Published : 05 Mar 2019 03:40 PM
Last Updated : 05 Mar 2019 03:40 PM

ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்தவுடன் அனைத்து நிறுவனங்களுக்கும் கார்ப்பரேட் வரியை குறைப்பதாக அரசு உறுதி

ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்தவுடன் கார்ப்பரேட் வரியை அனைத்து நிறுவனங்களுக்கும் 25% ஆகக் குறைக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளதாக இந்திய வர்த்தகத் தொழிற்துறை கூட்டமைப்பு (Ficci)மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

 

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்தப் பிறகு வர்த்தகத் தொழிற்துறைக் கூட்டமைப்பின் தலைவர் சந்திப் சோமானி கூறும்போது, வரி விதிப்பு, வேலை வாய்ப்பு, தொழிற்துறை உற்பத்தி அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அருண் ஜேட்லியுடன் ஆலோசித்ததாக தெரிவித்தார்.

 

“ஜிஎஸ்டி வருவாய் வரும் காலங்களில் அதிகரிக்கும் இதனையடுத்து கார்ப்பரேட் வரியினை குறைப்பதாக அருண் ஜேட்லி உறுதியளித்துள்ளார்” என்றார் சந்திப்ப் சோமானி.

 

2015-16 பட்ஜெட்டின் போது கார்ப்பரேட் வரி என்பது 4 ஆண்டுகளில் படிப்படியாகக் குறைக்கப்பட்டு 30% லிருந்து 25% ஆக மாற்றப்பட்ம் என்று மத்திய அரசு உறுதி அளித்திருந்தது. 

 

ஆனால் 2017-ல் வருடாந்திர விற்பனை ரூ.50 கோடிக்கும் குறைவாக உள்ள நிறுவனங்களுக்கு மட்டும் கார்ப்பரேட் வரி 25% ஆகக் குறைக்கப்பட்டது.  இதுவே 96% நிறுவனங்களுக்கு சாதகமான வரிக்குறைப்புதான். 

 

இது தற்போது 250 கோடி வரை வருடாந்திர விற்பனை உள்ள நிறுவனங்களுக்கும் 25% என்று குறைக்கப்பட்டது. இதனால் சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் பயனடைந்தன.

 

இந்நிலையில் அனைத்து நிறுவனங்களுக்குமான கார்ப்பரேட் வரியை 25% ஆகக் குறைக்க அருண் ஜேட்லி வாக்குறுதி அளித்திருப்பதாக இந்திய தொழிற்துறைக் கூட்டமைப்பு இன்றைய கூட்டத்துக்குப் பிறகு தெரிவித்துள்ளது.

 

இதற்கிடையே இந்தியாவின் பொருட்களுக்கு அமெரிக்கச் சந்தையில் கிடுக்கிப் போட ட்ரம்ப் முடிவெடுத்து பொதுப்படையான முன்னுரிமை நாடுகள் பட்டியலிலிருந்து இந்தியாவை நீக்கும் முடிவை அமெரிக்கா எடுத்தால் இந்தியாவினால் போட்டி போட முடியாது என்று சந்தீப் சோமானி தெரிவித்துள்ளார்.

 

“இது தொடர்பாக இருநாட்டு அரசுகளும் பேச்சு வார்த்தை நடத்தி சிறப்புரிமை நாடுகளிலிருந்து இந்தியாவை நீக்கக் கூடாது என்று இந்தியா வலியுறுத்தும் என்று நம்புகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x