Published : 03 Apr 2018 08:29 AM
Last Updated : 03 Apr 2018 08:29 AM

பங்குகள் வழங்கி ஊழியர்களை கோடீஸ்வரர் ஆக்கிய பந்தன் வங்கி

ரூ.4,473 கோடியை திரட்டுவதற்காக சமீபத்தில் பந்தன் வங்கி பொதுப் பங்கு (ஐபிஓ) வெளியிட்டது. ஒரு பங்கின் விலை ரூ.499 அளவுக்கு உயர்ந்ததால் பந்தன் வங்கியின் தொடக்ககால ஊழியர்கள் பலர் ஒரே இரவில் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளார்கள்.

மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை வர்த்தக முடிவில் பந்தன் வங்கி பங்கொன்றின் விலை ரூ.468.30 ஆக இருந்தது. வங்கியின் மொத்த பங்கு மதிப்பு ரூ.55,859 ஆக இருந்தது.

பந்தன் வங்கியின் 3,000 ஊழியர்கள் வைத்திருக்கும் பங்கின் மதிப்பு ரூ.6,710 கோடியாக இருக்கிறது. இவர்கள் பந்தன் பைனான்சியல் சர்வீஸஸ் லிமிடெட் (பிஎஃப்எஸ்எல்) நிறுவனத்திலும் 14.61 சதவீதம் பங்குகளை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிஎஃப்எஸ்எல் நிறுவனம் பந்தன் வங்கியில் 82.28 சதவீதம் ஈக்விட்டி முதலீடுகளை வைத்திருக்கிறது. இவர்களைத் தவிர இன்னும் 40 ஊழியர்கள் 3.39 சதவீதம் பங்குகளை பிஎஃப்எஸ்எல் நிறுவனத்தில் வைத்திருக்கிறார்கள். இவர்களின் மொத்த பங்கு மதிப்பு ரூ.1,558 கோடியாக இருக்கிறது.

2001-ம் ஆண்டு சந்திர சேகர் கோஷ் மற்றும் 30 ஊழியர்களின் சிறிய முதலீட்டால் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனமாக தொடங்கப்பட்ட பந்தன் வங்கி சந்தை முதலீடுகள் அடிப்படையில் இன்று இந்தியாவின் எட்டாவது மதிப்பு வாய்ந்த வங்கியாக உயர்ந்துள்ளது.

பந்தனின் தொடக்ககாலத்தில் ஊழியர்கள் அதிகம் பேர் முதலீடு செய்ய விரும்பியதைத் தொடர்ந்து பந்தன் ஊழியர்கள் பொதுநல அறக்கட்டளையை சந்திர சேகர் கோஷ் உருவாக்கினார். 2014-ம் ஆண்டு வங்கி உரிமம் பெறுவதற்கு முன்பாகவே உலக வங்கியின் துணை நிறுவனமான இன்டர்நேஷனல் பைனான்ஸ் கார்பரேஷனிடமிருந்து அந்நிய முதலீடுகளை பந்தன் பெற்றது குறிப்பிடத்தக்கது. தனது ஊழியர்களை ஊக்கப்படுத்துவதற்காக ஊழியர் பங்கு வாய்ப்புகளை 3,000 பணியாளர்களுக்கு பந்தன் வங்கி வழங்கியது. பந்தன் வங்கியின் மொத்த பணியாளர் எண்ணிக்கை 28,000 ஆகும்.

பைனான்சியல் இன்குளூஷன் அறக்கட்டளை மற்றும் நார்த் ஈஸ்ட் பைனான்சியல் இன்குளூஷன் அறக்கட்டளை போன்றவையும் பிஎஃப்எஸ்எல் நிறுவனத்தில் பங்குகளை வைத்துள்ளன. அவைகளிடம் முறையே 32.91% மற்றும் 7.82% பங்குகள் உள்ளன. தொடக்கத்தில் இந்த அறக்கட்டளைகளின் வழியாக கோஷ் கடன் கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த அறக்கட்டளைகள் நிறுவனத்தில் வைத்திருக்கும் பங்கு மதிப்பை குறைக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டதாகவும், இது குறித்து ஆலோசித்து வருவதாகவும் பந்தன் வங்கி தலைவர் சந்திர சேகர் கோஷ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x