Last Updated : 17 May, 2018 08:45 PM

 

Published : 17 May 2018 08:45 PM
Last Updated : 17 May 2018 08:45 PM

பெட்ரோல், டீசல் விலைகளை ரூ.4 உயர்த்தத் திட்டம்?

பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயை அரசு எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தலாம் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்தன. பின்னர், அவற்றின் விலை மாதம் இருமுறை என மாற்றி அமைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையைத் தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்ய தொடங்கின. அதன்பின் நாள்தோறும் சில காசுகள் அளவுக்கு பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டபோதிலும், அது மாதம் முழுவதும் மொத்தமாகப் பார்க்கும் போது, விலை உயர்வு அதிகமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கடந்த மாதம் 24-ம் தேதியில் இருந்து கடந்த 19 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை அரசு எண்ணெய் நிறுவனங்கள் விலையை உயர்த்தாமல் இருந்தன.

அதன்பின் கடந்த 14-ம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 17 காசுகளும், டீசலில் 21 காசுகளும் உயர்த்தப்பட்டன. அதன்பின் கடந்த 4 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 69 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 65 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன.

இதனால், டெல்லியில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.75.32 காசுகளாகவும், டீசல் விலை லிட்டர் ரூ.66.79 காசுகளாகவும் விலை உயர்ந்துவிட்டது. இது கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வாகும்.

இந்நிலையில், கடந்த 19 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை நிறுத்திவைத்த காரணத்தால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தை நிலவரங்களில் தெரியவந்தது.

மேலும், டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் கடுமையாக வீழ்ச்சி அடைந்துவருவதால், எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து இழப்பைச் சந்தித்து வந்தன.

கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் ஒரு பேரல் ரூ.78.84 டாலராக இருந்த நிலையில், 19 நாட்கள் இடைவெளியில் பேரல் ஒன்று 82.98 டாலராக விலை அதிகரித்துள்ளது இது மேலும் உயரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல டீசல் கச்சா எண்ணெயும் கடந்த 19 நாட்களில் சர்வதேச சந்தையில் பேரல் ஒன்று 84.68 டாலரில் இருந்து, 88.93 அமெரிக்க டாலராக அதிகரித்துவிட்டது. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடைந்தவிட்டதால், இறக்குமதியின் செலவு அதிகரித்துள்ளது. இதனால், எண்ணெய் நிறுவனம் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றன.

ஆதலால், இந்த இழப்பைச் சமாளிக்க பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ. 4 உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு எண்ணெய் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.

இது குறித்து கோடாக் ஈக்குயிட்டீஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த 19 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாத காரணத்தால், எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து இழப்பைச் சந்தித்து வருகின்றன. ஆதலால், சில்லரை விலையில் டீசல் லிட்டருக்கு ரூ.3.50 முதல் ரூ.4 வரையிலும், பெட்ரோல் லிட்டருக்கு 4 ரூபாய் முதல் ரூ.4.50 காசுகள் வரையிலும் உயர்த்தினால்தான் இழப்பைச்சரிக்கட்ட முடியும். அதிலும் இந்தவிலை உயர்வு டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு நிலையாக இருக்கும்பட்சத்தில்தான். ஒருவேளை டாலர்நிகாரன ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்தால், அதிகமாகவோ அல்லது அதிகரித்தால், விலை ஏற்றம் குறைவாகவோ இருக்கும்.

கர்நாடகத் தேர்தலையொட்டி கடந்த 3 வாரங்களாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாத காரணத்தால், சர்வதேச அளவில் பெட்ரோலிய, டீசல் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. இதனால், ஒட்டுமொத்த சந்தை விலையில் லிட்டருக்கு 70 காசுகள் வரை மாற்றம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பெட்ரோல், டீசல் விலையில் சராசரியாக லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வு அடுத்த சில நாட்களில் அறிவிப்பு வரலாம் எனச் சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், எண்ணெய் நிறுவனங்கள் இது குறித்து எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x