Last Updated : 30 Oct, 2018 05:16 PM

 

Published : 30 Oct 2018 05:16 PM
Last Updated : 30 Oct 2018 05:16 PM

உலகின் 3-வது பணக்கார நாடாகும் பாதையில் இந்தியா, 4-வது தொழிற்புரட்சியில் முன்னிலை: முகேஷ் அம்பானி

இந்தியாவின் நவீன தொழில்நுட்ப நுண்ணறிவுத்திறன் கொண்ட இளைய தலைமுறையினால் 4-வது தொழிற்புரட்சியை முன்னின்று நடத்துவதோடு, உலகில் 3-வது மிகப்பெரிய பணக்காரா நாடாகும் பாதையில் இந்தியா பயணித்துக் கொண்டிருக்கிறது என்று முகேஷ் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற மோபிகாம் 24-வது கூட்டத்தில் முகேஷ் அம்பானி கலந்து கொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், ''இந்தியாவின் டிஜிட்டல் உருமாற்றம் ஈடு இணையற்றது, முன்னெப்போதும் இல்லாதது.

1990-ம் ஆண்டு ரிலையன்ஸ் தனது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்தித் திட்டங்களை உருவாக்கிக் கொண்டிருந்த போது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி, ஜிடிபி 350 பில்லியன் டாலர்களாக இருந்தது. அப்போதுதான் பெரிய நிதிநெருக்கடியிலிருந்து மீண்டு வந்திருந்தது

கிளவுட் கம்ப்யூட்டிங், மற்றும் நெட்வொர்க்கிங் தொழில்நுட்பங்கள் இந்திய தொழில் முனைவோர்களை உலக அளவில் தாக்கம் ஏற்படுத்துபவர்களாக மாற்றிவிட்டது.

இன்னும் இருபது ஆண்டுகளில் நான் நிச்சயமாகக் கூறுகிறேன். இந்தியா உலகையே வழிநடத்தவுள்ளது. அடுத்த உலகப் பொருளாதார வளர்ச்சி அலையை இந்தியா தீர்மானிக்கும்.

இப்போது 4-வது தொழிற்புரட்சி நம் கையில் உள்ளது. இதில் இந்தியா வெறும் பங்கேற்பு மட்டும் செய்யாமல் முன்னிலை வகிக்கும் என்று நான் கூறுகிறேன்.

ஏனெனில் இன்றைய இந்தியா நேற்றைய இந்தியாவை விட குறிப்பிடத்தகுந்த அளவில் வித்தியாசமானது. இந்தியாவின் தொழில்நுட்ப நுண்ணறிவும், இளம் தலைமுறையும் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. கோடி மக்களின் மனங்கள் ஒன்றிணையும் தொடர்புபடுத்தும் ஒரு அறிவுத்தொகுப்பின் சக்தி எப்படியிருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறேன்.

நம் குழந்தைகளை பள்ளிப் பருவத்திலிருந்தே டிஜிட்டல் நுண்ணுணர்வுடன் வளர்க்க வேண்டும். விமர்சனச் சிந்தனை, கம்யூனிகேஷன், படைப்பாற்றலை இதன் மூலம் ஊக்குவிக்க வேண்டும்.

ஜியோ பிக்சட் லைன் பிராட்பேண்டில் இந்தியாவை டாப் 3 நாடுகளுக்குள் கொண்டு வர உறுதி பூண்டுள்ளது. தற்போது இழைமங்களின் மூலமான தொடர்பு வீடுகள், வியாபாரத்தலங்கள், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் என்று ஒரே நேரத்தில் நாடு முழுதும் 1500 நகரங்களுக்கு உயர் தொழில்நுட்ப பைபர் கனெக்‌ஷன் சேவை வழங்கப்பட்டுள்ளன'' என்று முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

இதற்கிடையே, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு குஜராத்தைச் சேர்ந்த 58 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பை விட அதிகமாக உள்ளதாக ஹூரன் இந்தியா வெளியிட்டுள்ள பணக்காரர்கள் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 1000 கோடிக்கு அதிகமாகச் சொத்து வைத்துள்ள 58 குஜராத் பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 2.54 லட்சம் கோடி. ஆனால், முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ. 3.71 லட்சம் கோடி. இதன் மூலம் ஒட்டுமொத்த குஜராத் பணக்காரர்களின் சொத்து மதிப்பு முகேஷ் அம்பானி ஒருவரின் சொத்து மதிப்பை விட குறைவாகவே உள்ளது. முகேஷ் அம்பானியும் குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்தான். முகேஷ் அம்பானி தொடர்ந்து ஏழாவது வருடமாக இந்தியாவின் முதல் பணக்காரராக இருந்துவருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x