Last Updated : 28 Jan, 2019 04:47 PM

 

Published : 28 Jan 2019 04:47 PM
Last Updated : 28 Jan 2019 04:47 PM

பட்ஜெட் 2019: வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ. 5 லட்சமாக உயருமா?

இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட், பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. வரும் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று அமையும் புதிய அரசே தாக்கல் செய்யும். அதுவரை குறிப்பிட்ட கால செலவுகளுக்கான ஒப்புதலுக்காக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தற்போது தாக்கல் செய்யப்படுகிறது.

இதனால் பெரிய அளவில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இருக்காது என்ற வாதம் வகைக்கப்படுகிறது. எனினும். தேர்தல் வர இருப்பதால் மத்திய பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

குறிப்பாக நடுத்தர வர்க்கப்பிரிவினரை ஈர்க்கும் வகையில் வருமான வரி விகிதங்களில் சலுகைகள் அறிவிக்கப்படலாம் என கருதப்படுகிறது.

தற்போது ரூ.2.5 லட்சம் வரை வருமான வரி கிடையாது. ரூ.2.5 - ரூ.5 லட்சம் வருவாய்க்கு 5% வரியும், ரூ.5-10 லட்சம் வருவாய்க்கு 20% வரியும் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வருவாய்க்கு 30% வரியும் விதிக்கப்பட்டு வருகிறது.

வருமான வரி விலக்கு உச்ச வரம்பை இதனை ரூ.5 லட்சம் வரை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. வரும் பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பாக நிலவி வரும் எதிர்பார்ப்புகள் குறித்து, அனைத்து இந்திய வரி செலுத்துவோர் சங்க தலைவரும், கணக்கு தணிக்கையாளருமான வி.முரளி கூறியதாவது:

வருமான வரி விலக்கு உச்ச வரம்பை பொறுத்தவரையில் கடந்த 4 ஆண்டுகளாகவே உயர்த்தப்பட வில்லை. ஆண்டுக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் உயர்த்தி இருந்தாலும் இதுவரை 2.5 லட்சம் ரூபாய் உயர்த்தி இருக்க வேண்டும். இந்த உச்ச வரம்பை மேலும் 2 லட்சம் ரூபாய் வரை அதாவது வருமான வரி உச்ச வரம்பை 4 லட்சமாக உயர்த்த வேண்டும்.

அதுபோலவே, வருமான வரியின் அளவுகளிலும் மாற்றங்கள் செய்யப்படுவது அவசியம். ரூ.5-10 லட்சம் வருவாய்க்கு 10% வரி விதிப்பும் ரூ.10-20 லட்சம் வருவாய்க்கு 20% வரிவிதிப்பும் 20 லட்சத்துக்கும் மேல் வருவாய் உடையோருக்கு 30% வரியும் விதிக்கலாம். குறிப்பாக பென்ஷன் பெறும் முதியோர்களுக்கு வரி விதிப்பில் கண்டிப்பாக சலுகை வழங்க வேண்டும்.

80சிசி போன்ற பிரிவுகளின் கீழ் செய்யப்படும் முதலீடுகளுக்கு வழங்கப்படும் வரி விலக்கு அளவை தற்போதுள்ள 1.5 லட்சத்தில் இருந்து 3  லட்சமாக உயர்த்த வேண்டும். “மருத்துவச் செலவுகள், போக்குவரத்துச் செலவுகளை திரும்பப் பெறுதலுக்கான விலக்குகள் உள்ளிட்ட ஸ்டாண்டர்ட் கழிவுகளுடன் மீண்டும் அமல்செய்யப்பட வேண்டும். சொந்த வீடு வாங்குபவர்களின் வீட்டுக்கடனுக்கான வட்டித் தொகைக்கான வருமான வரிச் சலுகை உச்ச வரம்பிலும் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x