட்வொர்க் செட்டிங்கில் சென்று விரும்பிய நெட்வொர்க்கை தேர்வு செய்து, port என டைப் செய்து 1900 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம்.

அதன் மூலம் கிடைக்கும் போர்டபிளிட்டி எண் கிடைக்கும். 15 நாட்களுக்கும் வேறு சேவைக்கு மாறுலாம். எனினும் இந்த சேவையை பெற முடியாமல் ஏர்செல் வாடிக்கையாளர்கள் தவிக்கின்றனர். போர்டபிளிட்டி விருப்ப எஸ்எம்எஸ் செல்லவில்லை எனவும் புகார் தெரிவிக்கின்றனர். தங்கள் அவசதி குறித்து சமூக வலைதளங்களிலும் ஏர்செல் வாடிக்கையாளர்கள் கவலையை பகிர்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய பிரிவு தலைவர் சங்கர நாராயணன் கூறுகையில் ‘‘எங்களுக்கு டவர் வசதி செய்து தந்த ஒரு நிறுவனத்துடன் சட்டரீதியான பிரச்சினை நிலுவையில் உள்ளது. இதனால் நெட்வொர்க் கிடைக்காத சூழல் உள்ளது. எங்கள் வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனத்தின் சேவைக்கு மாற விரும்பினால் நாங்கள் அதனை தடுக்கவில்லை. அதற்கு நாங்கள் அனுமதிக்கிறோம். இதுவரை 3 லட்சம் வாடிக்கையாளர்கள் சேவை மாறும் வசதி கோரி விண்ணப்பித்துள்ளனர்.

ஆனால் அதிகமான வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் வேறு சேவைக்கு மாற விரும்பி போர்டபிளிட்டி வசதியை பெற முயற்சி செய்கின்றனர். எனவே பிரச்சினை ஏற்பட்டுள்ளது விரைவில் பிரச்சினை தீரும். வாடிக்கையாளர்கள் விரும்பிய நெட்வொர்க் போர்டபிளிட்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனக்கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x