Published : 04 Mar 2018 12:46 PM
Last Updated : 04 Mar 2018 12:46 PM

பொருளாதார வளர்ச்சியின் மூலமே வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்: ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரங்கராஜன் கருத்து

பொருளாதார வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் வெவ்வேறானவை அல்ல. பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தால் வேலைவாய்ப்புகளும் பெருகும், அதற்கு புதிய முதலீடுகளைப் உருவாக்க வேண்டுமென ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் எம்எம்ஏ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் `இந்தியப் பொருளாதாரம் எங்கிருந்து இங்கு’ என்ற தலைப்பில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

1991-ல் வரவு செலவு சமநிலையின்மையால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இது இந்தியாவின் பொருளாதார அடிப்படைக் கொள்கைகளை மாற்றியமைக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. உற்பத்தி மற்றும் திறனை அதிகரிப்பதற்காக நிறுவனங்களுக்கிடையேயான போட்டிகள் ஊக்குவிக்கப்பட்டன. இந்திய நிறுவனங்கள் உலக அளவில் போட்டியிடும் வகையில் கொள்கைகள் உருவாக்கப்பட்டன. தனியாருக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. இதற்குப் பொருள் அரசின் பணிகள் குறைந்துவிட்டது என்பதல்ல. உற்பத்தியாளர், சேவை வழங்குநர் என்பதிலிருந்து முறைப்படுத்துனராக அரசாங்கம் மாறியது. கல்வி மற்றும் மருத்துவம் போன்ற முதன்மைச் சேவைகளை வழங்குவது அரசின் கடமையாக இருந்தது. என்ன உற்பத்தி செய்யவேண்டும், எவ்வளவு உற்பத்தி செய்யவேண்டும், எங்கே உற்பத்தி செய்யவேண்டும் போன்றவற்றிலுள்ள அரசின் தலையீடுகள் குறைக்கப்பட்டன. இந்தியப் பொருளாதாரம் உலகப் பொருளாதாரங்களுடன் ஒன்றிணைக்கப்பட்டது.

இந்தியா சுதந்திரம் அடைந்த முதல் முப்பது ஆண்டுகளில் பொருளாதாரம் ஆண்டுக்கு 3.5 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டது. அப்போது இந்திய மக்கள்தொகை 2.2 சதவீதம் என்ற அளவில் உயர்ந்து வந்தது. தனிநபர் வருமானம் வெறும் 1.2 சதவீத அளவுக்கு மட்டுமே வளர்ந்து வந்தது. 1980-களில் வளர்ச்சி 5 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தது. தாராளமயமாதலுக்குப் பிறகு 6.6 சதவீத பொருளாதார வளர்ச்சி இருந்தது. 2005-2006, 2007-2008 ஆண்டுகளின் சராசரி பொருளாதார வளர்ச்சி 9.4 சதவீதம் என்ற அளவில் இருந்தது. அடுத்த மூன்று ஆண்டுகளையும் சேர்த்துக்கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கு கணக்கிட்டால் இந்தியாவின் சராசரி பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்திலிருந்து 9 சதவீதத்துக்குள் இருக்கும்.

மற்ற உலகப் பொருளாதாரங்களுடன் ஒப்பிடும்போது இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் அது நமது தேவைகளுக்கு போதுமானதாக இல்லை. பொருளாதார ஸ்திரத்தன்மை என்பது பல்வேறு காரணிகளைச் சார்ந்தது. அவற்றுள் நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் ஒன்று. வெளிப்புறத் துறைகளில் இந்தியா மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தாராளமயமாதலால் விளைந்த பயன்களில் குறிப்பிடத்தக்கது இது. கச்சா எண்ணெய் விலை குறைவால் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறைவாக இருந்தது. ஆனால் இப்பொழுது கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் இந்த ஆண்டு நடப்புக் கணக்கு பற்றாக்குறை சற்று அதிகரித்துள்ளது. இது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். அடுத்து நாம் கவனம் செலுத்த வேண்டிய பகுதி பணவீக்கம். நாணயக் கொள்கையின் புதிய மாற்றங்களுக்கு பிறகு பணவீக்கம் குறைந்து வருகிறது. நிதிப் பற்றாக்குறை குறித்தும் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஜிடிபியின் 3 சதவீதத்தை நிதிப்பற்றாகுறையாக அறிவிக்கவேண்டுமென எஃப்ஆர்பிஎம் வரையறுத்துள்ள நிலையில் தொடர்ந்து அதைப் பின்பற்றாமல் இருப்பது நம்பகத் தன்மையைக் குறைக்கும்.

