Last Updated : 01 Jul, 2018 12:30 PM

 

Published : 01 Jul 2018 12:30 PM
Last Updated : 01 Jul 2018 12:30 PM

2028-வரை ஆண்டுதோறும் 40 ஜிகாவாட் மரபுசாரா எரிசக்தி திட்டங்கள் ஏலம்: அரசு செயலர் ஆனந்த் குமார் தகவல்

புதுடெல்லி

40 ஜிகாவாட் அளவுக்கான மரபு சாரா எரிசக்தி திட்டங்களை இந்தியா ஏலம் விட இருப்பதாக புதிய மற்றும் மரபுசாரா எரிசக்தி துறை செயலர் ஆனந்த் குமார் தெரிவித்துள்ளார். 30 ஜிகாவாட் சோலார் திட்டங்கள் மற்றும் 10 ஜிகாவாட் காற்றாலை திட்டங்கள் அடுத்த பத்தாண்டுகளுக்கு (2028-வரை) ஏலம் விடப்பட இருக்கின்றன.

இந்திய காற்றாலை டர்பைன் உற்பத்தியாளர்கள் ஏற்பாடு செய்திருந்த உலக காற்று தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட ஆனந்த் குமார் இவ்வாறு கூறினார். 2030-ம் ஆண்டு தேவையை எட்ட 862 ஜிகாவாட் மின் ஆற்றல் தேவைப்படும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

2030-ம் ஆண்டு தேவையை எட்டுவதற்கு 350 ஜிகாவாட் சோலார் சக்தி தேவை. 2022-ம் ஆண்டுவரை 100 ஜிகாவாட்டுக்கு திட்டங்கள் தீட்டப்பட்டுவிட்டன. எனவே மீதமுள்ள 250 ஜிகாவாட்டை அடைவதற்கு ஆண்டுக்கு 30 ஜிகாவாட் வீதம் 2020-ம் ஆண்டு முதல் ஏலம் விடப்படவேண்டும்.

காற்றாலை மின்சக்தியை பொறுத்தவரை 2030-ம் ஆண்டு தேவையை பூர்த்தி செய்ய 140 ஜிகாவாட் தேவை. 2020-ம் ஆண்டுக்குள் 60 ஜிகாவாட் காற்றாலை திட்டங்கள் ஏலம் விடப்படும். ஆண்டுக்கு 10 ஜிகாவாட் வீதம் 2022-ம் ஆண்டுவரை காற்றாலை திட்டங்கள் ஏலம் விடப்படும்.

இவற்றின் மூலம் 2030-ம் ஆண்டுக்குள் தேவைப்படும் 862 ஜிகாவாட் உற்பத்தியை அடையமுடியும். 2030-ம் ஆண்டுக்குள் நம்மிடம் 500 ஜிகாவாட் அளவுக்கான மரபுசாரா எரிசக்தி இருக்கும், சோலார் சக்தி 350 ஜிகாவாட் அளவுக்கும், காற்றாலை சக்தி 140 ஜிகாவாட் அளவுக்கும் இருக்கும். தற்போது நம்மிடம் 70 ஜிகாவாட் மரபுசாரா எரிசக்தி உள்ளது. இவற்றில் சோலார் சக்தி 22 ஜிகாவாட் மற்றும் காற்றாலை சக்தி 34 ஜிகாவாட் ஆகும். இந்த ஏல நடவடிக்கையின் மூலம் உள்ளூர் மரபுசாரா உபகரண உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள்.

எந்த முறையில் ஏலத்தை நடத்துவது என்பது குறித்து லக்னோ ஐஐஎம்மிடமிருந்து ஒரு அறிக்கை கேட்டுள்ளோம். ஜூலையில் இந்த அறிக்கை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அதன்பிறகு அரசு எந்த முறையில் ஏலம் விடுவது என முடிவெடுக்கும். சிறு முதலீட்டாளர்கள் பாதிக் கப்படாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அவர் கூறினார்.

மத்திய மின்சார ஆணையம் மற்றும் பிற அரசு அமைப்புகள் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மின் தேவை ஆண்டுக்கு 6 சதவீதம் அதிகரித்து 862 ஜிகாவாட்டாக இருக்கும் என கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.       –

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x