Published : 24 Jun 2018 10:10 AM
Last Updated : 24 Jun 2018 10:10 AM

ருச்சி சோயா நிறுவன ஏலம் கேட்பு விவகாரம்: அதானி வில்மருக்கு பதஞ்சலி கடும் எதிர்ப்பு

நிதி நெருக்கடியில் சிக்கி திவால் நிலைக்குத் தள்ளப்பட்டு ஏலத்துக்கு வந்துள்ள ருச்சி சோயா நிறுவனத்தை அதானி வில்மர் குழுமம் ஏலம் கேட்டுள்ளது. இதற்கு யோக குரு ராம்தேவ் உருவாக்கிய பதஞ்சலி நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ருச்சி சோயா நிறுவனத்தை வாங்க விண்ணப்பித்த நிறுவனங்களுள் பதஞ்சலியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ருச்சி சோயா நிறுவனத்துக்கு கடன் அளித்த நிறுவன குழுவுக்கு (சிஓசி) பதஞ்சலி கடிதம் எழுதியுள்ளது. அதில் அதானி வில்மர் நிறுவனத்துக்கு ஏலம் கேட்பதற்கான தகுதி குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக ஜூன் 10-ம் தேதி சிஓசி-க்கு கடிதம் எழுதியுள்ளதாக பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்.கே. திஜாரவாலா தெரிவித்துள்ளார்.

திவால் சட்ட விதி 29ஏ பிரிவின் கீழ் சில கேள்விகளை அக்கடிதத்தில் எழுப்பியுள்ளதாகத் தெரிகிறது.இதனிடையே ருச்சி சோயா நிறுவனத்துக்கு கடன் அளித்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவன அதிகாரிகள் ஏலம் கேட்ட இரு நிறுவனங்கள் (அதானி வில்மர் மற்றும் பதஞ்சலி) குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது.

திவால் சட்ட விதி 29-ஏ பிரிவின் கீழ், திவாலான நிறுவனத்தை வாங்க விண்ணப்பிக்கும் நிறுவனத்துக்கு சில குறிப்பிட்ட தகுதிகள் இருக்க வேண்டும். இதன்படி ஏலம் கேட்கும் நிறுவனத்துக்குக தீர்வு குறித்த விதி முறைகளை தெரிவிக்கக் கூடாது என்பதாகும். அதே சமயம் ஏலம் கேட்கும் நிறுவனத்தின் உரிமையாளரின் உறவினர் எவரும் வேறு எந்த நலிவடைந்த நிறுவனத்துடனும் தொடர்புடையவராக இருத்தல் கூடாது என்பதும் விதியாகும்.

திவால் நடைமுறை விதியின்கீழ் ருச்சி சோயா 2017-ம் ஆண்டு டிசம்பரில் விண்ணப்பித்தது. இந்நிறுவனம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ. 10,400 கோடியாகும்.

ருச்சி சோயா நிறுவனத்தை ஏலம் கேட்ட அதானி வில்மரின் நிர்வாக இயக்குநர் பிரணவ் அதானி. இவர் அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானியின் உறவினராவார். இவரது மனைவி நம்ரதாவின் தந்தை விக்ரம் கோத்தாரி. இவரது நிறுவனம் ரோட்டோமேக். இந்நிறுவனம் பாங்க் ஆப் பரோடா நிதி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் விக்ரம் கோத்தாரியை சிபிஐ அதிகாரிகள் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்தனர்.

ஜூன் 6-ம் தேதி குடியரசுத் தலைவர் பிறப்பித்த திவால் மசோதா அவசர சட்டத்தின்படி ஏலம் கேட்பவரின் உறவினர் எவரும் மற்றொரு பிரச்சினைக்குரிய நிறுவனத்தில் சம்பந்தப்பட்டிருக்கக் கூடாது என்பதாகும். இருப்பினும் இரு நிறுவனங்களும் அவசர சட்டம் பிறப்பிக்கப்படுவதற்கு முன்பாகவே ஏலத்துக்கு விண்ணப்பித்துவிட்டன. இந்நிலையில் சட்டப் பிரிவு 29ஏ பிரிவு பொருந்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. - ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x