Published : 09 Sep 2014 11:48 AM
Last Updated : 09 Sep 2014 11:48 AM

எப்போது பேச்சு வார்த்தைக்குப் போகக்கூடாது?

சுமுகமாகப் பேசிப் பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ளத்தான் நாம் எல்லோரும் விரும்புகிறோம். அமெரிக்க முன்னாள் அதிபர் கென்னடி சொன்னார், Let us never negotiate out of fear. But let us never fear to negotiate (பயத்தால் பேச்சு வார்த்தைகள் நடத்தவேண்டாம்: பேச்சு வார்த்தை நடத்தவும் பயப்படவேண்டாம்.)

ஆனால், புத்திசாலிகள், அடுத்தவர் கூப்பிடும் நேரமெல்லாம் பேச்சு வார்த்தைகளுக்குப் போகமாட் டார்கள். அவற்றைச் சில வேளைகளில் தவிர்ப்பார்கள் அல்லது தள்ளிப் போடுவார்கள். காரணம், பயமா? இல்லை, இது ஒரு ராஜதந்திரம்.

ஏன், எப்படி? அனுபவசாலிகள் சொல் வதைக் கேட்போம்.

யூனியன் தலைவர்

பல ஆண்டுகளுக்கு முன்னால், ஐ.ஐ.எம் அகமதாபாதில் மோகன்தாஸ் என்னும் மும்பை யூனியன் தலைவர் தொழில் உறவுகள் (Industrial Relations) என்னும் பாடம் நடத்தினார். அவர் அடிக்கடி சொல்லும் கருத்துகள் இவை:

தொழிலாளிகளுக்குச் சம்பள உயர்வும், அதிக போனஸும் வாங்கிக் கொடுப்பது, அவர்கள் வேலைச் சூழலை மேம்படுத்துவது ஆகியவைதாம் எங்கள் முக்கிய கடமைகள். கம்பெனி வளர்ந்தால்தான், லாபம் பார்த்தால்தான், இந்த வசதிகளைத் தர முடியும். முதலாளி – தொழிலாளி உறவு இரண்டு எதிரிகள் நடத்தும் போர் அல்ல. குடும்ப அங்கத்தினர்களின் கூட்டு முயற்சி.

இந்தக் கண்ணோட்டத்தை ஏராளமான தொழிலாளிகளும், பல யூனியன் தலைவர்களும் ஒத்துக் கொள் வதில்லை. அவர்களைப் பொறுத்தவரை, கம்பெனி பலவீனமாக இருக்கும்போது போட்டுத் தாக்கவேண்டும். மோகன் தாஸைப் பொறுத்தவரை, கம்பெனி நஷ்டத்தில் ஓடும்போதோ, முக்கிய ஆர்டர்கள் இழப்பு, வருமான வரிச் சிக்கல் ஆகிய பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டிருக்கும்போதோ, கோரிக்கைகள் எழுப்பக்கூடாது. அப்படிக் கோரிக்கைகள் இருந்தாலும், அவற்றை மேனேஜ்மென்டிடம் விளக்கவேண்டும், அடக்கி வாசிக்கவேண்டும், கம்பெனியின் பிரச்சனைகள் தீர்ந்தவுடன், தொழிலா ளர்களுக்குப் பரிகாரம் தருவதாக உறுதிமொழி வாங்கவேண்டும். இரு தரப்பினருக்கும் நெருங்கிய உறவு ஏற்பட இந்த அணுகுமுறை மிகவும் உதவும்.

மார்க்கெட்டிங் மேனேஜர்

கைலாசம் பன்னாட்டுக் கம்பெ னியில் மார்க்கெட்டிங் மேனேஜர். பெண்களுக்கான சோப், சிகப்பழகு க்ரீம், லோஷன், ஹேர் ஆயில், ஷாம்பு ஆகியவை தயாரிக்கிறார்கள். தயாரிப்புகள் பெண்கள் மத்தியில் பிரபலம். கடைகளுக்குக் கம்பெனி தரும் கமிஷன் 15 சதவிகிதம்.

