புதுமஞ்சள் விலையில் ஏற்றம் இல்லாததால் ஈரோடு விவசாயிகள் ஏமாற்றம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

ஈரோடு: மகாராஷ்டிரா சந்தையில் புது மஞ்சள் வரத்து தொடங்கியுள்ளதால், ஈரோட்டில் மஞ்சள் விலையில் மாற்றம் இல்லாமல் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. புது மஞ்சளுக்கு அதிக விலை கிடைக்கும் என காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு சங்கம் ஆகிய நான்கு இடங்களில் திங்கள் முதல் வெள்ளி வரை ஏலம் மூலம் மஞ்சள் விற்பனை நடக்கிறது. இந்த ஏலத்தில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் பங்கேற்று மஞ்சள் விற்பனை மற்றும் கொள்முதல் செய்து வருகின்றனர்.

அதிகபட்ச விலை: இந்த ஆண்டு தொடக்கம் முதல் புது மஞ்சளுக்கு அதிக விலை கிடைத்து வருகிறது. கடந்த பிப்ரவரி 19-ம் தேதி புது மஞ்சள் குவிண்டால் ரூ. 15 ஆயிரத்து 551 என்ற புதிய உச்சத்தை தொட்டது. மார்ச் 13-ம் தேதி உச்சபட்சமாக ரூ. 21 ஆயிரத்து 369-க்கு மஞ்சள் விற்பனையானது.

இந்நிலையில், கடந்த இரு வாரங்களாக ஈரோடு மஞ்சள் சந்தையில், மஞ்சள் விலை குவிண்டால் ரூ. 18 ஆயிரத்துக்குள்ளாக விற்பனையாகி வருகிறது. புதுமஞ்சளை விற்பனைக்கு கொண்டு வர தயாராக உள்ள விவசாயிகள், அதிக விலை இல்லாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சந்தைக்கான மஞ்சள் வரத்தும் குறைந்துள்ளது.

சந்தையில் தேக்கம்: இது குறித்து ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது: கடந்த மார்ச் மாதம் ஈரோடு மஞ்சள் சந்தையில் புதுமஞ்சள் வரத்தான போது, குவிண்டால் ரூ. 20 ஆயிரத்தைக் கடந்து விற்பனையானது. அப்போது, மகாராஷ்டிரா சந்தையில் புதுமஞ்சள் வரத்தாகவில்லை. இதனால், தேவை அதிகரித்து இருந்தது.

தற்போது, மகாராஷ்டிரா சந்தையில் புதுமஞ்சள் வரத்தாகியுள்ளது. இதனால் ஈரோடு மஞ்சள் சந்தையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. விலை உயரும் என்ற எதிர்பார்ப்பில், விவசாயிகள் புது மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வராத நிலை உள்ளது, என்றார்.

நேற்றைய மஞ்சள் விலை நிலவரம்: ஈரோடு கூட்டுறவு சங்கத்தில் நடந்த ஏலத்தில் குவிண்டால் மஞ்சள் அதிகபட்சமாக ரூ. 17ஆயிரத்து 801, ஈரோடு ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் அதிகபட்சமாக ரூ.17ஆயிரத்து 800-க்கு விற்பனையானது. பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், அதிகபட்சமாக குவிண்டால் ரூ.17 ஆயிரத்து 969, கோபி கூட்டுறவு சங்கத்தில் அதிகபட்சமாக ரூ.16 ஆயிரத்து 899-க்கு மஞ்சள் விற்பனையானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in