Published : 07 Jan 2019 11:40 AM
Last Updated : 07 Jan 2019 11:40 AM

ஜியோவின் தனி சாம்ராஜ்யம்

சில திறமைகள் பரம்பரை மரபணு வழியாக சந்ததி சந்ததியாகத் தொடர்ந்து கடத்தப்படும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. யூதர்கள் முதல் நம்மூர் மார்வாடிகள், குஜராத்திகள் வரை பல உதாரணங்கள் உண்டு. கண்ணுக்கெதிரே அனைவருக்கும் தெரிந்த உதாரணம் அம்பானி குடும்பம்.

திருபாய் அம்பானியின் கடின உழைப்பால் உருவான ரிலையன்ஸ் சாம்ராஜ்யம் அரை நூற்றாண்டுக்குப் பிறகும், எத்தனையோ போட்டிகள், பன்னாட்டு நிறுவனங்கள் வந்தாலும் அத்தனையும் தாண்டி இன்றும் ‘நெம்பர் ஒன்’ இடத்தில் இருக்கிறது. இந்தியப் பணக்காரர்களுக்கெல்லாம் முடிசூடா மன்னனாக இருக்கிறார் முகேஷ் அம்பானி.     

அம்பானிக்கு யாரும் எப்படி பிசினஸ் செய்ய கற்றுத்தர வேண்டியதில்லை. எப்படி விளம்பரம் செய்ய வேண்டும், எப்படி சந்தையைப் பிடித்து தனி ஆளாக ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று சொல்லித்தர தேவையில்லை. எதைத் தொட்டாலும் தங்கமாக்கும் மேஜிக் அவரிடம் உண்டு. அதன் நிகழ்கால உதாரணம்தான் ‘ஜியோ’.

இந்திய தொலைத் தொடர்பு சந்தையில் ஏற்கெனவே பல போட்டியாளர்கள் இருந்த நிலையில்தான் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகமானது. ஏர்டெல், ஏர்செல், வோடபோன், ஐடியா, டொகோமோ,  ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இப்படி பல போட்டியாளர்கள். ஆனால், ஜியோ அறிமுகமானதுமே அதிரடி ஆஃபர்கள் மூலம் தொலைத்தொடர்பு சந்தையையே ஒரு கலக்கு கலக்கியது. போட்டி நிறுவனங்கள் எதுவுமே ஜியோவின் பாய்ச்சல் இப்படி இருக்கும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.  

சில மாதங்களிலேயே போட்டி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களெல்லாம் சந்தையைக் கொஞ்சம் கொஞ்சமாக ஜியோவிடம் இழக்க ஆரம்பித்தனர். ஜியோ அறிமுகமாகி இரண்டே ஆண்டுகளில் 20 கோடி வாடிக்கையாளர்களைத் தனது நெட்வொர்க்கில் சேர்த்திருக்கிறது.

தற்போது, மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்று இன்னும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஆம், கடந்த அக்டோபர் மாதம் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கில் சுமார் 1.05 கோடி வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர்.

ஆனால், அதேவேளையில் வோடபோன் ஐடியா, ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ், எம்டிஎன்எல் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சுமார் 1.01 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளன.

இவற்றில், வோடபோன் ஐடியா 73.61 லட்சம் வாடிக்கையாளர்களையும், ஏர்டெல் 18.64 லட்சம் வாடிக்கையாளர்களையும், டாடா டெலிசர்வீசஸ் 9.25 லட்சம் வாடிக்கையாளர் களையும், எம்டிஎன்எல் நிறுவனம் 8,068 வாடிக்கையாளர்களையும் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 3,831 வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளன.

ஜியோ அறிமுகப்படுத்தப்பட்டப் பிறகு வேறு வழியில்லாமல் அனைத்து நிறுவனங்களுமே சேவை கட்டணத்தைக் குறைக்க வேண்டிய நிலைக்கு ஆளாயின. சேவை கட்டணத்தைக் குறைத்ததால் நஷ்டத்தை அடைந்தன. ஆனாலும், வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க முடியவில்லை. ஜியோவின் ஆஃபர்கள் அனைத்துமே அட்டகாசமாக இருந்தது.

ரூ. 1500க்கு 4ஜி இணையம் பயன்படுத்தும் போனை அறிமுகப்படுத்தி, செல்போனில்லாத மாபெரும் கூட்டத்தை வளைத்து போட்டது. இப்போது இந்தியாவின் குக்கிராமங்களில் கூட ஜியோ தான். அந்த போனையே அடுத்தடுத்து மேம்படுத்தி ஆச்சர்யப்படுத்தியது. லைஃப் நிறுவனத்துடன் சேர்ந்து சலுகை விலையில் ஸ்மார்ட்போனை கொண்டுவந்தது. இன்னும் ஒருபடி மேலே போய், ஜியோ பேரிலேயே மிக மலிவான அட்வான்ஸ்டான ஸ்மார்ட்போனை விரைவில் கொண்டுவரப் போவதாகவும் அறிவித்திருக்கிறது.

இப்படி பல்வேறு உத்திகளைக் கையாண்டு இந்தியாவின் மாபெரும் தொலைத்தொடர்பு சந்தையை ஜியோ மூலம் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். ஏர்டெல் நிறுவனத்தின் இந்தியாவின் மிக வேகமான நெட்வொர்க் என்ற விளம்பரமும் சரி, வோடபோன் ஐடியா இணைப்பு உத்தியும் சரி ஜியோவின் போட்டியை எதிர்கொள்ள போதுமானதாக இல்லை. ஏர்செல் இழுத்து மூடப்பட்டுவிட்டது. டாடா டொகோமோ, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன.

ஏதோ அரசு நிறுவனம் என்பதால் பிஎஸ்என்எல் சற்று தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ஜியோவின் ஆட்டம் இத்தோடு நிற்கப் போவதில்லை என்பது மட்டும் உண்மை. பார்க்கலாம் இன்னும் இந்த ஜியோ என்னவெல்லாம் தொலைத்தொடர்பு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x