Published : 17 Mar 2018 08:49 AM
Last Updated : 17 Mar 2018 08:49 AM

தொழில் ரகசியம்: நீங்கள் அஷ்டாவதானியா? உங்களுக்குத்தான் இது..

செ

ல்ஃபோனில் பேசிக்கொண்டே லேண்ட்லைன் ரிசீவரையும் எடுத்து இரண்டு காதுகளிலும் இரண்டு ஃபோன்களை வைத்து பேசி யாரிடம் எதை சொல்கிறோம் என்று தெரியாமல் முழிப்பவரா நீங்கள்? தலை சுற்றும் அளவிற்கு வேலை இருக்க எதை முதலில் செய்வது என்று குழம்பி எந்த வேலையையும் முழவதுமாக, முறையாக செய்யாமல் தலையை பிய்த்துக்கொண்டு பைத்தியம் பிடித்தது போல் பாயை பிராண்டுபவரா நீங்கள்?

ஒன்றுக்கு ஒன்பது விஷயங்களை ஒரே நேரத்தில் யோசித்துக்கொண்டே லிஃப்ட் பட்டனை அமுக்கி அது வரும் வரை பொறுமையில்லாமல் மாடிப்படி ஏறி லிஃப்ட் சத்தம் கேட்டு கீழே ஓடி வந்து அதற்குள் லிஃப்ட் மூடி மேலே செல்ல மீண்டும் மாடிப்படி ஏறுவதா லிஃப்ட்டிற்கு காத்திருப்பதா என்று குழம்புவரா நீங்கள்?

பாவி பய புள்ள நம்ம புலம்பலை புட்டு புட்டு வைக்கிறானேன்னு பதறாதீர்கள். அடியேனும் அவ்வண்ணமே. நமக்கு ஒரு குட் நியூஸ். இது வியாதியல்ல, அதனால் பயப்படத் தேவையில்லை. இது ஒரு வகை நரம்பியல் நிகழ்வு (Neurological Phenomenon) என்கிறார் `எட்வர்ட் ஹேலோவெல்’ என்கிற மனநல மருத்துவர். வியாதி இல்லை என்றாலும் நெருக்கி தள்ளும் பிசினஸ் உலகில் கம்பெனிகளில் தொற்றுநோயாக பரவி வருகிறது. பணிச் சூழல் சுனாமியில் சிக்கி சுழட்டியடியடிக்கப்பட்டு மூளை சுமை அதிகமாகி பரபரப்புடன் பைத்தியம் பிடித்தது போல் அல்லாடும் இந்நிலையை `கவனப் பற்றாக்குறை பண்பு’ (Attention Deficit Trait) அதாவது ADT என்கிறார். எளிதில் மனம் திசை திருப்பப்படுவது, பரபரப்பு, பொறுமையின்மை போன்றவை இந்நிலைக்கான அறிகுறிகள். தன் 25 வருட மருத்துவ அனுபவத்தில், ஆராய்ச்சியில் நூற்றுக்கணக்கானவர்களைப் பார்த்து படித்து புரிந்துகொண்டு தான் கண்டதை, கற்றதை ‘ஹாவர்ட் பிசினஸ் ரெவ்யூ’வில் `Overloaded Circuits: Why Smart People Underperform’ என்ற கட்டுரையாக எழுதியிருக்கிறார்.

ADTயால் பாதிக்கப்படுபவர்கள் தாங்கள் செய்யும் பணிகளை ஒழுங்கோடு செயல்பட சிரமப்பட்டு, எதை முதலில் செய்வது எதை கடைசியில் செய்வது என்று புரியாமல் தங்கள் நேரத்தை சரியாக நிர்வகிக்கத் தெரியாமல் மனதில் பீதி பீரிட்டு அடிக்க திறம்பட செயல்பட முடியாமல் ஒருவித குற்ற உணர்வோடு வாழ்பவர்கள் என்கிறார். திறமை வாய்ந்த நிர்வாகிகளையும் சரியாய் பணி செய்ய விடாமல் மோசமான நிர்வாகி என்று அவப்பெயரெடுக்கும் நிலைக்கு தள்ளும் இந்த ADT. இத்தனை படுத்தும் இதை பேசாமல் வியாதிகள் லிஸ்ட்டிலேயே சேர்த்துத் தொலைக்கலாம்!

