Published : 04 Apr 2018 09:45 AM
Last Updated : 04 Apr 2018 09:45 AM

கடல்சார் உணவு பொருள்களுக்கு மிகச் சிறந்த ஏற்றுமதி வாய்ப்பு: மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல்

இந்தியாவில் கடல்சார் உணவுப் பொருள்களுக்கு மிகச் சிறந்த ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளன. அதற்குரிய வளம் இந்தியாவில் உள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு குறிப்பிட்டார்.

கடலுணவு ஏற்றுமதியாளர் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய அவர் மேலும் கூறியதாவது:

இந்தியாவில் 7,600 கி.மீ. தூர கடல் பரப்பு உள்ளது. யூனியன் பிரதேசங்கள் உள்பட 13 மாநிலங்களில் கடல் பரப்பு உள்ளது. இதிலிருந்தே நமக்கு கடல் பொருள்களில் உள்ள வளம் புரியும்.இந்த வளத்தை சிறப்பாகப் பயன்படுத்தினால் உலகிற்கே கடல் உணவு வழங்கும் நாடாக இந்தியா உயரும்.

இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை வர்த்தக அமைச்சகம் எடுத்து வருகிறது. இத்துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் எளிதாக தொழில் புரிய தேவையான உதவிகளை அளிக்கவும் அமைச்சகம் தயாராக உள்ளது.

இந்திய கடல் உணவு பொருள்கள் சர்வதேச தரத்துடன் இருந்தால் மட்டுமே பிராண்ட் இந்தியா தயாரிப்புகளுக்கு மிகச் சிறந்த வரவேற்பு இருக்கும். பிராண்ட் இந்தியா-வின் பெயர் சரிந்தால் பொருள் ஏற்றுமதியும் சரியும். இதனால் இத்துறையில் உள்ளவர்கள் தரமான பொருள்களை மட்டுமே ஏற்றுமதி செய்வது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். பாதுகாப்பான உணவை கண்டறிவது, ஒரு ஆய்வகம், ஒரு மதிப்பீடு மற்றும் ஏற்றுமதி குறித்த தகவல் அளிக்கும் செயலிகளை சுரேஷ் பிரபு இந்நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார். டிஜிட்டல் மயமாக்கல் இத்துறையி் தரத்தை மேம்படுத்த உதவும் என்றார்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்திய கடலுணவ ஏற்றுமதி 13 சதவீதம் அதிகரித்து 46 கோடி டாலராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x