Published : 16 May 2018 08:40 AM
Last Updated : 16 May 2018 08:40 AM

வங்கி உத்திரவாத கடிதம் வழங்கிய விவகாரத்தில் ஆர்பிஐ-க்கு பஞ்சாப் நேஷனல் வங்கி தவறான தகவல்: மத்திய புலனாய்வு துறை குற்றச்சாட்டு

ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வங்கி உத்திரவாத கடிதம் (எல்ஓயு) அளித்தது தொடர்பாக தவறான விவரங்களை ரிசர்வ் வங்கிக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்துள்ளது என்று மத்திய புலனாய்வு துறை (சிபிஐ) தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி விடுத்திருந்த எச்சரிக்கையையும் மீறி ஒப்புதல் கடிதம் அளித்ததால் 200 கோடி டாலர் அளவுக்கு நிதி மோசடி ஏற்பட காரணமாக இருந்துள்ளதாக சிபிஐ குறிப்பிட் டுள்ளது.

இத்தகைய கடன் உத்திரவாத கடிதம் அளிப்பதால் ஏற்படும் பின்விளைவுகளை பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான உஷா அனந்தசுப்ரமணியன் மற்றும் வங்கி உயர் அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். இருந்தபோதிலும் இத்தகைய மோசடியை அவர்கள் தடுக்கத் தவறிவிட்டனர் என்று குறிப்பிட் டுள்ளது.

வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகிய இருவரும் பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்த கடன் உறுதி கடிதம் (எல்ஓயு) மூலம் 200 கோடி டாலர் அளவுக்கு மோசடி செய்துள்ளனர். வங்கி அளித்த எல்ஓயு மூலம் வெளிநாட்டு வங்கிகளில் நிதி பெற்று விட்டு அதற்கான தொகையை பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு செலுத்தவில்லை என்று சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

உஷா அனந்த சுப்ரமணியன் தற்போது அலகாபாத் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக உள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியின் செயல் இயக்குநர்கள் கே.வி. பிரம்மாஜி ராவ் மற்றும் சஞ்ஜீவ் சர்மா மற்றும் வங்கியின் வெளிநாட்டு வர்த்தக பிரிவின் பொது மேலாளர் நேஹல் அகாத் உள்ளிட்ட நான்கு பேரின் பெயர்களும் சிபிஐ குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.

இதேபோன்ற முறைகேடு 2016-ம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சண்டீகர் கிளையில் நிகழ்ந்துள்ளது. இந்த மோசடி நிகழ்ந்த உடனேயே ரிசர்வ் வங்கி அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் இதுபோன்ற மோசடி குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுற்றறிக்கை அனுப்பியது.

நீரவ் மோடிக்கு வங்கி உத்திரவாத கடிதம் அளிப்பது தொடர்பான அனைத்து கோப்புகளும் உஷா அனந்தசுப்ரமணியன் மற்றும் ராவ், ஷரண், அகாத் ஆகியோருக்கு நன்றாகவே தெரியும் என்று சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

ரிசர்வ் வங்கிக்கு அளித்த பதிலில் தங்கள் வங்கியில் அனைத்தும் சரியாக நடப்பதாக அகாத் தெரிவித்துள்ளார். இத்தகைய பதில் கடித நகல் உஷா அனந்தசுப்ரமணியன் உள்ளிட்ட அனைத்து உயர் அதிகாரிகளின் ஒப்புதலோடு அனுப்பப்பட்டுள்ளதையும் சிபிஐ குறிப்பிட்டு, ரிசர்வ் வங்கிக்கு தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளது.

2015 முதல் 2017-ம் ஆண்டு வரையில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவராக இருந்த உஷா சுப்ரமணியன் பெயர் மட்டும் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ளதால் அவருக்கு முன்பு தலைமைப் பதவியில் இருந்தவர்கள் விடுபட்டு விட்டதாக அர்த்தம் இல்லை என்று சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

இந்த விவகாரம் 2011-17 வரையான காலத்தில் நடந்துள்ளது. இதனால் முன்பிருந்த தலைவர்களில் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

உஷா அனந்தசுப்ரமணியனின் அதிகாரம் பறிப்பு

அலகாபாத் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியான உஷா அனந்தசுப்ரமணியன் அனைத்து பொறுப்புகளும் பறிக்கப்பட்டிருக்கிறது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற முறைகேடுகள் காரணமாக உடனடியாக இந்த பொறுப்பில் பறிக்கப்படுவதாக இயக்குநர் குழு அறிவித்திருக்கிறது. மேலும் அடுத்த கட்ட நடவடிக்கையை அரசு எடுக்கமாறு இயக்குநர் குழு கேட்டுகொண்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x