Published : 04 Jul 2018 09:16 AM
Last Updated : 04 Jul 2018 09:16 AM

லண்டன் பங்குச்சந்தையிலிருந்து வெளியேறுவதற்கு தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் காரணமல்ல: வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் விளக்கம்

லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வேதாந்தா ரிசோர்சஸ் வெளியேறுவதற்கு தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் காரணமல்ல என்று வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.

சர்வதேச அளவில் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனம் லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் 33.65 சதவீத பங்குகளை 100 கோடி டாலருக்கு திரும்ப வாங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அந்த நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால், தொழில் விரிவாக்க நடவடிக்கைகளில் இது சாதாரணமாக நடைபெறுவதுதான். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்துக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வெளியேறும் முடிவு தனிப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

வேதாந்தா குழுமம் குடும்ப சொத்து அல்ல, இந்த குழுமத்தில் பல நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் உள்ளனர். இதனால் இந்திய சந்தை மட்டுமல்லாமல் லண்டன் சந்தையிலும் பட்டியலிடப்பட்டது என்றார்.

தூத்துக்குடியில் இயங்கிவரும் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையினால் சுற்றுச் சூழல் மாசுபடுவதாக கடந்த மாதத்தில் அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தினால் இங்கிலாந்தில் அரசியல் கட்சிகள் வேதாந்தா குழுமத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் லண்டன் பங்குச் சந்தையில் வேதாந்தா பங்குகள் சரிவைக் கண்டன. மேலும் சில காலாண்டுகளுக்காவது லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வேதாந்தா பங்குகளை பட்டியலிடுவதை நிறுத்த வேண்டும் என நிர்பந்தம் செய்து வந்தன. இந்த நிலையில் வேதாந்தா ரிசோர்ஸ் லண்டன் சந்தையிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

தூத்துக்குடி சம்பவத்துக்கு பின்னர் நிறுவனம் இந்த முடிவு எடுத்துள்ளதால் அதற்கு தொடர்புள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அகர்வால், அந்த சம்பவத்துடன் நிறுவனத்தின் முடிவுக்கு எந்த தொடர்பும் இல்லை. நிறுவனங்களின் விரிவாக்க நடவடிக்கைகளில் இது சாதாரணமாக நிகழக்கூடியதுதான் என்றார்.

வேதாந்தா குழுமம் காப்பர், அலுமினியம், இரும்புத்தாது, கச்சா எண்ணெய் மற்றும் உருக்கு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனங்கள் செயல்படும் இடங்களில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன. தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்கிற போராட்டத்தினால் 13 பேர் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வெளியேறும் முடிவால் எந்தவித பாதகமான தாக்கமும் இல்லை என்று குறிப்பிட்ட அகர்வால், இந்த முடிவுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் என்று சுட்டிக்காட்டினார். ஒன்று நிறுவன செயல்பாடுகளை எளிமையாக்குவது. ஏற்கெனவே இப்படியான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இந்தியாவில் உள்ள நிறுவனங்களை இணைத்துதான் வேதாந்தா நிறுவனத்தை உருவாக்கினோம். வேதாந்தா நிறுவனத்துடன் கெய்ர்ன் நிறுவனத்தை இணைத்தோம். இந்த பரிவர்த்தனைகள் நிர்வாக ரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கை. இரண்டாவதாக இந்திய சந்தை முதிர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இதனால் இந்திய சந்தையில் கவனம் செலுத்த உள்ளோம். லண்டன் சந்தையில் தனியாக பட்டிலிடுவது தேவையில்லை என்றும் கூறினார்.

அகர்வால் தலைமையிலான வோல்கான் அறக்கட்டளை நிறுவனம், வேதாந்தா பங்குகளை வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஒரு பங்குவிலை 825 பென்ஸ் என்கிற மதிப்பில் 33.65 சதவீத பங்குகளை 100 கோடி டாலருக்கு வாங்க உள்ளது.

லண்டன் பங்குச் சந்தை விதிகள்படி இந்த நடவடிக்கை 3 முதல் 6 வாரங்களுக்கு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்குகளை வாங்குவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள வேதாந்தா நிறுவனம் மற்றும் ஹிந்துஸ்தான் ஸிங்க் நிறுவன பங்குகள் இந்த நடவடிக்கையில் சேராது என்றும் அகர்வால் கூறினார்.

2003-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லண்டன் பங்கு சந்தையில் வேதாந்தா பங்குகள் பட்டியலிடப்பட்டன. ஒரு பங்கு 390 பவுன்ஸ் வீதம் 500 மில்லியன் பவுண்ட் நிதி திரட்டப்பட்டது. தற்போது குழும நிறுவனங்களை இணைப்பதற்கான வேறு எந்த திட்டமும் இல்லை என்றும் அகர்வால் கூறினார்.

லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் இந்திய நிறுவனம் வேதந்தா ரிசோர்சஸ் என்பது குறிப்பிடத்தகது. வேதாந்தா ரிசோர்ஸ் நிறுவனம், வேதாந்தா நிறுவனத்தில் 50.1 % பங்குகளையும், ஹிந்துஸ்தான் ஸிங்க் நிறுவனத்தில் 65 % பங்குகளையும் வைத்துள்ளது. ஆப்பிரிக்காவின் ஸாம்பியாவில் உள்ள கொங்கொனா காப்பர் நிறுவனத்தில் 79.4 % பங்குகளையும் வைத்துள்ளது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x