Published : 18 Jun 2018 09:38 AM
Last Updated : 18 Jun 2018 09:38 AM

மதுவுக்கான செலவு மீதமாவதால் பிஹாரில் வாழ்க்கை தரம் மேம்பட்டிருக்கிறது

பிஹாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால் குற்ற நடவடிக்கைகள் குறைத்திருக்கிறது. மேலும் மதுவுக்காக செலவு செய்யப்படும் தொகை மீதமாவதால் அத்தியாவசிய தேவையான உணவு, உடை ஆகியவற்றுக்கு செலவு செய்வது உயர்ந்திருப்பதாக பெண்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். ஆசிய மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் இவை தெரிய வந்திருக்கிறது.

விலை உயர்ந்த புடவைகள் வாங்குவது 1,751 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதேபோல உயர்ரக ஆடைகள் வாங்குவது 910 சதவீதம் அதிகரித்திருக்கிறது. தேன் வாங்குவது 380 சதவீதம் உயர்ந்திருக்கிறது. 2016-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி மதுவிலக்கு கொண்டுவரப்பட்டது. முதல் ஆறு மாதங்களில் இந்த மாற்றம் நடந்திருப்பதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

பிடிஐ நிறுவனம் நடந்திய ஆய்வில் கலந்துகொண்ட பெண்களில் 58 சதவீதத்தினர், குடும்பத்தில் அதிக மதிப்பு இருப்பதாகவும், குடும்ப முடிவுகளில் தங்களால் தாக்கம் ஏற்படுத்த முடிகிறது என்றும் தெரிவித்திருக்கின்றனர். அதேபோல 22 சதவீத பெண்கள் வீட்டு விஷயங்கள் மட்டுமல்லாமல் கிராம மேம்பாடு தொடர்பான விஷயங்களிலும் கருத்து கூற முடிகிறது என தெரிவித்திருக்கின்றனர்.

அதேபோல பணத்துக்காக கடத்துவது 66.6 சதவீதம் குறைந்திருக்கிறது. கொலை வழக்குகளும் 28.3 சதவீதம் குறைவாக பதிவாகி இருக்கிறது.

2011-ம் ஆண்டு தகவலின்படி பிஹார் மாநிலத்தில் 44 லட்சம் மக்கள் குடிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள். மாதம் ரூ.440 கோடிக்கு செலவு செய்திருக்கிறார்கள். ஆண்டுக்கு குடி மூலமாக மட்டும் ரூ.5,280 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது.

டெவலப்மெண்ட் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டியூட் நடத்திய மற்றொரு ஆய்வில் மதுவிலக்குக்கு பிறகு வீட்டு தேவைகளுக்கு செலவு செய்வது உயர்ந்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. நவடா, புர்னியா, சமஸ்திபுர், மேற்கு சம்பரன் மற்றும் கைமூர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் ஒரு குடும்பம் உணவுக்காக வாரத்தில் ரூ.1,331 செலவு செய்கிறது.

ஆனால் மதுவிலக்குக்கு முன்பு ரூ.1,005 மட்டுமே செய்யப்பட்டது. தவிர மதுவிலக்குக்கு பிறகு 19 சதவீத குடும்பங்கள் புதிய சொத்துகளை வாங்கி இருக்கிறார்கள்.

பிஹாரில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மதுபான ஆலையை அமைத்திருந்தன. அரசின் தடைக்கு பிறகு இந்த ஆலைகள் உற்பத்தியை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் 600-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்களது வேலையை இழந்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x