Published : 09 May 2018 08:46 AM
Last Updated : 09 May 2018 08:46 AM

மியூச்சுவல் பண்ட் தொழிலில் இருந்து வெளியேற பிளாக்ராக் முடிவு

இந்திய மியூச்சுவல் பண்ட் துறையில் இருந்து வெளியேற அமெரிக்காவைச் சேர்ந்த பிளாக்ராக் நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. டிஎஸ்பி பிளாக்ராக் மியூச்சுவல் பண்ட் நிறுவனம் இந்தியாவின் முக்கிய மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களில் ஒன்று. கடந்த மார்ச் நிலவரப்படி ரூ.86,326 கோடி சொத்துகளை இந்த நிறுவனம் கையாளுகிறது. இதில் 60 % டிஎஸ்பி வசமும் 40 % பிளாக்ராக் வசமும் உள்ளன. இந்த நிலையில் மியூச்சுவல் பண்ட் தொழிலில் இருந்து வெளியேற பிளாக்ராக் முடிவெடுத்துள்ளது. பிளாக்ராக் வசமுள்ள 40 % பங்குகளை டிஎஸ்பி வாங்குகிறது. இனி டிஎஸ்பி மியூச்சுவல் பண்ட் என நிறுவனத்தின் பெயர் மாற்றப்படும்.

இந்தியாவில் 150 ஆண்டுகளுக்கு மேலாக டிஎஸ்பி குழுமம் செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் டிஎஸ்பி மெரில் லிஞ்ச் நிறுவனத்துடன் இணைந்து மியூச்சுவல் பண்டில் செயல்பட்டது. 2008-ம் ஆண்டு மெரில் லிஞ்ச் நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை பிளாக்ராக் வாங்கியது. தற்போது 40 சதவீத பங்குகளை விற்க பிளாக்ராக் முடிவெடுத்திருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே மியூச்சுவல் பண்ட் பிரிவில் பெரும்பான்மையான பங்குகளை யார் வாங்குவது என்னும் விவாதம் நடந்து வந்தது. டிஎஸ்பி வசம் இருக்கும் 60 சதவீத பங்குகளை வாங்க பிளாக்ராக் விரும்பியது. இரு நிறுவனங்களும் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்க விரும்பியதால் பிளாக்ராக் வெளியேறும் சூழல் ஏற்பட்டது.

நான்காம் தலைமுறையாக நிறுவனத்தை நடத்தி வருகிறோம். அதனால் இந்த தொழி லில் இருந்து வெளியேற விரும்பாததால் சுமூகமாக பிரிந்துகொள்கிறோம் என நிறுவனத்தின் தலைவர் ஹேமந்த் கோத்தாரி தெரிவித்தார். அமெரிக்காவை சேர்ந்த பிளாக்ராக், நிதிச்சேவை பிரிவில் சர்வதேச அளவில் முக்கியமான நிறுவனமாகும். 6.32 லட்சம் கோடி டாலர் சொத்துகளை உலகம் முழுவதும் நிர் வகிக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக பத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய மியூச்சுவல் பண்ட் பிரிவில் இருந்து வெளியேறியுள்ளன. டாய்வா, டாய்ஷ், மார்கன் ஸ்டான்லி, ஐஎன்ஜி, பைன்பிரிட்ஜ், நொமுரா, பிடிலிட்டி, ஏஐஜி, ஜேபி மார்கன், கோல்ட்மேன் சாக்ஸ் மற்றும் கேபிசி ஆகியவை வெளியேறி இருக்கின்றன. இந்த வரிசையில் பிளாக்ராக் நிறுவனமும் இணைந்திருக்கிறது. இந்த நிறுவனத்தில் 1,400 பணியாளர்கள் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x