கம்பெனி ஆண்களுக்கான சோப், க்ரீம், லோஷன், ஹேர் ஆயில் அறிமுகம் செய்திருக்கிறார்கள். தொலைக்காட்சி, பத்திரிகைகளில் விளம்பரம் தொடங்கிவிட்டது. பெண்கள் அழகுப் பொருட்களுக்குத் தரும் அதே 15 சதவிகிதக் கமிஷன். கடைகள் 20 சதவிகிதம் கேட்கிறார்கள். தராவிட்டால், ஸ்டாக் எடுக்க மறுக்கிறார்கள். விற்பனை எதிர்பார்த்த அளவு சூடு பிடிக்கவில்லை.

ஆண்கள் தயாரிப்புகளின் மேனேஜர் ரோஹித். வியாபாரிகளோடு உடனடியாகப் பேச்சு வார்த்தை நடத்தி முடிவு காணத் துடிக்கிறார். வியாபாரிகளும் ரெடி.

கைலாசத்தின் அணுகுமுறை வேறு. விளம்பரங்களில் பல கோடிகளோடு திட்டம் தயார். ஷாருக் கான் மாடலாக வருவார். அவரோடு ஒரு நாள் செலவிடுவதற்கான வாடிக்கையாளர் போட்டிகள், ஒரு ஆணழகுப் பொருள் வாங்கினால் இன்னொன்று இலவசம் என்று ஆஃபர்கள். விரைவிலேயே, ஆண்கள் கடைகளில் தேடிப்போய் வாங்குவார்கள். தேடி வரும்

ஸ்ரீதேவியைக் கடைக்காரர்கள் ஒதுக்குவார்களா? 15 சதவிகிதக் கமிஷனுக்குக் கட்டாயம் சம்மதிப்பார்கள். அந்த பலம் கையில் சிக்கும்வரை, கைலாசம் டீலர்களோடு பேச்சு வார்த்தைகளைத் தள்ளிப்போடப் போகிறார்.

அரசியல் நிபுணர்கள்

1947. பாகிஸ்தான் காஷ்மீர் மீது படையெடுத்தது. தனி நாடாக இருந்த காஷ்மீர் இந்தியாவின் உதவி கேட்டது. தன்னைப் பாரதநாட்டின் பகுதியாக இணைத்துக்கொள்ளச் சம்மதித்தது. இந்தியா தன் படைகளை அனுப்பியது. இந்தியா, பாகிஸ்தான் படைகளுக்கிடையே கடும்போர். பெரும்பாலான பாகிஸ்தான் படைகளைக் காஷ்மீரிலிருந்து துரத்தி அடித்தது.

அப்போது, காஷ்மீரில் கடும் குளிர்காலம் ஆரம்பித்தது. போரைத் தற்காலிகமாக நிறுத்தவேண்டிய கட்டாயம். இரண்டு நாடுகளும் ஐ. நா. சபையை நடுவராக வைத்துச் சமரசம் செய்துகொள்ள முடிவெடுத்தன. இந்தியப் பிரதமர் நேருஜியின் அணுகுமுறை இது.

உள்துறை அமைச்சராக இருந்த வல்லபாய் பட்டேல் நேருஜியின் முடிவோடு மாறுபட்டார். முழு பாகிஸ் தான் படைகளையும் காஷ்மீரிலிருந்து துரத்தியடிக்கும்வரை பேச்சு வார்த்தைகள் கூடாது என்று சொன்னார். பலன்? காஷ்மீரின் ஒரு பகுதி இன்னும் பாகிஸ்தான் வசம் இருக்கிறது. தீராத ரணமாகக் காஷ்மீர் பிரச்சனை இரு நாடுகளின் உறவுகளையும் பாதிக்கிறது.

அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள், ”ஜெயித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், இந்தியா பேச்சு வார்த்தைகளுக்குப் போயிருக்கக்கூடாது. பாகிஸ்தான் படையினரைத் துரத்தி அடித்தபின், நாம் வெள்ளைக் கொடி காட்டியிருக்கவேண்டும்.”

