Last Updated : 01 Jan, 2019 08:50 AM

 

Published : 01 Jan 2019 08:50 AM
Last Updated : 01 Jan 2019 08:50 AM

இன்று முதல் அமல்: டிவி, சினிமா டிக்கெட், உள்பட 23 பொருட்கள் ஜிஎஸ்டி வரி குறைந்தது

மக்களுக்குப் புத்தாண்டு பரிசாக, எல்இடி டிவி, சினிமா டிக்கெட், கம்ப்யூட்டர் மானிட்டர், மாற்றுத்திறனாளிகளுக்கான உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட 23 வகை பொருட்கள், சேவைகளின் குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி இன்று முதல் அமலுக்கு வந்தது.

டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 22ஆம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடந்தது. அதில் ஜிஎஸ்டி வரி வீதத்தில் பல்வேறு சீரமைப்பு செய்யப்பட்டு வரிக் குறைப்பு செய்து அறிவிக்கப்பட்டது. சினிமா டிக்கெட் கட்டணம், எல்இடி டிவி, கம்ப்யூட்டர் மானிட்டர், பவர் பேங்க் உள்ளிட்ட 23 பொருள்கள் மற்றும் சேவைகள் மீதான வரி குறைக்கப்பட்டது.

ஆடம்பர பொருள்கள், உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தும் பொருள்கள், சிமெண்ட், பெரிய திரை கொண்ட டிவி,  ஏசி ஆகியவை  அதிகபட்சமாக 28 சதவீத வரிவிதிப்புக்குள் கொண்டுவரப்பட்டன.

இசைப்புத்தகங்கள், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள் ஆகியவற்றுக்கு  ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

டிஜிட்டல் கேமிரா, விடியோ கேமிரா ரெக்கார்டர், கியர் பாக்ஸ், பயன்படுத்தப்பட்ட டயர்கள் உள்ளிட்டவை மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

மாற்றுத் திறனாளிகளின் வாகன பொருள்கள், நிலக்கரி சாம்பலில் தயாரிக்கப்பட்ட செங்கல், வாக்கிங் ஸ்டிக், பளிங்கு மார்பில் ரபிள் உள்ளிட்டவை மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

வாகனங்களில் 3ஆம் நபர் காப்பீட்டுத் தொகை மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

ரூ.100 வரையிலான சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், ரூ.100க்கும் கூடுதலாக இருக்கும் சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.

32 அங்குலம் வரை கொண்ட டிவி, கம்ப்யூட்டர் திரை, பவர் பேங்க் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இந்த வரி குறைப்பு அனைத்தும் இன்று(செவ்வாய்கிழமை) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x