Published : 04 Aug 2018 08:51 AM
Last Updated : 04 Aug 2018 08:51 AM

தொழில் ரகசியம்: பிரிவோம் சந்திப்போம்

டீவி மெகா சீரியல்கள் என்றைக்காவது முடிகிறதா என்பது பற்றி தகவல் இல்லை. நான் பார்ப்பதில்லை. ஆனால் இந்த ‘தொழில் ரகசியம்’ தொடர் இன்றோடு முடிகிறது. அதற்காக ரொம்ப சந்தோஷப்படாதீர்கள். பார்ட் 2 ஒரு நாள் வரலாம். விதி வலியது!

சுமார் நான்கு வருடங்களாக தொழில் பற்றி கொஞ்சம் மார்க்கெட்டிங் பற்றி நிறைய பார்த்தோம். அட்லீஸ்ட் நான் பார்த்தேன். சிலவற்றை நீங்கள் படித்திருக்கலாம். மங்களம் பாடி முடிக்கும் வகையில் இன்று மார்க்கெட்டிங் பற்றி பேசாமல் மார்க்கெட்டர் பற்றி மார்க்கெட்டருக்கு தேவையான தன்மைகள் பற்றி பேசுவோம்.

தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் அல்ல. மார்க்கெட்டிங் செய்வதால் மட்டும் ஒருவர் மார்க்கெட்டர் அல்ல. செய்ய ஈசியாய் தெரிவதால் எல்லாரும் எடுத்து மடியில் வைத்துக்கொஞ்ச மார்க்கெட்டிங் எடுப்பார் கைப்பிள்ளையும் அல்ல. மார்க்கெட்டர் ஆவதற்கு எம்பிஏ படிப்பு அவசியமில்லைஎன்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். படித்திருந்தால் புண்ணியமே. ஆனால் மார்க்கெட்டிங் துறையில் இருப்பதற்கு சில அடிப்படை தகுதிகள் அவசியம். சில பிரத்யேக குணங்கள் முக்கியம். மார்க்கெட்டிங் துறையில் நான் பெற்ற அனுபவத்தில் சிலவற்றை உங்களோடு பகிர ஆசை. அனுபவம் என்ற சீப்பு, தலை வழுக்கையான பிறகுதான் கிடைக்கிறது என்று ஒரு ஆங்கில பழமொழி உண்டு. அனுபவம் எனக்கு தந்த சீப்பை தருகிறேன். அதை சரியாய் கையாண்டு தலை வாருவதும் தப்பாய் செய்து காலை வாருவதும் உங்கள் கையில்!

முதலில் வாடிக்கையாளர் ஆகுங்கள்

புத்தகம் எழுத ஆசையிருந்தால் முதல் காரியமாக படிக்கும் ஆசையிருக்கவேண்டும். இசை கலைஞனாக வேண்டுமென்றால் நல்ல ரசிகனாக இருக்கவேண்டும். அதே போல் மார்க்கெட்டராக விளங்க முதலில் நல்ல வாடிக்கையாளராக இருக்கவேண்டும். `வாடிக்கையாளரை முட்டாள் என்று நினைக்காதே அவள் உன் மனைவி’ என்றார் விளம்பர மேதை ‘டேவிட் ஒகில்வி’. இதுதான் சாக்கு என்று உங்கள் பிராண்டை வாங்க வரும் பெண்ணின் கையை பிடித்து இழுக்காதீர்கள். உங்கள் வாடிக்கையாளர் யாரோ ஒருவர் என்று நினைக்காதீர்கள், உங்கள் மனைவி கூட ஒரு வாடிக்கையாளர்தான் என்று பொருள்பட கூறினார் ஒகில்வி. முதலில் நீங்கள் வாடிக்கையாளர். பிறகு தான் மார்க்கெட்டர். வாடிக்கையாளராய் நீங்கள் பெறும் அனுபவங்களிலிருந்து மார்க்கெட்டராய் பாடம் பயின்று அந்த பாடத்தை உங்கள் பிராண்டில் இறக்குங்கள்.