காஷ்மீருக்கு மட்டுமல்ல, எல்லாப் பிரச்சினைகளுக்கும் நீதி இதுதான் – ஜெயித்துக்கொண்டிருக்கிறீர்களா? வெற்றிக் கனி உங்கள் கைகளில் முழுக்கக் கிடைக்கும்வரை பேச்சு வார்த்தைகளுக்குச் சம்மதிக்காதீர்கள். உங்கள் வெற்றி கானல் நீராகிவிடும், சிக்கலுக்கும் தீர்வு காணவே முடியாது.

ராணுவ மேதைகள்

இன்னொரு யுத்த அனுபவம். பேச்சு வார்த்தைகளைத் தள்ளிப்போடுவதை எப்படி யுத்த வியூகமாக, வெற்றித் திறவுகோலாக மாற்றலாம் என்கிறது ரோம மாவீரர் ஜூலியஸ் ஸீஸர் வாழ்க்கை நிகழ்ச்சி. ஜூலியஸ் சீஸர் ரோம் நாட்டுப் படைத் தளபதியாக இருந்தார். ரோமின் அண்டை நாடு கால் (Gaul). அடிக்கடி ரோமுக்குள் கால் வீரர்கள் நுழைவார்கள், அமைதியைக் குலைப்பார்கள்.

அவர் களின் வாலை ஒட்ட நறுக்க சீஸர் முடிவெடுத்தார். அப்போது, அரசியல் சூழ்ச்சிகளால், ரோம் அரசு அவருக்குப் போதிய படைபலம் தரவில்லை. போகும் வழியெல்லாம், விவசாயம் செய்துகொண்டிருந்த இளை ஞர்களை வீரர்களாகத் தேர்வு செய்தார். அவர்களுக்குக் குறைந்த பட்சம் ஒரு மாதப் பயிற்சியாவது தரவேண்டும். என்ன செய்யலாம்?

கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது. கால் ஒற்றர்கள் சீஸரின் பிரம்மாண்டப் படையைப் பார்த்தார்கள். அது பயிற்சி இல்லாத கூட்டம் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. சேதி கேட்ட கால் அரசு பயந்தது. பேச்சு வார்த்தைக்குத் தூதர்களை அனுப்பியது. ”இந்த விஷயத்தில் வெறும் தளபதி நான் முடிவெடுக்க முடியாது. ரோம் அரசுதான் போரா, பேச்சு வார்த்தையா என்பதைத் தீர்மானிக்கவேண்டும். ஒரு மாத அவகாசம் தாருங்கள்” என்று தவணை கேட்டார் சீஸர். கொடுத்தார்கள்.

சீஸர் இந்த வேண்டுகோளை ரோம் ஆட்சியாளர்களுக்குத் தெரிவிக்க வேயில்லை. தன் வீரர்களின் திறமை களைப் பட்டை தீட்டினார். கால் மீது அதிரடித் தாக்குதல் நடத்தினார். அவர்களை ஓட ஓட விரட்டினார். பேச்சு வார்த்தைகளை சீஸர் தள்ளிப் போட்டது அவர் யுத்த வியூகம்,வெற்றித் தந்திரம்.

குடும்பத் தலைவி

கம்பெனிகளுக்கும், நாடுகளுக்கும் மட்டுமல்ல, வீடுகளுக்கும் இந்தப் “பேச்சு வார்த்தைகளைத் தள்ளிப்போடும் யுக்தி” மிகப் பயன் தருவது. கமலா சொல்கிறார், “என் கணவர் ஒரே டென்ஷன் ஆசாமி. காலையில் எழுந்து ஆபீஸ் போகும்வரை எதற்குக் கோபப்படுவார் என்றே தெரியாது. காரணமே இல்லாமல் என்னிடமும், குழந்தைகளிடமும் கத்துவார். மதியம் லஞ்ச் நேரத்தில் போன் செய்து ஆயிரம் ஸாரி சொல்லுவார். இதனால், நான் முக்கிய சமாசாரங்கள் எதையுமே அவரிடம் காலையில் பேசுவதில்லை. இரவு சாப்பிட்டபிறகுதான் பேச்சுக்கள்.”

slvmoorthy@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x