Published : 25 Mar 2018 11:10 AM
Last Updated : 25 Mar 2018 11:10 AM

வேலையிழப்பு அச்சுறுத்தல் அனாவசியம்: நவீன தொழில்நுட்பங்களுக்கு இந்தியா மாற வேண்டும் - ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் வலியுறுத்தல்

நவீன தொழில் நுட்பங்களை உடனடியாக பின்பற்றுவதில் இந்தியா தயக்கம் காட்டக் கூடாது. வேலையிழப்பு உருவாகும் என்ற அச்சம் அனாவசியம். அதை பொருட்படுத்தாமல் நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றும்போதுதான் சர்வதேச அளவில் முன்னணி நாடாக இந்தியா வளர முடியும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறினார்.

கேரள மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த சர்வதேச டிஜிட்டல் மாநாட்டில் பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது: நவீன டிஜிட்டல் மாற்றங்களை இந்தியா பின்பற்ற வேண்டும். நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றுவதால் வேலையிழப்பு ஏற்படும் என்ற அனாவசிய அச்சுறுத்தல் குறித்து பயப்படத் தேவையில்லை. வருவாய் இழப்பு ஏற்படும், மனிதர்களுக்கு மாற்றாக இயந்திரங்கள் வந்துவிடும் என்பன போன்ற அச்சங்கள் தேவையற்றவை.

தொழில்நுட்பங்களைக் கைக்கொள்வதில் மிகப் பெரும் தடையாக இருப்பதே அது சார்ந்த தவறான பிரசாரங்கள்தான். மனிதர்களுக்கு மாற்றாக இயந்திரங்கள் உருவாகிவிடும் என்ற அச்சம் தொழில்புரட்சி உருவான காலத்திலிருந்தே நிலவி வருகிறது. ஆனால் அது ஒரு போதும் நடைபெறவில்லை.

தொழில்புரட்சி ஏற்பட்டு நூறாண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால் இன்னமும் வேலை வாய்ப்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது. மக்களும் இந்த சமூகமும் ஏற்றுக் கொள்ளும் விஷயங்களை ஒரு போதும் இயந்திரத்தால் செய்ய முடியாது. தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்பும் உருவாகும். ஒரு துறையை மறு சீரமைப்பு செய்வது மற்றும் நவீன தொழில்நுட்பங்களுக்கு மாறும்போது வழக்கமான வேலை வாய்ப்புகள் வேறு வடிவில் உருவாகும்.

தொழில்மயமான நாடுகளில் வழக்கமான வேலை வாய்ப்புகள் பலவும் மறைந்து போய்விட்டன. ஆனால் நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப வேலை வாய்ப்புகள் உருவாகிவிட்டன. இப்போது பரவலாக பேசப்படும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), ரோபோ, இயந்திரம் கற்றல் உள்ளிட்டவை அனைத்தும் கால ஓட்டத்துக்கேற்ப மாறுபடுபவை. இத்தகைய மாற்றம் வெறும் தொழில் நுட்ப பணியாளர்கள் வியர்வை சிந்தும் பணிச் சூழலிலிருந்து கம்ப்யூட்டர் மூலம் இயக்கக்கூடிய வகையிலான மாற்றத்தை ஏற்படுத்தும்.

அடுத்த அச்சம் எங்கிருந்து வருமானம் கிடைக்கும் என்பதாகும். எப்படியிருந்தாலும் அனைவருக்குமான குறைந்தபட்ச ஊதியம் நிச்சயம் கிடைக்கும்.

அரசு அதிக அளவில் ஸ்டார்ட்அப் உருவாகுவதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும். அதற்குரிய கொள்கைகளை வகுப்பதன் மூலமும், எளிமைப்படுத்துவதன் மூலமும், நிதி கிடைப்பதை எளிமையாக்கும் வழிகளை அரசு செய்தால் வேலை வாய்ப்பு உருவாகும். அடுத்த கட்டமாக கல்வி மற்றும் திறன் உருவாக்கத்தில் முக்கிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

அதேபோல கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். லாஜிஸ்டிக்ஸ் துறையை நவீனமயமாக்குவதன் மூலம் பெருமளவிலான முதலீடுகளை ஈர்க்க முடியும்.

மேற்கத்திய நாடுகள் பலவும் தற்போது தற்காப்பு கொள்கையை அமல்படுத்தி வரும் நிலையில் ஏற்றுமதி வாய்ப்புகள் குறையும். அத்தகைய சூழலில் வேலை வாய்ப்புகள் பறி போனாலும் அவற்றை நவீன தொழில்நுட்பங்கள் ஈடுகட்டும்.

நமது சமூகம் மனித முகங்களையும், உரையாடல்களையும் அதிகம் நேசிக்கும். இதனால் ரோபோக்களால் மிகப் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்துவிட முடியாது என்றார் ராஜன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x