Published : 13 Jul 2018 08:06 AM
Last Updated : 13 Jul 2018 08:06 AM

வணிக நூலகம்: புதியதோர் தொடக்கம்!

மக்கான வாழ்க்கையை நாம் மகிழ்ச்சியாக வாழவேண்டியது அவசியமான ஒன்று அல்லவா!. ஒரு நல்ல தொழில் நம் கைவசம் இருக்கும்போது, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்றே சொல்லலாம். புதிதாக ஒரு தொழிலைத் தொடங்கி, அதனை வெற்றிகரமாக நடத்தத் தேவையான மனோதிடத்தை பெறுவதற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது “பிளேக் மைக்கோஸ்கி” அவர்களின் “ஸ்டார்ட் சம்திங் தட் மேட்டர்ஸ்” என்னும் இந்தப் புத்தகம்.

பேரார்வம்!

பெரும்பாலும் நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு விஷயத்தில் அதிக ஆர்வத்துடன் இருப்போம். குறிப்பாக எதில் நமக்கு அதிக ஆர்வம் உள்ளது என்பதை சில நேரங்களில் கண்டறிவது கொஞ்சம் சிரமமான காரியம் என்கிறார் ஆசிரியர். நமது உண்மையான ஆர்வத்தை மறப்பதற்கோ அல்லது தற்காலிகமாக இழப்பதற்கோ வாய்ப்புகள் உண்டு. தினசரி வாழ்க்கை முறைகளால் ஏற்படுகின்ற திசைதிருப்பம், தொழில், பணி மற்றும் நமது கனவுகள் தொடர்பான எவ்வித உரையாடலும் சில நாட்களுக்கு இல்லாதது போன்ற பல காரணங்கள் இதற்கு உண்டு.

நமது ஆர்வத்தை சரியாக வெளிக்கொண்டு வந்து அதனை நமக்கு நாமே அறிந்துகொள்ளச் செய்வதற்கான வழிகளைக் கண்டறிவது மிகவும் அவசியமான ஒன்று. அதற்கு என்ன செய்யவேண்டும் என்கிறீர்களா?. நமக்கு பணத்தைப் பற்றிய கவலை இல்லையென்றால், நமக்கான நேரத்தில் நாம் என்ன செய்துகொண்டிருப்போம்?, எந்த விதமான பணிகளை செய்வதற்கு நாம் விருப்பப்படுகிறோம்? மற்றும் நமது செயல்களுக்கான காரணம் என்ன? போன்ற கேள்விகளுக்கு நம்மிடம் பதில் கிடைக்கும்போது, நமது ஆர்வம் தொடர்பான சிறந்த வழிமுறையும் நமக்கு கிடைக்கும்.

பயம்!

பயம் என்பது பெரும்பாலான மக்கள் நினைப்பதை விடவும் மிகவும் பொதுவான ஒரு விஷயம். அதனாலேயே அதனைப்பற்றி பேசவும், அதனை எதிர்கொண்டு வாழவும் செய்கிறோம் அல்லவா!. இது ஒருபுறம் இருந்தாலும், பயத்தை விட துணிச்சலின் மூலமாகவே நாம் அதிகம் ஈர்க்கப்படுகிறோம் என்பதும் உண்மையே. ஒவ்வொருவருக்கும் பயம் என்ற உணர்வு நிச்சயம் வந்தே தீரும், வாழ்க்கையில் இது முழுக்க முழுக்க தவிர்க்க முடியாத ஒன்று. அதிலும், புதிதாக தொழில் தொடங்கும் சமயம், வேலைக்கான நேர்முகத்தேர்வு மற்றும் ஒரு பணிக்காக மக்களை ஒன்றிணைக்கும் செயல்பாடு போன்றவற்றில் பயத்திற்கு பஞ்சமேயில்லை என்கிறார் ஆசிரியர்.

எப்படிப்பார்த்தாலும் பயம் நம் வாழ்நாள் முழுமைக்கும் தொடர்ந்து நம்முடனே இருக்கவே செய்யும். வேலையற்ற நேரத்தில், மற்றொரு பணி கிடைக்குமா என்பதில் பயம். பணியாற்றும் நேரத்தில், பணியில் சிறப்பாக செயல்பட வேண்டுமே என்பதில் பயம். நமது சம்பாத்தியங்களை முதலீடு செய்துள்ள சூழலில், நமது சேமிப்பை இழந்துவிடுவோமோ என்பதில் பயம். புதிதாக ஒரு நிறுவனத்தை தொடங்கும்போது, நமது சேமிப்பு, முயற்சிகள் மற்றும் நம்பிக்கை ஆகிய அனைத்தும் வீணாகிவிடுமோ என்பதில் பயம். இதுவரை இருந்த பயம், இதற்கு மேலும் இருக்கவே செய்யும். ஆக, பயத்தைப்பற்றி அறிந்துக்கொள்வதும் அதனை எதிர்கொள்வதும் அவசியமான ஒன்று என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

எப்படி செயல்படுவது?