போக்குவரத்து நெரிசல் போல நவீன வாழ்வின் சாபக்கேடுகளில் ஒன்று ADT. போட்டி பெருகி, உலகமயமான பிசினஸ் சூழல் அழுத்தத்தால் உருவாகும் வேலை பளு, நேரமின்மை, அவசரம், பதற்றம் இத்யாதிகள் பெருகுவதால் மனித மூளை தன்னை முழுவதுமாக ஒரு பணியில் ஐக்கியப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறது. அதற்காக ADT சடாரென்று தோன்றி படாரென்று நம்மை தாக்கும் ரகமில்லை. மெதுவாக நமக்குள் பிறந்து நாளொரு மேனியும் பொழுதுதொரு மென்னியும் பிடித்து வளர்ந்து விஸ்வரூபமெடுத்து கடைசியில் நம்மை பஸ்பமாக்கும் பகாசுரன். முதலில் சின்ன சின்ன பிரச்சினைகளை ஏற்படுத்தி பிறகு மிதமான அவசர நிலை பிரகடனம் செய்து கடைசியில் பைத்தியம் பிடிக்கும் ரேஞ்சிற்கு கொண்டு செல்லும். இதுவரை சட்டை பேண்டை கிழித்து ஆபிசில் இருப்போரை அடிக்கும் அளவிற்கு ADT இட்டுச் சென்றதாக தகவல் இல்லை. பிசினஸ் போகும் போக்கைப் பார்த்தால் அப்படி கூட விமரிசையாக நடக்கலாம். எதுவும் சொல்வதற்கில்லை!

உலக வரலாற்றில் இப்பொழுதிருக்கும் நெருக்கடி சூழல் போல் மனித மூளைக்கு அத்தனை வேலையும் ஆராய்ந்து முடிவெடுக்க இத்தனை டேட்டாவும் என்றுமே இருந்ததில்லை. காலை எழுந்தவுடன் முதல் காரியமாய் செஃபோனில் வந்திருக்கும் மெசேஜ் பார்த்து, சாப்பிடும் போது வாட்ஸ் அப் செய்திகள் படித்து, குளித்துவிட்டு வரும் கேப்பில் மிஸ்ட் கால் வந்திருக்கிறதா என்று பார்த்து அதுவும் பத்தாதென்று லேப்டாப்பில் மெயில் செக் செய்து, ஐபேட்டில் தகவல் தேடுகிறோம். ஒரு அளவுக்கு மேல் மனித மூளையிடம் டேட்டாவை கொட்டிக் குவித்து ‘ம்ம்ம்ம் மடமடவென்று அலசி ஆராய்ந்து செயல்படுத்து’ என்று சொல்லும்போது அது சாமர்த்தியமாக, கிரியேட்டிவாக செயல்படும் சக்தி குறைந்து தவறுகள் செய்யத் தொடங்குகிறது. தன்னால் முடிந்ததை காட்டிலும் அதிகமாக வேலை பளு தரப்படும் போதும் தன் திறமைக்கு அப்பாற்பட்ட பணிகள் தரப்படும் போதும் மன அழுத்தம் அதிகரிக்கிறது. மூளைக்குள் லகலகலகலக என்று லடாய் நடக்கிறது.

மூளையில் ஃப்ரண்டல் லோப்ஸ் என்ற பகுதி தான் முடிவெடுப்பது, திட்டமிடுவது, நேர நிர்வாகம் போன்ற பணிகளை கட்டுப்படுத்துகிறது. அதன் கீழ் இருக்கும் பகுதி தூக்கம், பசி, மூச்சு, இதய துடிப்பு, பலான மேட்டர் போன்றவற்றை கவனிக்கும் டிபார்ட்மெண்ட். நாம் வாழ, பிழைக்க தேவையானதை கவனிக்கும் பகுதி இது. எல்லாம் நார்மலாக இருக்கும் வரை பிரச்சினையில்லை. ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளைக் கவனித்து, மூன்று விஷயங்களைப் சிந்தித்துக்கொண்டே நான்கு பேரோடு விவாதிக்கும் போது மூளை டென்ஷனாகி சூடேறி பற்றி எரிந்து கடைசியில் பொறுக்க முடியாமல் பிழைத்தால் போதும் என்று ‘சர்வைவல் மோடு’க்கு மாறுகிறது. மனதை பயம் ஆட்கொள்கிறது. காப்பாற்றுங்கள் என்று டிஸ்ட்ரஸ் சிக்னல் தர துவங்குகிறது. ஃப்ரண்டல் லோப்ஸ் தன் கட்டுப்பாட்டை மெல்ல இழக்க மூளையின் மற்ற பகுதிகளுக்கும் நெருப்பு பரவுகிறது. இத்தனை நடக்கும் போது உடம்பு தன் பங்கிற்கு பயந்து `க்ரைசிஸ் மோடு’க்கு மாற சர்வமும் ஆப்ஃபாகி சாந்தமாய் பணி செய்யும் பாங்கை மூளை, உடம்பு, மனம் அனைத்தும் மொத்தமாய் இழக்கின்றன. அப்புறம் என்ன, சர்வம் கந்தர்வகோல களோபரம்தான். பதற்றம், பயம், பைத்தியம், பாய் பிராண்டல், சட்டை பேண்ட் கிழிதல் இன்ன பிற!

