Published : 26 Apr 2018 09:07 AM
Last Updated : 26 Apr 2018 09:07 AM

வீடு வாங்குபவர்களை பாதுகாக்க திவால் சட்டத்தில் திருத்தம்: மத்திய அரசு திட்டம்

வீடு வாங்குபவர்களை பாதுகாக்கும் விதமாக திவால் மற்றும் நிதி மோசடி சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவர உள்ளது. இதன் மூலம் வீடு வாங்குபவர்களின் நிதி கடன், அதற்காக உதவுபவர்கள், வங்கி நடவடிக்கைகள் போன்றவற்றையும் இந்த சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்காக புதிய விதிகளை சேர்க்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடியரசு தலைவர் அனுமதி மூலம் இதைச் சட்டமாக்க மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளதாகவும், இந்த மசோதா மத்திய அமைச்சர்களின் சுற்றுக்குச் செல்லவில்லை என்றும் தகவல் அறிந்தவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சட்டம் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு புதிய சட்ட பாதுகாப்பு கிடைக்கும் என்றும் கூறினர். ஜேபீ இன்ப்ரா டெக், அமர்பாலி வீடு கட்டும் திட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், அதன் அடிப்படையில் இந்த புதிய சட்டம் கொண்டுவரப்படுகிறது. வீடு வாங்குபவர்கள் தங்களின் பல நாள் சேமிப்பை வீடு வாங்குவதற்காக அளிக்கின்றனர். இந்த புதிய சட்டம் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். வீடு கட்டும் திட்டங்களின் பணம் கட்டிய பலரும் திட்டமிட்டபடி வீடு கிடைக்காமல் பல ஆண்டுகளாக அவதிப்படுகின்றனர். இந்த சட்டத் திருத்தத்துக்கான பரிந்துரையை நிறுவனங்கள் விவகாரத்துறை செயலர் இன்ஜெட்டி ஸ்ரீனிவாஸ் தலைமையிலான குழு அளித்துள்ளது.

இந்த சட்டத் திருத்தத்தில் சிறிய தொழில் அதிபர்களின் பிரச்சினைகளும் பேசப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்கு வீடுகட்டவில்லையெனில் அந்த பில்டரின் அனுமதி ரத்து செய்யவும் வழிவகை செய்யும். இதன் மூலம் சிறு குறு தொழில் சேவை துறையில் மாற்றங்களை உருவாக்கும்.

திவால் மற்றும் வங்கி மோசடி சட்டத்தில் 29 ஏ பிரிவில் இந்த விவகாரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கமிட்டி பரிந்துரை செய்யும். கடன்களை திரும்ப செலுத்ததுவதற்கு யார் பொறுப்பேற்பது என்பதையும் இதன் மூலம் முடிவு செய்ய முடியும். நீண்ட காலமாக நஷ்டத்தில் இருக்கும் திட்டங்களால் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படாமலிருக்க இந்த சட்டத் திருத்தம் உதவும் என்றும் கூறினர்.

-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x