செயல்பாடுகளின் மூலமாக நமது பயத்திற்கு பதிலடி கொடுப்பதற்குப் பதிலாக, மிக அதிகமானோர் பயத்தை உணரும் சமயங்களில் தங்களது செயல்பாட்டினை நிறுத்தி விடுகிறார்கள். நமது முன்னேற்றத்தில் பின்னடைவை ஏற்படுத்தும் இத்தகைய செயல்பாட்டினை, மிகவும் கொடூரமான தவறு என்கிறார் ஆசிரியர். அதிலும், வணிகம் அல்லது தொழில் நிறுவனத்தில் பல்வேறு சூழல்களில் எதிர்வரும் பயத்தினை கடந்து முன்னேறிக்கொண்டே செல்லவேண்டியது அவசியம். வெற்றிகரமான நிறுவனங்களைப்பற்றி நாம் படிக்கும்போது, அவர்கள் நிராகரிப்பு, கடன்சுமை, ஆதரவற்ற சூழல் மற்றும் நேரடி தோல்விகள் ஆகியவற்றின் பயங்களை திறம்பட எதிர்கொண்டதையும் அவற்றிலிருந்து மீண்டு வந்ததையும் நம்மால் உணர்ந்துகொள்ள முடியும் என்பதையும் நினைவுகூர்கிறார் ஆசிரியர். நம்மிடமுள்ள அதிக சக்திவாய்ந்த உணர்வுகளுள் ஒன்று பயம். அதில் எந்தளவிற்கு நாம் கவனம் செலுத்துகிறோமோ, அந்தளவிற்கு நமக்கு பலனும் உண்டு என்பதை நினைவில் வைப்போம்.

தெரியாதவை!

தெரியாத விஷயங்களைப்பற்றி நாம் அதிகம் கவலையும் பயமும் அடைகிறோம். ஆனால் உண்மை என்னவென்றால், அனைத்து விஷயங்களும் அறியப்படாதவையே. மக்கள் பொதுவாக தாங்கள் செயல்பட விரும்பும் துறையில் முற்றிலும் நிபுணத்துவம் பெற்ற பிறகே, அதனை தொடங்கவேண்டும் என நினைக்கிறார்கள். அநேகமாக இது சாத்தியமில்லாத ஒரு விஷயம் என்கிறார் ஆசிரியர். ஆம், எவராலும் எல்ல விஷயங்களையும் கற்றுக்கொண்டு பிறகு அத்துறையில் பணியாற்ற தொடங்குதல் என்பது இயலாத ஒன்று. நம்மிடம் ஆற்றலும் வசதியும் உள்ளபோது, துணிந்து நமது செயலை தொடங்கிவிட வேண்டும். நமது ஒட்டுமொத்த நேரத்தையும் கற்றுக்கொள்வதிலேயே செலவிட்டுக்கொண்டிருந்தால், உருப்படியான செயல்பாடு எதையும் நம்மால் ஒருபோதும் தொடங்க முடியாது என எச்சரிக்கிறார் ஆசிரியர். செயல்பாடுகளுடன் சேர்ந்தே நமது கற்றலையும் அமைத்துக்கொள்ள வேண்டுமே தவிர, கற்றலை மட்டுமே செயல்பாடாக வைத்துக் கொள்ளக்கூடாது என்பதே இதிலிருந்து நாம் அறிந்துக்கொள்ளும் செய்தி.

தவறுகள்!

அனைவருக்கும் இயல்பான மற்றும் பொதுவான ஒன்று தவறுகள். தவறுகள் இல்லாத செயல்கள் என்றோ அல்லது தவறுகள் செய்யாத மனிதர்கள் என்றோ எதையும் அல்லது யாரையும் குறிப்பிட்டு சொல்லிவிடமுடியாது. நாம் புதிதாக எதையேனும் தொடங்கும்பொது தவறுகள் ஏற்படுவதில் அச்சமடைகிறோம். உண்மையில் தவறுகளே ஏற்படாத சூழல் என்பது எவ்வித செயலுக்கும் நல்லதல்ல. தவறுகள் உருவாகி, அதிலிருந்து நமக்கான பாடங்களைக் கற்றுக்கொள்வதே சிறந்தது. தொடர்ச்சியான கண்காணிப்பு இருக்கும்போது, தொடக்கத்தில் உருவாகும் ஒரு சில தவறுகளால் ஒட்டுமொத்த செயலுக்கும் எவ்வித பெரிய பாதிப்பும் வந்து விடாது. செயல்பாட்டின் தொலைநோக்கு பயனை பார்க்கவேண்டுமே தவிர, அவ்வப்போது ஏற்படும் சிறு சிறு தவறுகளைக் கண்டு அச்சமடையக்கூடாது.

நம்பிக்கை!

பணியாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என ஒரு நிறுவனத்தின் அனைத்து நிலைகளில் உள்ளவர்களுக்கும் அந்த நிறுவனத்தின்மீதும் அதன் முன்னேற்றத்தின்மீதும் நம்பிக்கை வேண்டும். பணியாளர்கள் முதல் பங்குதாரர்கள் வரை அனைவரையும் தொடர்ச்சியான ஊக்கத்தின் மூலமாக நம்பிக்கையுடையவர்களாக மாற்ற வேண்டியது அவசியம். தகுதியான பொறுப்புகளை வழங்குதல், சுதந்திரமான செயல்பாடு, கருத்துகளை கேட்டறிதல், திறந்த மனதுடன் பிரச்சினைகளை கையாளுதல் மற்றும் நேர்த்தியான அணுகுமுறை ஆகியவற்றின் மூலமாக திடமான நம்பிக்கையை அவர்களிடத்தில் வளர்தெடுக்க முடியும். தாங்களும் இந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் ஒரு பகுதி என்பதை அவர்களின் மனதில் ஆழப்பதியச் செய்யவேண்டும் என்கிறார் ஆசிரியர். இது ஒரு வணிக உத்தி என்பதையும் தாண்டி, ஒரு ஆரோக்கியமான விஷயம் என்பதை உணரவேண்டும்.

தொழில் தொடங்குதல், பணம் சம்பாதித்தல் மட்டுமின்றி நமது தனிப்பட்ட விருப்பங்களை அடைவதற்குமான விஷயங்களும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது சிறப்பு.

p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x