வறுமை குறித்த கேள்விகள் எழுகின்றன. நம்முடைய சமூகநலத் திட்டங்கள் போதுமான அளவுக்கு இல்லையென்பது உண்மைதான். 188 நாடுகள் கணக்கில் கொள்ளப்பட்ட மனிதவள மேம்பாட்டு குறியீட்டில் இந்தியா 131வது இடத்தில் இருக்கிறது. நம்முடைய தனிநபர் ஆண்டு வருமானம் போதுமானதாக இல்லை. எனினும் பல நாடுகளை விட இங்கு தனிநபர் ஆண்டு வருமானம் சிறப்பாக இருப்பதையும் மறுக்கமுடியாது. கல்வி மற்றும் மருத்துவத்தில் நாம் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறோம். சராசரி வாழ்நாள் அதிகரித்திருக்கிறது. 1947-ல் 33 ஆண்டுகளாக இருந்தது இன்று 65 ஆண்டுகளாக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் மக்கள் அளிக்கும் வருமான விபரங்கள் சந்தேகத்துக்கு உரியவையாக இருக்கின்றன. வறுமை விகிதம் குறைந்துள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன.

நிலையான வளர்ச்சி என்பது மிக முக்கியமானது. பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு சீராக அதிகரிப்பது மிகவும் முக்கியமானது. சமூக முன்னேற்ற பணிகள் பொருளாதார வளர்ச்சியை சார்ந்துதான் இருக்கின்றன. பொருளாதார வளர்ச்சி என்பது முதலீட்டையும் அதிலிருந்து கிடைக்கும் உற்பத்தியையும் சார்ந்தது. 2011-12-ல் இந்தியாவின் முதலீட்டு விகிதம் ஜிடிபியில் 33.5 சதவீதம் இருந்தது. ஆனால் 2017-18-ல் முதலீட்டு விகிதத்தில் கடுமையான சரிவு காணப்படுகிறது. முதலீட்டுக்கான சூழல்களை நாம் உருவாக்கவேண்டும். சேமிப்பு விகிதத்தை உயர்த்துவதன் மூலம் முதலீட்டை அதிகரிக்கலாம். வங்கி அமைப்பில் உள்ள சிக்கல்களும் இதற்கு ஒரு காரணம்.வாராக்கடன்கள் குறித்து வங்கிகள் கவனம் செலுத்தவேண்டும்.

அமெரிக்கா போன்ற நாடுகளின் ஜிடிபிக்கு விவசாயத்துறை 3லிருந்து 5 சதவீதத்துக்குள்தான் பங்காற்றுகிறது. ஆனால் இந்தியாவில் அப்படியல்ல. இந்த நிலை மாறவேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு இந்த நிலை மாறுவது மிகவும் முக்கியமானதாகும். விவசாயப் பிரச்சினைகள் குறித்து நாம் கவனம் செலுத்தவேண்டும். பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தாமல் வேலைவாய்ப்புகளை உருவாக்கமுடியாது. இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. வளர்ச்சி புதிய முதலீடுகளால் ஏற்படும். அதேவேளையில் ஏற்கனவே இருக்கும் முதலீடுகளைத் திறம்படப் பயன்படுத்துவதன் மூலமும் வளர்ச்சியை அடைய முடியும். இதன்மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.

சமீபத்தில் கொண்டுவரப்பட்டிருக்கிற அந்நிய நேரடி முதலீட்டு மாற்றங்கள் மற்றும் ஜிஎஸ்டி போன்றவை முக்கியமானவை. ஜிஎஸ்டி என்பது ஆரம்பத்தில் சில சிக்கல்களை ஏற்படுத்தும். ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட எல்லா நாடுகளிலும் ஆரம்பத்தில் சில பிரச்சினைகள் எழுந்திருக்கிறது. சமீபத்தில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கிற பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால் அதை செயல்படுத்துவது எப்படி என்பது குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x