Published : 05 Jun 2018 09:24 AM
Last Updated : 05 Jun 2018 09:24 AM

ஆர்பிஐ துணை கவர்னர் எம்.கே. ஜெயின்

ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக எம்.கே. ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியை வகித்து வந்த எஸ்.எஸ். முந்த்ரா கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெற்றார். ஏறக்குறைய ஓராண்டாக இப்பதவி காலியாக இருந்தது.

ஐடிபிஐ வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக எம்.கே. ஜெயின் உள்ளார். பொறுப்பேற்கும் நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு ஆர்பிஐ துணை கவர்னராக இருப்பார்.

டெபுடி கவர்னர் பதவிக்கு உரிய நபர்களை மத்திய அமைச்சரவை செயலர் தலைமையிலான தேடுதல் குழு தேர்வு செய்து கடந்த மே 10-ம் தேதி நேர்முகத் தேர்வு நடத்தியது. நேர்முகத் தேர்வில் வங்கி அதிகாரிகள் மட்டுமின்றி மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

தேர்வுக் குழுவில் ரிசர்வ் வங்கி கவர்னர், நிதி சேவைகள் துறைச் செயலர் மற்றும் சுயேச்சையான உறுப்பினர்கள் சிலரும் இடம்பெற்றிருந்தனர்.

வங்கித் துறையில் 30 ஆண்டு அனுபவம் கொண்ட மகேஷ் குமார் ஜெயின் 2017 மார்ச் முதல் ஐடிபிஐ வங்கியின் நிர்வாக இயக்குநராக உள்ளார். அதற்கு முன்பு சென்னையைத் தலைமையிடமாகக்கொண்ட இந்தியன் வங்கியன் நிர்வாக இயக்குநராக 2015-ம் ஆண்டு முதல் இருந்தார்.

வங்கி சார்ந்த பல்வேறு குழுக்களில்இடம்பெற்றுள்ளார். பொதுத்துறை வங்கிகளில் தொடர் உள் தணிக்கை மறு சீரமைப்பு குறித்து அமைக்கப்பட்ட வசந்த் சேத் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையை வகுக்கும் குழுவில் இடம்பெற்றுள்ள நான்கு துணை கவர்னர்களில் இரண்டு பேர் ஆர்பிஐ-யில் இருந்து நியமிக்கப்படுவர். ஒருவர் வர்த்தக வங்கியிலிருந்தும் மற்றொருவர் பொருளாதார நிபுணராகவும் இருப்பர்.

டெபுடி கவர்னராக பொறுப்பேற்கும் இவருக்கு மாத ஊதியம் ரூ 2.25 லட்சமும் இதர அலவன்ஸ்களும் அளிக்கப்படும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x