Published : 26 Dec 2018 12:03 PM
Last Updated : 26 Dec 2018 12:03 PM

2018-ல் ஆடிப்போன உலகப் பணக்காரர்கள்: ரூ.1.70 லட்சம் கோடியை இழந்த பேஸ்புக் நிறுவனர்

2018-ம் ஆண்டு நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இந்த ஓராண்டில் பல துறைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் உட்பட உலகப் பணக்காரர்கள் பலரும் பல கோடி ரூபாய் சொத்தை இழந்துள்ள விவரம் தற்போது தெரிய வந்துள்ளது.

உலகம் முழுவதும் நிலவும் பொருளாதாரச் சூழல், வர்த்தக வாய்ப்பு இவை மட்டுமின்றி பங்குச்சந்தைகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளின் அடிப்படையில் பணக்காரர்களின் சொத்து மதிப்புகள் மாறுவது வழக்கம். தனிநபர்களின் முதலீடு மட்டுமின்றி அவர்களது நிறுவனங்களின் முதலீடுகளும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அந்த வகையில் 2018-ம் ஆண்டில் அதிகமாக பணம் குவித்தது யார்? பணத்தை இழந்தது யார்? என்ற விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து கோலோச்சி வரும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் 2018-ம் ஆண்டில் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்தித்துள்ளார்.

அதேசமயம் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் சொத்து மதிப்பு இந்த ஆண்டு உயர்ந்துள்ளது. செப்டம்பரில் 12 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்தது. இருப்பினும் பிறகு அதில் 5 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. எனினும் இந்த ஆண்டின் மொத்த கணக்கீடுபடி அவரது சொத்து மதிப்பு அதிகரித்தே உள்ளது.

இதுபோலவே மெக்ஸிகோவைச் சேர்ந்த மொபைல் போன் உற்பத்தியாளர் கார்லோஸ், பிரேசில் நாட்டு தொழிலதிபர் ஜோர்ஜ் பவுலோ உள்ளிட்டோரின் சொத்து மதிப்பும் குறைந்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள பெரும் பணக்காரர்கள் இந்த ஓராண்டில் 37 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  

இதுமட்டுமின்றி ரஷ்யாவைச் சேர்ந்த கச்சா எண்ணெய் நிறுவன உரிமையாளர்கள், சீனா மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்த பணக்காரர்கள் என பலருக்கும் 2018-ம் ஆண்டில் அதிகமான சொத்து இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x