ஏதோ கேன்சர், ட்யூமர் ரேஞ்சிற்கு பயமுறுத்துகிறேன் என்று பயப்படாதீர்கள். ADT உங்களையும் உங்கள் கம்பெனி பணியாளர்களையும் பீடிக்காமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகளையும் எட்வர்ட்டே விளக்குகிறார். முதல் காரியமாக ADT என்ற ஒன்று இருக்கிறது என்று உணர்ந்தாலே எதேஷ்டம். அடுத்து, மனித மூளை செவ்வனே பணி செய்ய அதற்கேற்ற தகுந்த சூழலை உருவாக்குவது அவசியம். ஆபீஸ் என்றால் டென்ஷன் இருக்கத்தான் செய்யும். ஆபீசில் பயமில்லாத பாசிடிவான சூழலை உருவாக்குவது உசிதம். மனித சங்காத்தமே இல்லாமல் நான்கு சுவர்களுக்கு அமர்ந்து வேலை செய்தால் கவனம் சிதறாது என்று சிலர் நினைக்கின்றனர். அங்குதான் ADT சுயம்புவாய் எழுந்தருளி தடியெடுத்து தாண்டவமாடி தாக்கும். தனியாக ரூமில் வேலை செய்ய நேர்ந்தாலும் நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது வெளியே வந்து மனித முகங்களைப் பார்த்து பேசி, சிரித்து பிறகு ரூமிற்குள் வனவாசம் போனால் ADT பிசாசு அண்டாமல் தடுக்கலாம்.

ராப்பகலா உழைக்கிறேன் என்று இனியும் பெருமையாக பீற்றீக் கொள்ளாதீர்கள். தூக்கமின்மை இல்லாத மனிதனைப் பார்த்தால் ADTக்கு கொள்ளைப் பிரியம். அவர்கள் காலைப் பிடித்து மடியில் அமர்ந்து தோளில் சாய்ந்து பிறகு தலையில் ஏறி அமர்ந்து சப்தநாடியையும் சப்ஜாடாய் அரசாளும். வரவில்லையென்றாலும் வற்புறுத்தி வரவழைத்து வக்கனையாய் தூங்குங்கள். நல்ல தூக்கம் எத்தனை நேரம் என்று கேட்பவர்களுக்கு குத்துமதிப்பாய் ஒன்று சொல்லலாம். அலாரம் வைத்து தான் எழ முடியும் என்ற நிலை இருந்தால் நீங்கள் சரியாய் தூங்குவதில்லை என்று அர்த்தம்! சாப்பாட்டு விஷயத்திலும் கவனம் தேவை. பழங்கள், தானியங்கள், காய்கறிகளை உடம்பில் சேர்க்கவேண்டும். புரோடீன் முக்கியம். ஐயே, இதையெல்லாம் எவன் தின்பான் என்று ஒதுக்குபவர்களை ADT ஆசையோடு ஆரத்தழுவி மொத்தமாய் தின்று ஏப்பம் விடும், பரவாயில்லையா!

சதா சேரில் அமர்ந்து, கம்ப்யூட்டரை கட்டிக்கொண்டு அழுதால் மூளைக்கு ரத்தம் செல்வது குறையும். புத்தி கூர்மை மழுங்கும். உடற்பயிற்சி கட்டாயம் தேவை. அப்படி செய்யும் போது மூளைக்கு மிகவும் பிடித்த எண்டார்ஃபின்ஸ், செரடோனின், டோபோமைன், எபிநெஃப்ரின் போன்ற ரசாயனங்களை உடம்பு தயாரித்து `ஈ வே பில்’ இல்லாமல் அனுப்பும். அதற்காக அதிகாலை எழுந்து பீச்சு இளைக்கும் அளவிற்கு ஜாகிங் செல்லவேண்டும் என்று அவசியமில்லை. உங்கள் சேரிலேயே சமாதி கட்டியது போல் அமர்ந்திராமல் ஆபீஸிற்குளேயே அங்கும் இங்கும் நடந்து செல்வது, மாடிப்படி ஏறி இறங்குவது போன்ற சின்ன சின்ன உடற்பயிற்சிகளை செய்தால் கூட போதும். இது போன்ற சின்ன சின்ன பிசிகல் ஆக்டிவிடி நம் மூளை ரீசெட் பட்டனை அழுத்தும்.

தினமும் கொஞ்ச நேரமாவது ஈமெயில், அப்பாயிண்ட்மெண்ட் என்று எதுவும் இல்லாமல் சிந்திக்கும் நேரம் என்று கொஞ்சம் ஒதுக்கினால் மொத்தமாய் மூளைக்கும் உங்கள் மிச்சமிருக்கும் ஆயுளுக்கும் நல்லது. பிடிக்குமென்றால் இசை கேளுங்கள். தினம் கொஞ்ச நேரமாவது இசைஞானி இளையராஜாவுடன் இருங்கள்.

ADT லேசுபட்ட மேட்டர் அல்ல. இனியும் நான் அஷ்டாவதானி என்று எட்டு வேலைகளை இழுத்துச் செய்து கஷ்டாவதானியாகி மொத்தமாய் நஷ்டாவதானியாகாதீர்கள்!

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x