Published : 27 Mar 2019 08:21 PM
Last Updated : 27 Mar 2019 08:21 PM

இந்தியப் பொருளாதாரம் 7% வளர்ச்சியில் செல்கிறதா? - ரகுராம் ராஜன் ஐயம்

போதிய வேலை வாய்ப்புகள் உருவாகாத போது இந்தியப் பொருளாதாரம் 7% வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறது என்று கூறுவது எப்படி என்று ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

நேற்று சி.என்.பி.சி. டிவி 18-க்கு ரகுராம் ராஜன் அளித்த பேட்டியில் கூறும்போது,  “அமைச்சர் ஒருவர் 7% வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறோம் எனும்போது வேலை வாய்ப்பு இல்லாமல் போகும் என்று கூறியது எனக்குத் தெரியும். எனவே, ஒரு சாத்தியம் என்னவெனில் நாம் 7% வளர்ச்சியில் செல்லவில்லை என்பதே” என்றார்.

 

ஒரு பொருளாதாரம் 7-8% வளர்ச்சியடைகிறது என்றால் வேலை வாய்ப்புகளை அதிகரிக்காமல் அது அவ்வாறு வளர்ச்சியடைய வாய்ப்பில்லை என்று அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார். பெரிய சமூகப் போராட்டங்கள் இல்லை என்பதே வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதற்கான அறிகுறி என்று அருண் ஜேட்லி தெரிவித்திருந்தார்.

 

மேலும் ரகுராம் ராஜன் கூறியபோது, “இப்போது நாம் தெளிவடைய வேண்டும். புதிய ஜிடிபி எண்களில் என்ன குழப்பம் என்பதைக் கண்டறிய வேண்டும். பாரபட்சமற்ற ஒரு அமைப்பு இதனைக் கூர்ந்து நோக்க வேண்டும், நம்பிக்கை ஏற்பட வேண்டுமெனில் இது ஒரு முக்கியமான அடியெடுப்பாகும்.

 

இந்த பாரபட்சமற்ற அமைப்பும் அதே ஜிடிபி எண்ணிக்கைகளைக் கொடுக்கலாம் ஆனாலும் நமக்கு நம்பிக்கை இன்னும் மேம்படும்” என்கிறார் ரகுராம் ராஜன்.

 

கடந்த நவம்பர் 2018-ல் மத்திய புள்ளி விவரங்கள் அலுவலகம் முந்தைய ஆட்சியின் ஜிடிபி வளர்ச்சியை குறைத்துக் காட்டியது, இதனையடுத்து நடப்பு ஆட்சியின் 4 ஆண்டுகால உயர் பொருளாதார வளர்ச்சி காட்டப்பட்டது என்று சில ஊடகங்கள் முன்பு செய்தி வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

இம்மாதத்தின் தொடக்கத்தில் 108 பொருளாதார நிபுணர்கள் மற்றும் சமூக விஞ்ஞானிகள் அடங்கிய குழுவினர் சமீப காலங்களாக இந்திய புள்ளியியல் துறை மற்றும் இதைச்சார்ந்த நிறுவனங்கள் அரசியல் சார்பாக கட்டுப்படுத்தப்படுகின்றன என்று கூறியிருந்தன.

 

இந்தக் குழு தன் அறிக்கையில், “உண்மையில், அரசின் சாதனைகள் மீது கிஞ்சித்து சந்தேகத்தை ஏற்படுத்தினாலும் அந்தத் தரவுகள் கேள்விக்குரிய முறைகளில் ஒன்று திருத்தப்படுகின்றன அல்லது மறைக்கப்படுகின்றன” என்று குற்றம்சாட்டியிருந்தது.

 

ஆனால் அருண் ஜேட்லி இவர்களை ‘வலுக்கட்டாயமாக எதிர்க்கருத்து கூறுபவர்கள்’ என்று வர்ணித்தார்.

 

இந்நிலையில் தன்னுடைய ‘தேர்ட் பில்லர்’ என்ற புதியபுத்தகத்தை புரமோட் செய்ய அவர் பயணம் மேற்கொண்டு வருகிறார், அவர் என்.டி.டிவியிடம் பேசும்போது, “நமக்கு வலுவான பரவலான வளர்ச்சி அடிப்படை தேவை. இதற்கு என்ன பொருள் எனில் நல்ல வேலை வாய்ப்புகள். பள்ளிகள், விவசாயம், பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியே வரும் பெருந்திரளானோருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் அதாவது அவர்கள் இந்திய வளர்ச்சியை பெருக்கமடையச் செய்யும் வகையில்.

 

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நமக்கு இப்போது போதிய காலம் கழிந்து விட்டது. இப்போது பணமதிப்பு நீக்கம் நமக்கு என்ன செய்தது என்பதைத் திரும்பிப் பார்க்க வேண்டும்.  அது வேலை செய்ததா இல்லையா? அதன் சாதக பாதகங்கள் எந்த ஒரு அரசும் திறமையான நிர்வாகம் செய்ய வேண்டுமெனில் சுய பரிசோதனை செய்வது அவசியம்” என்றார் ரகுராம் ராஜன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x