Published : 07 Jul 2018 09:39 PM
Last Updated : 07 Jul 2018 09:39 PM

உலக பணக்காரர்கள் பட்டியலில் மார்க் ஜூகர்பெர்க் முதலிடம்: வாரன் பஃபெட், பில் கேட்ஸ் பின்தங்கினர்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் இணை நிறுவனரான மார்க் ஜூகர்பெர்க் தற்போது உலக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இவர் நிறுவன பங்கு விலை 2.4 சதவீதம் அதிகரித்ததைத் தொடர்ந்து இவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. இதன் மூலம் இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த பணக்காரர் வாரன் பஃபெட்டை விட இவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. இத்தகவல் புளூம்பெர்க் கோடீஸ்வரர்கள் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் மட்டுமே நிரந்தரமான வளம் சேர்க்கும் என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. அமேசானின் ஜெஃப் பிஸோஸ், மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர்.

தற்போது பட்டியலில் இடம்பெற்றுள்ள மூவருமே தொழில்நுட்பத்தின் மூலம் பணம் சேர்த்த பிரபலகங்களாவர். 34 வயதாகும் ஜூகர்பெர்க்கின் சொத்து மதிப்பு 8,160 கோடி டாலராகும். இது வாரன் பஃபெட் சொத்து மதிப்பை விட 37.30 கோடி டாலர் அதிகமாகும். பெர்க்ஷயர் ஹாத்வே இன்கார்ப்பரேஷனின் தலைமை செயல் அதிகாரியான 87 வயதாகும் பஃபெட் கோடீஸ்வரர்கள் பட்டியலில் மட்டுமின்றி சிறந்த கொடையாளியாகவும் திகழ்கிறார்.

ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல் கசிந்ததைத் தொடர்ந்து இந்நிறுவனப் பங்குகள் மள மளவென சரிந்தன. 152 டாலர் வரை சரிந்த இப்பங்கு கடந்த வெள்ளியன்று 203 டாலர் என்ற அளவுக்கு உயர்ந்தது.

புளூம்பெர்க்கின் சொத்து உருவாக்க பட்டியலில் தொழில்நுட்ப நிறுவனங்களின் சொத்து மதிப்பு 5 லட்சம் கோடி டாலரைத் தொட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உலகின் 500 முன்னணி பணக்காரர்கள் இடம்பெற்றுள்ளனர். வாரன் பஃபெட், 2006-ம் ஆண்டிலிருந்து நன்கொடைகளை மிக அதிக அளவில் வழங்கி வருகிறார். ஹாத்வே பெர்க்ஷயர் நிறுவனத்தின் 29 கோடி பி பிரிவு பங்குகளை அறக்கட்டளைக்கு அளித்துள்ளார். இதில் பெரும்பாலான தொகை பில் கேட்ஸ் தொடங்கிய அறக்கட்டளைக்குச் செல்கிறது. இந்த பங்குகளின் தற்போதைய மதிப்பு 5000 கோடி டாலராகும். மார்க் ஜூகர்பெர்க் தனது சொத்தில் 99 சதவீதத்தை அறக்கட்டளைக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x