Published : 16 May 2024 11:35 AM
Last Updated : 16 May 2024 11:35 AM

‘உறங்கும் பார்ட்னரால்’ பதில் சொல்ல முடியாது: நிர்மலா சீதாராமன் பதிலால் சர்ச்சை

மும்பை: மத்திய அரசின் வரிகள் குறித்து கேள்வி எழுப்பிய பங்குச்சந்தை புரோக்கருக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

மும்பை பங்குச் சந்தையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பங்குச் சந்தை முதலீடுகள் குறித்து பேசினார். அப்போது பங்குச்சந்தை புரோக்கர் ஒருவர் மத்திய அரசின் வரி விதிப்பு குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார். அவர் நிர்மலா சீதாராமனிடம், “மக்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்து ரிஸ்க் எடுக்கிறார்கள். ஆனால் அரசாங்கமோ ‘உறங்கும் பார்ட்னர்’ போல மாறி, ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி, முத்திரை வரி, பத்திர பரிவர்த்தனை வரி (எஸ்டிடி) போன்ற வரிகளை விதித்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.

லாபத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் எடுத்துக்கொள்கிறது. ஒரு வீட்டை வாங்குவதற்கு செலுத்த வேண்டிய வரிகள் என்னனென்ன. ஸ்டாம்ப் டியூட்டி, ஜிஎஸ்டி போன்ற வரிகள் மூலம் ஒரு வீடு வாங்கினால் எவ்வளவு வரி கட்ட வேண்டும். குறைந்த வளங்களே கொண்டுள்ளவர்களுக்கு வீடு வாங்க அரசு எப்படி உதவுகிறது. அரசு போடும் வரிகளை கடந்த ஒரு முதலீட்டாளர் எப்படி செயல்பட முடியும்” என்று கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசு அதிக வரிவிதிப்பின் மூலம் பணம் பெறுவதை சுட்டிக்காட்ட அந்த புரோக்கர் அரசை ‘உறங்கும் பார்ட்னர்’ என அழைத்தார்.

இந்த மேற்கோளை முன்வைத்தே நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். நிர்மலா தனது பதிலில், “இதற்கு என்னிடம் பதில் இல்லை. ‘உறங்கும் பார்ட்னரால்’ இங்கே உட்கார்ந்து பதில் சொல்ல முடியாது.” என்று சிரித்துக்கொண்டே தெரிவித்தார். நிர்மலா சீதாராமனின் இந்தப் பதில் தற்போது விமர்சிக்கப்பட்டு வருகிறது.

பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் மற்றும் ரியல் எஸ்டேட் சந்தையில் அதிக வரி விதிக்கப்பட்டது முதலீட்டாளர்களை கடுமையாக பாதித்துள்ளது. எனவே இந்த கேள்விக்கு நிர்மலா சீதாராமன் சரியான பதிலை கொடுத்திருக்க வேண்டும் என்பது போல் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x