மற்றவர் விஷயங்களில் மூக்கை நுழையுங்கள்

மூக்கை மூச்சு விடுவதற்கு பதில் பிறர் விஷயங்களில் நுழைப்பதைத்தான் பலர் விரும்புகிறோம். கெட்ட குணம்தான். இருந்துவிட்டு போகட்டும். வாழ்க்கை சுவாரசியப்பட சில தேவைப்படுகிறது. உங்கள் மூக்கு சும்மா தானே கிடக்கிறது. நுழையுங்கள், குறிப்பாக வாடிக்கையாளர் விஷயங்களில் முழுவதுமாக விட்டு ஆராயுங்கள். மார்க்கெட்டருக்கு இருக்கவேண்டிய முக்கியமான குணம் இது. வாடிக்கையாளரை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து அவரை ஆதி முதல் அந்தம் வரை சப்ஜாடாய் புரிந்துகொள்ளாதவன் மார்க்கெட்டரே இல்லை. உங்கள் வாயையும் வைத்துக்கொண்டு சும்மா இருக்காதீர்கள். வாடிக்கையாளரோடு நிறைய பேசுங்கள். அவர்களைப் பற்றி அவர்கள் வாயாலேயே தெரிந்துகொள்ளுங்கள்.

`பிராக்டர் அண்ட் காம்பிள்’ தன் மார்க்கெட்டிங் ஊழியர்களை ஆண்டுதோறும் பத்து லட்சம் பேரையாவது சந்தித்து பேசவேண்டும் என்கிறது. அப்படி பேசாதவர்கள் சீட்டை கிழித்து வீட்டிற்கு அனுப்புகிறது. `பேச ஆசை தான், ஆனால் நேரம் தான் கிடைப்பதில்லை’ என்று சால்ஜாப்பு சொல்லாதீர்கள். இதுதான் உங்கள் வேலையே. வாடிக்கையாளரை வக்கனையாய் புரிந்துகொள்வது தான் உங்கள் தொழிலே. முடிந்தபோதெல்லாம் பஸ்ஸில் பயணம் செய்யுங்கள். பக்கத்தில் இருப்பவர்களோடு பேச்சு கொடுங்கள். டாக்ஸியில், ஆட்டோவில் பயணம் செய்யும் போது டிரைவரோடு அவர் வாழ்க்கையை பற்றி பேசுங்கள். அவருக்கு பிடித்த பிடிக்காத விளம்பரம் பற்றி காஷுவலாய் சேட் செய்யுங்கள். வாடிக்கையாளர் வாயை கிண்டினால் தான் தகவல் உப்புமா கிடைக்கும்!

முந்திரிக் கொட்டையாய் இருங்கள்

வரும் முன் காப்பது விவேகம். வருவதை கணித்து அதை சமாளிக்க திட்டமும் தீட்டி வைத்திருப்பது தான் மார்க்கெட்டருக்கு அழகு. மார்க்கெட்டிங் என்பது செஸ் ஆட்டம் போல. எதிராளி மூவ் செய்யட்டும், அதைப் பார்த்து பிறகு நான் என்ன ஆடுவது என்று தீர்மானிக்கிறேன் என்றால் சீக்கிரமே செக்மெட். எதிராளி மூவை அவர் வைக்கும் முன் புரிந்து பதில் திட்டத்தோடு ரெடியாய் இருங்கள். மார்க்கெட் போக்கையும் போட்டியாளர் உத்தியையும் நடக்குமுன் கணிக்க கற்றுக்கொள்ளுங்கள். அரிப்பதற்கு முன் சொரிந்துகொள்பவனே மார்க்கெட்டர்!

தோல்வியடையும் வழி தேடுங்கள்

வெற்றியின் சுகம் தெரிய தோல்வியின் வலி புரியவேண்டும். அதற்காக உங்களை தோற்கும் வழியைத் தேடச் சொல்லவில்லை. அது பாட்டுக்கு தானாய் வரும். தோற்றாலும் பரவாயில்லை என்று புதிய முயற்சிகளை விடாமல் செய்து பாருங்கள் என்கிறேன். ஐடியா கிடைப்பது பெரிய விஷயமல்ல. அதை முதல் காரியமாய் செயல்படுத்தி பாருங்கள். நல்லபடியா நடந்தால் வெற்றி. சரியாய் செயல்படவில்லை என்றால் பாடம்!

எருமை மாடு போல் பொறுமை காத்திடுங்கள்

மார்க்கெட்டருக்கு அசாத்திய பொறுமை வேண்டும். மழையில் நனையும் எதையோ போல் இருந்தால் இன்னும் விசேஷம். செய்யும் காரியத்தில் அவசரம் காட்டினாலும் அதிலிருந்து பெறவேண்டிய பயனைப் பெறுவதில் அசாத்திய பொறுமை வேண்டும். பெற வேண்டிய பயனை பெறும் தகுதி பெற தன் பிராண்டை தயார்படுத்தவேண்டும்.

