Published : 03 Jul 2018 08:49 AM
Last Updated : 03 Jul 2018 08:49 AM

ஆன்லைன் ராஜா 33: உன் கண்ணில் நீர் வழிந்தால்....

பி

ரச்சினைகள் சிங்கிளாக வரும் சிங்கங்களல்ல, கூட்டமாகத்தான் வரும். வந்தன. வெளியுலக நெருக்கடிகள் போதாதென்று, கம்பெனிக்குள்ளும் குழப்பங்கள். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் ஃபிரீமான்ட் நகரத்தில், அலிபாபாவின் ஆய்வு & அபிவிருத்தி மையம் தொடங்கியிருந்தாரல்லவா? எதிர்பாராத பல நெருக்கடிகள். ஃப்ரீமான்டுக்கும், ஹாங்ஸெளவுக்கும் 15 மணிநேர கால வித்தியாசம். ஒருவர் வேலை பார்க்கும்போது அடுத்தவர் கும்பகர்ணனிடம் சரணடைந்திருப்பார். இரவினில் வேலை, பகலினில் தூக்கம் என்று பலர் உழைக்கவேண்டி வந்தது.

ஃபிரீமான்டில் இருந்த மையத் தலைவர் ஜான் வூ. அவருடனிருந்த 30 கம்ப்யூட்டர் திறமைசாலிகளுக்கும் சீன மொழி அரிச்சுவடி கூடத் தெரியாது. ஹாங்ஸெள, ஹாங்காங் பணியாளர்கள் ஆங்கிலம் பேசுவதில் ததிங்கிணத்தோம். சாதாரண உரையாடலிலேயே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த அழகில், கம்ப்யூட்டர் தொழில் நுட்பப் பிரச்சினைகளை எப்படிப் புரிந்துகொண்டு வாடிக்கையாளர் சேவை தருவார்கள்? முடியவேயில்லை. கஸ்டமர்கள் குறைகள் குவிந்தன, தேங்கின. குழப்பம், குழப்பம்.

இத்தோடு, டாட்காம் குமிழி வெடிப்பால், பிசினஸ் தேக்கம். செலவைக் குறைத்தே ஆகவேண்டும். இது மருந்து கொடுத்துத் தீர்க்கும் நோயல்ல. அறுவை சிகிச்சை செய்யவேண்டிய வியாதி. ஜாக் எப்போதுமே ஜாலி மனிதர். மலைபோல் வரும் சிக்கல்களையும் சிரித்துக்கொண்டே சந்திப்பார். அவற்றைப் பனியாக மறையவைப்பார். அவரே இப்போது கலங்கினார். அலிபாபா நிலைக்க, அவரை நம்பியிருக்கும் ஊழியர் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்காமலிருக்க, அமெரிக்காவின் 30 ஊழியர்களில் 15 பேரை நீக்கம் செய்யவேண்டிய கட்டாயம்.

ஜாக் மாவைப் பொறுத்தவரை, ஊழியர்கள் சம்பளத்துக்கு வேலை பார்க்கும் கொத்தடிமைகளல்ல. சொந்தங்கள். சீனாவிலிருந்து இ-மெயில் அனுப்பி அவர்களுக்குக் “குட் பை” சொல்லலாம். மனம் ஒத்துக்கொள்ளவில்லை. நேரடியாக அவர்களைச் சந்தித்துப் பேசவேண்டும், இதற்காகவே, அமெரிக்கா வந்தார். அவரோடு, அலிபாபாவின் பொதுஜனத் தொடர்பு வைஸ் பிரசிடென்ட் போர்ட்டர் எரிஸ்மேன் (Porter Erisman). அமெரிக்கர். புகழ்பெற்ற கெல்லாக் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்டில் (Kellogg School of Management) எம்.பி.ஏ. படித்தார். வித்தியாச அனுபவங்கள் தேடுபவர். அமெரிக்காவில் கிடைத்த பல வேலைகளை உதறிவிட்டுச் சீனா வந்தார். ஓகில்வி அன்ட் மாத்தெர் (Ogilvy & Mather) என்னும் விளம்பர நிறுவனத்தில் சேர்ந்தார். பல ஆன்லைன் கம்பெனிகளுக்கு விளம்பர ஆலோசனை தரும் வேலை. அங்கே இரண்டு வருடங்கள். சலிப்பு வந்தது. இன்டர்நெட் ஸ்டார்ட்-அப் கம்பெனிகளில் வாய்ப்புத் தேடினார். ஜாக் மாவைச் சந்தித்தார். சம்பிரதாயமான இன்டர்வியூ இல்லை. நட்பான உரையாடல். இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்தது. அலிபாபாவின் பொதுஜனத் தொடர்பு வைஸ் பிரசிடென்ட் அப்பாயின்ட்டெட்.

