Last Updated : 07 Mar, 2019 08:12 AM

 

Published : 07 Mar 2019 08:12 AM
Last Updated : 07 Mar 2019 08:12 AM

இந்தியாவில்தான் மிகக் குறைந்த மொபைல் டேட்டா கட்டணம்

உலகிலேயே இந்தியாவில்தான் மிகக் குறைந்த கட்டணத்தில் மொபைல் டேட்டா வசதி அளிக்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

முகேஷ் அம்பானியின் ஜியோ மூலம் ஒரு ஜிபி கட்டணம் ரூ. 18.50-க்கு அதாவது 0.26 டாலர் கட்டணத்தில் அளிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் சராசரியாக ஒரு ஜிபி கட்டணம் ரூ. 600 என்ற அளவில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மொத்தம் 230 நாடுகளில் உள்ள டேட்டா கட்டணம் இதில் ஆய்வு செய்யப்பட்டது. இந்தியாவில் 0.26 டாலருக்கு ஒரு ஜிபி வழங்கப்படுகிறது. இதற்கான கட்டணம் இங்கிலாந்தில் 6.66 டாலராக உள்ளது. இதுவே அமெரிக்காவில் 12.37 டாலராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேட்டா கட்டணத்தில் சர்வதேச சராசரி 8.53 டாலராக உள்ளது.

இளம் தலைமுறையினரை அதிகம் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இங்கு இணையதள பயன்பாடு அதிகரித்து வரும் அதே சூழலில் ஸ்மார்ட்போன் சந்தையும் விரிவடைந்து வருகிறது. இதன்காரணமாகவே இங்கு இணையதள கட்டணம் மிகக் குறைவாக உள்ளதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் 43 கோடி பேர் ஸ்மார்ட்போன்களை உபயோகிக்கின்றனர். சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக எண்ணிக்கையில் ஸ்மார்ட்போன்களை உபயோகிக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது.

2016-ம் ஆண்டு இந்தியாவில் முகேஷ் அம்பானி மிகவும் போட்டிகள் நிறைந்த தொலைத் தொடர்புத் துறையில் 4ஜி அறிமுகத்தோடு களமிறங்கினார். இவரது ஜியோ இணையதள சேவையை 28 கோடி வாடிக்கையாளர்கள் பெறுகின்றனர். உள்ளூர் இலவச அழைப்புகள், மிகக் குறைவான டேட்டா சேவை, ஏறக்குறைய இலவசமாக ஸ்மார்ட்போன் என ஜியோ அறிமுகம் பலரையும் சென்றடைய காரணமாகிவிட்டன. இதன் காரணமாக போட்டி நிறுவனங்களும் கட்டணங்களை குறைக்க வேண்டிய கட்டாய நிலை உருவானது.

ஜியோ அறிமுகம் மூலம் முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்கள் வரிசையில் 6 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தில் உள்ளார்.

61 வயதாகும் அம்பானியின் சொத்து மதிப்பு 2018-ம் ஆண்டில் 4,000 கோடி டாலராக இருந்தது. அப்போது உலகப் பணக்காரர்கள் வரிசையில் 19-வது இடத்தில் இருந்தார். 2019-ல் 5,000 கோடி டாலர் சொத்து மதிப்புடன் 13-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்தியாவின் மிகவும் நம்பகத்தன்மை மிக்க ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தையும் முகேஷ் அம்பானி நிர்வகிக்கிறார்.

230 நாடுகளில் உள்ள 6,313 டேட்டா கட்டண விகிதங்கள் பரிசீலிக்கப்பட்டன. கடந்த ஆண்டு அக்டோபர் 23-ம் தேதி முதல் நவம்பர் 28-ம் தேதி வரையான காலத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவில் மொத்தம் 57 வகையான மொபைல் கட்டண விகிதங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 1 ஜிபி மிகக் குறைந்த கட்டணமான ரூ. 1.75-க்கு கிடைக்கிறது. அதிகபட்சம் ரூ. 99.90 ஆக உள்ளது.

இந்தியாவுக்கு அடுத்தபடியாக கிர்கிஸ்தானில் 1 ஜிபி 0.27 டாலருக்கும், கஜகஸ்தானில் 0.49 டாலருக்கும், உக்ரைனில் 0.51 டாலருக்கும் கிடைக்கிறது. ஜிம்பாப்வேயில் மிக அதிகபட்சமாக ஒரு ஜிபி-க்கு 75.20 டாலர் கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆப்பிரிக்க நாடுகளில் மிகக் குறைந்த கட்டணம் மற்றும் மிக அதிக கட்டணம் ஆகிய இரண்டுமே உள்ளன. ருவாண்டா, சூடான், காங்கோ ஆகிய நாடுகளில் ஒரு டாலருக்கும், கினியா, செயின்ட் ஹெலனா உள்ளிட்ட நாடுகளில் ஒரு ஜிபி-க்கு 50 டாலர் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சீனாவில் ஒரு ஜிபி டேட்டா கட்டணம் 9.89 டாலராகும். இலங்கையில் இது 0.87 டாலராகவும், வங்கதேசத்தில் 0.99 டாலராகவும், பாகிஸ்தானில் 1.85 டாலராகவும் உள்ளது. இந்தியாவில் உள்ள 106 கோடீஸ்வரர்களில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். அஸிம் பிரேம்ஜி 36-வது இடத்தில் உள்ளார். ஹெச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் 82-வது இடத்திலும், ஆர்சிலர் மிட்டல் தலைவர் லட்சுமி மிட்டல் 91-வது இடத்திலும் உள்ளனர். இந்தப் பட்டியலில் குமார் மங்களம் பிர்லா-122, அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி- 167, சுநீல் மிட்டல் 244-வது இடத்திலும் உள்ளனர். பதஞ்சலி இணை நிறுவனர் ஆச்சார்ய பால்கிருஷ்ணா 365-வது இடத்திலும், அஜய் பிரமிள் 436-வது இடத்திலும், கிரண் மஜூம்தார் 617-வது இடத்திலும், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி 962-வது இடத்திலும் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x