சீனா மூங்கில் மரம் வளரும் விதம் தெரியுமா? அதை விதைத்து தினம் தண்ணீர் விட்டு பராமரித்து வந்தால் அது துளிர் விட்டு தலையை பூமியிலிருந்து எம்பி எட்டிப் பார்க்க ஐந்து வருடங்கள் ஆகும். `இத்தனை வருடமா`ய் காத்திருக்கிறேன், கீழே என்ன செய்துகொண்டிருந்தாய் முட்டாள் மூங்கிலே’ என்று நீங்கள் அதை வையும் நேரத்தில் அது அசுர வேகத்தில் வளர ஆரம்பிக்கும். அப்படியென்ன பெரிய வேகம்? துளிர் விட்ட ஆறு மாதத்திற்குள் சுமார் தொன்னூறு அடி உயரம் வளரும். அதாவது ஒரு நாளைக்கு முப்பத்தி ஒன்பது அங்குலம் வளரும். கூர்ந்து கவனித்தால் மரம் வளர்வதையே பார்க்க முடியும். ஐந்து வருடங்கள் தேமே என்று இருந்துவிட்டு தீடிரென்று தாம்தூம் என்று வளரும் மாயம் என்ன?

ஐந்து வருடம் அந்த மரம் சும்மா இல்லை. மண்ணிற்கு மேல் வளராமல் இருக்கலாம். ஆனால் அடியில் தன் வேர்களை வளர்த்துக்கொள்கிறது. பின்னால் பெறப் போகும் அசுர வளர்ச்சிக்கு தன்னை தயார்படுத்திக்கொள்கிறது. பொறுமையாக வளர்த்துக்கொண்ட தன் வேர்கள் இல்லையென்றால் பின்னாலில் அசுர வளர்ச்சி அடைய முடியாது என்பதை மூங்கில் மரம் உணர்ந்திருக்கிறது. பிறர் கண்களுக்கு வேண்டுமானால் அந்த மரம் ஆறு வாரங்களில் தொன்னூறு அடி வளர்ந்தது போல் தெரியும். ஆனால் ஒரு நல்ல மார்க்கெட்டருக்கு மட்டுமே தெரியும் தொன்னூறு அடி வளர மூங்கில் மரம் ஐந்து வருடம் ஆறு வாரங்கள் எடுத்துக்கொண்டதை. அது போல் தன் பிராண்ட் வருங்காலத்தில் வளர இன்று அடித்தளம் அமைக்கவேண்டிய அவசியத்தை!

மார்க்கெட்டிங் ஒன்றும் பெரிய கம்பசூத்திரம் அல்ல. அதை கற்றுக்கொள்ள ஒரு நாள் போதும். ஆனால் அதை கரைத்துக்குடிக்க தான் ஒரு ஆயுட்காலம் தேவைப்படுகிறது. அதில் பாண்டித்தியம் பெற புதிய விஷயங்களைத் தேடிப் படிக்கவேண்டும். புதிய தகவல்களை நாடிப் பெறவேண்டும். புதிய முயற்சிகளை ஓடிச் செய்யவேண்டும். எத்தனை நாள் வரை? மார்க்கெட்டிங் துறையில் நீங்கள் இருக்கும் கடைசி நாள் வரை!

இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற ‘ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்’ ஒரு முறை கல்லூரி ஒன்றில் எதிர்பட்ட மாணவனிடம் பேச்சு கொடுத்தாராம். அவர் யார் என்று அறியாத மாணவன் ‘பெரிசு என்ன படிச்சிருக்கீங்க’ என்று கேட்க ‘இயற்பியல் படிக்கிறேன்’ என்று ஐன்ஸ்டீன பதிலளிக்க அந்த மாணவன் ‘அத போன செமஸ்டரே முடிச்சிட்டேன்’ என்றானாம். நீங்கள் ஐன்ஸ்டீனாக இருக்கவேண்டாம். அந்த மாணவனாக இருக்காதீர்கள்.

உங்கள் தொழில் சீனா மூங்கில் மரம் போல் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அமரர் சுஜாதா கதை தலைப்பு தான் நினைவிற்கு வருகிறது. பிரிவோம் சந்திப்போம். சியர்ஸ்!

satheeshkrishanamurthy@gmail.com

நிறைவடைந்தது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x