Published : 28 Jun 2018 09:09 AM
Last Updated : 28 Jun 2018 09:09 AM

சட்ட பூர்வமாக வரும் பணியாளர்களை வரவேற்கிறோம்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு

வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு பணியாளர்களை வரவேற்கிறோம். ஆனால் அவர்கள் சட்ட பூர்வமான வழியில் அமெரிக்காவுக்கு வருபவர்களாக இருக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். வெள்ளைமாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: முன்பு இல்லாத அளவுக்கு பல நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு நிறுவனங்கள் வரத்தொடங்கி இருக்கின்றன. எங்களுக்கு பணியாளர்கள் தேவை. ஆனால் அவர்கள் சட்ட பூர்வமாக குடியேறியவர்களாக இருக்க வேண்டும். இதன் மூலம் நிறுவனங்களுக்கும் பயன் கிடைக்கும், அமெரிக்காவும் வளர்ச்சி அடையும்.

விஸ்கான்ஸின் நகரில் பாக்ஸ்கான் நிறுவனம் மிகப்பெரிய ஆலையை அமைத்திருக்கிறது. இந்த ஆலையில் இருந்து ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன், லேப்டாப் உள்ளிட்ட பல சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவர்கள் அமைத்துள்ள புதிய ஆலைக்கு பணியாளர்கள் தேவை. ஆனால் அவர்கள் அமெரிக்காவை விரும்புவராக, அமெரிக்கவை மேம்படுத்த நினைப்பவராக இருக்க வேண்டும். தற்போது உள்ள குடியேற்ற கொள்கைகள் வலுவாக இல்லை. பல விதிமுறைகள் இருப்பதால், குடியேற்ற வழக்குகளை முடிப்பதற்கு பல ஆண்டுகள் ஆகின்றன. அதனால் இந்த விதிகளை மாற்ற வேண்டும். எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் முறையற்ற குடியேற்றத்தை அனுமதிக்க முடியாது.

முறையற்ற வழியில் குடியேறியவர்கள் வழக்கு தொடர்கின்றனர். இந்த வழக்கு முடிவதற்கு சில ஆண்டுகள் ஆகிறது. ஆனால் அதுவரை அவர்கள் அமெரிக்காவில் தங்குகிறார்கள். இவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்களை போல பலர் அமெரிக்காவில் உள்ளனர். இதற்காக எல்லையில் சுவர் அமைக்க வேண்டும், எல்லையில் பாதுகாப்பினை அதிகப்படுத்த வேண்டும். இதற்கு பாதுகாப்பு சாதனங்கள் தேவை. இவற்றை நாங்கள் நிச்சயம் செய்வோம்.முறையற்ற வழிகளில் குடியேறுபவர்களின் வழக்குகளை விசாரிக்க நாட்டின் எல்லையில் ஆயிரக்கணக்கான நீதிபதிகள் எதற்காக இருக்க வேண்டும். இவ்வளவு நீதிபதிகள் தேவையில்லை. இது எது மாதிரியான அமைப்பு என மற்ற நாடுகள் அமெரிக்காவை வேடிக்கையான பார்க்கின்றன. சில நாடுகள் முறையற்ற வழியில் வருபவர்களை அனுமதிக்கிறது, ஆனால் நாங்கள் அனுமதிக்க முடியாது என ட்ரம்ப் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x