எரிஸ்மேன் கம்பெனியின் ஆலோசனை அறைக்கு அனைத்து ஊழியர்களையும் வரச் சொன்னார். எதற்கு இந்தச் சந்திப்பு என்று அவர்களுக்கு எந்த முன்னறிவிப்பும் தரவில்லை. அதிர்ச்சி சேதியைத் தெரிவிக்கப்போகும் ஜாக் மா வயிற்றில் பட்டாம்பூச்சிகள் படபடத்தன.

மனதில் தயக்கம், குழப்பம். வார்த்தைகளில் தடுமாற்றம். எரிஸ்மேனிடம் சொன்னார், ``இன்றுவரை அலிபாபாவில் ஆட்களை அப்பாயின்ட் தான் செய்திருக்கிறோம். முதல்முறையாக நீக்கப்போகிறோம். சகோதர ஊழியர்களிடம் என்ன பேசவேண்டுமென்றே எனக்குத் தெரியவில்லை.”

வழக்கமான துள்ளல் நடை இல்லை. ஆலோசனை அறைக்கு வந்தார். பேசத் தொடங்கினார்.

“நீங்கள் அத்தனை பேரும் எத்தனை அர்ப்பணிப்போடு, கடுமையாக உழைக்கிறீர்கள் என்பது எனக்கும், சீனாவில் இருக்கும் அத்தனை பேருக்கும் தெரியும். அதையும் மீறி, உங்களுக்கு ஒரு கெட்ட செய்தியைச் சொல்ல வந்திருக்கிறேன். ஃப்ரீமான்டில் ஆட்குறைப்பு செய்யப்போகிறோம்.”

எல்லோரும் தலையைக் கவிழ்த்துக்கொண்டார்கள். ஜாக் மாவின் கண்களைச் சந்திக்க பயம். பலியாடுகளில் தான் ஒருவனாக இருக்கக் கூடாதே என்னும் மானசீக வேண்டுதல், வழிபாடு.

ஜாக் மா தொடர்ந்தார்.

“சில மாதங்களுக்கு முன்னால், அலிபாபாவின் இணையதளத்தை ஆங்கிலத்தில் தொழில்நேர்த்தியுடன் உருவாக்கும் குறிக்கோளுடன் இங்கே ஆய்வுமையம் தொடங்கினோம். ஆங்கில அறிவும், இன்டர்நெட் தொழில்நுட்பமும் கொண்டவர்கள் இங்கே, ஆங்கில இணையதளம் பயன்படுத்தும் கஸ்டமர்கள் இங்கே. எந்தக் கோணத்தில் சிந்தித்தாலும், அது சரியான முடிவாக அப்போது தோன்றியது. திரும்பிப் பார்க்கும்போது, அந்த முடிவால், தீர்வுகளைவிட அதிகமாகப் பிரச்சினைகள். முதல் பிரச்சினை, நம் இரு நாடுகளுக்கும் இருக்கும் நேர வித்தியாசம். இரண்டாவது. மொழிப் பிரச்சினை. அலிபாபா நமக்கு ஒரு கனவு. அதை நனவாக்க, நாம் சில யதார்த்தங்களை மறக்கக்கூடாது. இன்றைய ஆன்லைன் கம்பெனிகள் இருக்கும் நிலையில், இத்தனை ஆள் பலத்தோடு அமெரிக்காவில் மையம் நடத்துவது முடியாத காரியம். நாளை நாம் வளரவேண்டுமானால், இன்று ஆட்குறைப்பு செய்தேயாகவேண்டும்.

நான் ஆத்மசுத்தியோடு உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். நடந்தவையெல்லாம், முழுக்க முழுக்க என் தவறு. வருங்காலத்தில், அலிபாபா ஆரோக்கிய நடை போடும்போது, நீங்கள் திரும்பி வரலாம். நாம் எல்லோரும் சேர்ந்து உழைத்து அலிபாபாவை உயர்த்தலாம்.”

ஜாக் மா சி.இ.ஓ. தன் செயலுக்கு அவர் இத்தனை விளக்கவுரை தரத் தேவையில்லை. தந்தார். ஏனென்றால், அவர் வெறும் முதலாளியில்லை, ஊழியர்கள் கண்களில் நீர் வழிந்தால், தன் நெஞ்சில் உதிரம் கொட்டும் ஈர மனசுக்காரர்.

சில நாட்களுக்குப் பின். எரிஸ்மேனுக்கு ஃபோன், மறுமுனையில் ஜாக் மா. அவர் குரலில் தடுமாற்றம். எரிஸ்மேன் என்னமோ, ஏதோ என்று பயந்தார்.

“எரிஸ்மேன், நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?”

“தாராளமாக.”

”நான் கெட்டவனா எரிஸ்மேன்?”

”என்ன சொல்கிறீர்கள் ஜாக்?”

“ஏகப்பட்ட ஊழியர்கள் எனக்கு போன் செய்கிறார்கள். ஏன் இப்படிச் செய்துவிட்டாய் என்று கோபப்படுகிறார்கள். ஆட்குறைப்புச் செய்யும் நிலையை உண்டாக்கியது என் தவறுதான். இதனால், நான் கெட்டவன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?”

