வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி என்ற தகவலால் உள்நாட்டு சந்தையில் ஓசூர் ரோஜா மலர்களுக்கு விலை சரிவு

காதலர் தின விற்பனைக்காக ஓசூர் அருகே பாகலூர் பகுதியில் அறுவடை செய்த ரோஜா மலர்களை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
காதலர் தின விற்பனைக்காக ஓசூர் அருகே பாகலூர் பகுதியில் அறுவடை செய்த ரோஜா மலர்களை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
Updated on
2 min read

ஓசூர்: வெளிநாடுகளிலிருந்து ரோஜா இறக்குமதி செய்யப்படுவதாக வெளியாகி வரும் தகவலால் உள்நாட்டு சந்தையில் ஓசூர் ரோஜாவுக்கு விலை சரிந்துள்ளது. இதனால், காதலர் தின வர்த்தகத்தை நம்பியிருந்து விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி, கெலமங்கலம், பேரிகை, பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் பசுமைக் குடில் அமைத்து சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தாஜ்மஹால் (சிவப்பு) நோப்ளாஸ், கோல்டு ஸ்டிரைக். சவரன், அவலஞ்சர், பெர்னியர் உள்ளிட்ட 22 வகையான ரோஜா மலர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இம்மலர்கள் கடந்த காலங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதலர் தினக் கொண்டாட்டத்தின்போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. குறிப்பாக காதலர் தினத்துக்கு தாஜ்மஹால், அவலாஞ்சி ரக மலர்கள் சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு விற்பனைக்குச் சென்றன. மேலும், சர்வதேச சந்தையில் ஓசூர் ரோஜாவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் ரோஜா மலர்களை அங்குள்ள விவசாயிகள் உற்பத்தி செய்வது அதிகரித்துள்ளதால், சர்வதேச சந்தையில் ஓசூர் ரோஜாவுக்கு வரவேற்பு குறைந்தது. மேலும், விமான கட்டணம் அதிகரிப்பால் ஏற்றுமதியை ஓசூர் பகுதி விவசாயிகள் குறைத்தனர். இருப்பினும் உள் நாட்டு சந்தையில் நல்ல வரவேற்பு இருப்பதால், உள்நாட்டு வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டு ரோஜா உற்பத்தி செய்யப்பட்டு ஜெய்பூர், டெல்லி, மும்பை மற்றும் கேரள மநிலத்துக்கு அதிக அளவில் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

இதனிடையே, வரும் 14-ம் தேதி காதலர் தின உள்நாட்டு வர்த்தகத்தை மையமாகக் கொண்டு 2 கோடி ரோஜா மலர்கள் அறுவடைக்கு விவசாயிகள் இலக்கு நிர்ணயம் செய்து உற்பத்தி செய்துள்ள நிலையில், வெளிநாடுகளிலிருந்து இந்திய வியாபாரிகள் ரோஜா இறக்குமதி செய்து வருவதாகத் தகவல் பரவி ஓசூர் ரோஜா விலை சரிந்துள்ளது. இதனால், உள்நாட்டு ரோஜா வர்த்தகமும் பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக ரோஜா மலர் உற்பத்தியாளர்கள் விவசாயிகள் சங்க தலைவர் ஹரீஷ் கூறியதாவது:

சர்வதேச சந்தையில் ஓசூர் ரோஜாவுக்கு வரவேற்பு குறைந்த நிலையில், உள்நாட்டு விற்பனை விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி வந்தது. இதனால், காதலர் தின வர்த்தகத்துக்காக ஓசூர் விவசாயிகள் வங்கிக் கடன் பெற்று ரோஜா உற்பத்தியில் ஈடுபட்டனர். தற்போது, எத்தியோப்பியா, கென்யா உள்ளிட்ட நாடுகளிலிருந்து உள்நாட்டு சந்தைகளுக்கு ரோஜா அதிக அளவில் இறக்குமதி செய்யபடுவதாகக் கடந்த சில நாட்களாக வியாபாரிகள் மூலம் தகவல் பரவி வருகிறது.

இதனால், காதலர் தினத்துக்கு உள்நாட்டு வியாபாரிகளிடமிருந்து ஓசூர் ரோஜாவுக்கு ஆர்டர் குறைந்துள்ளது. மேலும், ரூ.30-க்கு விற்பனையான ஒரு ரோஜா, தற்போது ரூ.15-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இதனால், இந்தாண்டு காதலர் தினத்தில் உள்நாட்டு ரோஜா வர்த்தகத்திலும் பாதிப்பு ஏற்படும் நிலையுள்ளது.

வெளிநாட்டு ரோஜா இறக்குமதிக்கு அரசு தடை செய்திருந்த நிலையில், தற்போது வரும் தகவலின் உண்மைத்தன்மையை அரசு தெளிவுபடுத்த வேண்டும். மேலும், ரோஜா சாகுபடியைப் பாதுகாக்க கென்யா, எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளில் அந்நாட்டு அரசுகள் இலவச நிலம் உள்ளிட்ட சலுகை வழங்குவதுபோல, தமிழக விவசாயிகளுக்கு அரசு சலுகைகள் வழங்க வேண்டும். மேலும், ரோஜாவுக்கு விதிக்கப்படும் 18 சதவீத வரியை நீக்க வேண்டும். ரோஜா இறக்குமதிக்கும், காகித மலர் விற்பனைக்கும் அரசு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in