எரிஸ்மேனுக்கு அதிர்ச்சி. ஜாக் மா நல்லவர், நேர்மையானவர், நட்பையும், உறவையும் பெரிதும் மதிப்பவர் என்று தெரியும். ஆனால், அவருக்குள் இத்தனை மென்மையா? அலெக்சாண்டர், செங்கிஸ்கான், ஜூலியஸ் சீஸர், நெப்போலியன் உலகம் சந்தித்திருக்கும் மாவீரர்கள், மகா தளபதிகள். அன்றாட வாழ்க்கையில் உறவுகள், நண்பர்களிடம் பாசமும், அன்பும் காட்டியவர்கள். ஆனால், யுத்தங்களுக்கு வரும்போது சொந்த உணர்வுகளை ஓரம்கட்டி வைத்துவிட்டு வருவார்கள். எதிரிகளை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவிப்பார்கள். வரலாற்றுப் பக்கங்களில் அவர்கள் நிரந்தர இடம் பிடித்திருப்பதற்குக் காரணம் இந்தப் போர்க்குணம்.

பிசினஸ் நவீனகால யுத்தம். இந்த யுத்தத்தில். அலெக்சாண்டர், செங்கிஸ்கான், ஜூலியஸ் சீஸர், நெப்போலியன் ஆகியோருக்கு ஒப்பானவர் ஜாக் வெல்ஷ் (Jack Welch). உலக மேனேஜர்களுக்கு வழிகாட்டி 1981 முதல் 2001 வரை, இருபது ஆண்டுகள் அமெரிக்க ஜெனரல் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். 1981 – இல், கம்பெனி தள்ளாடிக்கொண்டிருந்தது. சந்தை மதிப்பு 14 பில்லியன் டாலர்கள். ஐந்தே வருடங்களில் லாபம் காட்டினார். 2001 – இல் தலைமைப் பதவியிலிருந்து இறங்கியபோது, சந்தை மதிப்பு 400 பில்லியன் டாலர்கள்.

ஜாக் வெல்ஷ் நிர்வாகத்தின் முக்கிய அம்சம், அவர் செயல்படுத்திய 20-70-10 முறை. அவரே இதை விளக்குவார், “உங்கள் ஊழியர்களில் தலைசிறந்த 20 சதவிகிதம் பேரைச் செல்லப் பிள்ளைகளாக நடத்தவேண்டும்; அடுத்த வரிசையில் இருக்கும் 70 சதவிகிதம் பேரின் திறமைகளைப் பயிற்சிகள் மூலம் பட்டை தீட்டி, டாப் 20 சதவிகிதத்துக்குக் கொண்டுபோக வேண்டும்; அடிமட்ட 10 சதவிகிதம் பேரை வேலையிலிருந்து துரத்தவேண்டும். இது தோட்டத்தில் களையெடுப்பது மாதிரி. ” ஜாக் வெல்ஷ் இப்படிச் சீட்டுக் கிழித்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்துப் பன்னிரெண்டாயிரம்!

ஜாக் வெல்ஷின் 20-70-10 தந்த பலன் நம் எல்லோருக்கும் பாடம். ஊழியர்களிடம் அன்போடு, பாசத்தோடு பழகலாம். ஆனால், கம்பெனியின் வருங்காலமே கேள்விக்குறியாக இருக்கும் தருணங்களில் மகாபாரத அர்ஜூனனாக உடல் நடுங்கி, வாய் உலர்ந்து, காண்டீபம் கை நழுவ நிற்கக்கூடாது. இதயத்தை இரும்பாக்கிக்கொண்டு கசப்பான முடிவுகள் எடுக்கவேண்டும். தான் கம்பெனிக்குத் தருவது விஷமல்ல, கசப்பு மருந்து என்னும் தெளிவு வேண்டும். இதில் தடுமாறும்போது, அந்தத் தலைவர் மதிக்கும் நண்பர்கள் அவருக்கு ஊக்கமாத்திரை தரவேண்டும். எரிஸ்மேன் தந்தார்.

”ஜாக் மா, எதைச் செய்யவேண்டுமோ, அதைத்தான் நீங்கள் செய்திருக்கிறீர்கள். பதினைந்து பேரை வேலையைவிட்டு நீக்கி, ஆயிரத்துக்கும் அதிகமானோரின் வருங்காலத்தைக் காப்பாற்றியிருக்கிறீர்கள்.”

”நன்றி எரிஸ்மேன். உங்கள் கணிப்பு சரியாக இருக்கட்டும்.”

எரிஸ்மேன் பேச்சு ஜாக் மாவுக்குத் தெம்பு தந்தது. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்று அலிபாபாவின் பிற பிரச்சினைகளில் கவனம் காட்டினார். அவற்றுக்கா பஞ்சம்? ஆயிரம், ஆயிரமாய்ப் பூச்சாண்டி காட்டின.

(குகை இன்னும்திறக்கும்)

slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x