Published : 21 Apr 2018 08:55 AM
Last Updated : 21 Apr 2018 08:55 AM

தொழில் ரகசியம்: மனதை வாட்டும் பிரச்சினைகளிலிருந்து வெளியேறுங்கள்!

கி

ரிக்கெட் மாட்ச் ஆடியிருக்கிறீர்களா? ஆடியிருந்தால் கிரவுண்டில் நுழைகையில் ஒரு வித அமானுஷ்ய உணர்வு உடம்பை அழுத்துவதை அனுபவித்திருப்பீர்கள். கண்டிப்பாய் பரிட்சை எழுதியிருப்பீர்கள். அறைக்கும் நுழையும் போது வயிற்றை பிசைந்திருக்குமே. அவ்வளவு ஏன், ஆபீஸில் முக்கிய மீட்டிங் ஆரம்பிக்கும் முன் இதயம் 20-20 ரன் ரேட் போல் எகிறுமே. இவ்வகை மன அழுத்தம் (stress) போட்டி நிறைந்த சூழல்களில் இயற்கையாய் தோன்றுவது. அந்நேரங்களில் இதயம் வேகமாக துடித்து, பிளட் பிரஷர் ஏறினாலும் நம் கவனம் கூர்மையாகி எச்சரிக்கை உணர்வு அதிகரிக்க நம் திறமை மேலும் வெளிப்படுபவதையும் கவனித்திருப்பீர்கள். உண்மையில் மன அழுத்தம் செய்யும் பணியின் ஒரு அங்கம். சாதனைகளின் முக்கிய அம்சம். ஓரளவு மன அழுத்தம் இல்லை எனில் நாம் திறமையாய் பணி செய்ய, சாதனை புரியமுடியாது என்பதே உண்மை!

சூழலாலும் அதனால் நடக்கும் மாற்றங்களுக்கான உடலியல் பதில் (physiological response) தான் மன அழுத்தம் என்கிறார்கள் உளவியலாளர்கள். நம்மை சுற்றி நடப்பவைகளை எதிர்கொள்ள அல்லது எகிறி குதித்து எஸ்கேப் ஆக நம் மனதை, உடலை தூண்டுவது மன அழுத்தம். மனிதர்களைப் போல் அழுத்தத்தையும் நல்லது, கெட்டது என்று தரம் பிரிக்க முடியும். நல்ல மன அழுத்தத்தை யூஸ்ட்ரெஸ் (eustress) என்கிறார்கள். நமக்கு எனர்ஜி தந்து ஊக்கப்படுத்தி நம் செயல்திறனை கூட்டும். தடகள, விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள், சாதனை புரிபவர்களிடம் இவ்வகை நல்ல மன அழுத்தத்ததை காண முடியும். ஆனால் நம் பாழாய் போன கண்ணிற்கு மன அழுத்தத்தின் அரக்க குணம் தான் தெரிகிறது.

`மன அழுத்தம் ஓரளவு நம்மில் அதிகரிக்கும் வரை நம் திறன் கூடுகிறது. அந்த அளவை கடந்த பின் நம் திறன் சரியத் துவங்குகிறது’ என்றார்கள் ஹாவர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ‘ராபர்ட் ஏர்க்ஸ்’ மற்றும் ‘ஜான் டாட்ஸன்’. இதை 1908லேயே ஆய்வுகள் மூலம் நிரூபித்தனர். இது ‘ஏர்க்ஸ்-டாட்ஸன் விதி’ என்றழைக்கப்படுகிறது. ஒரு அளவிற்கு பின் மன அழுத்தம் நம் சிஸ்டத்தின் மீது சுமையாகி, நம் செயல்திறனைக் குறைத்து கடைசியில் நம் ஆரோக்கியத்தையே பாதிக்கிறது என்றனர். வாழ்க்கையில் மட்டுமில்லாமல் வியாபாரத்திலும் இதன் எதிர்மறை தாக்கம் ஏகத்திற்கும் உண்டு. மன அழுத்தத்தால் குறைவான செயல்திறன், பணிக்கு வராமல் டிமிக்கி கொடுப்பது, ஆரோக்கிய இழப்பு போன்றவை அதிகரித்து அமெரிக்க கம்பெனிகள் ஆண்டுதோறும் 300 பில்லியன் டாலர்கள் இழப்பதாக கேள்வி. நாயகன் பட பேக்ரவுண்ட் மியூசிக்கை இசைத்தவாறே `நீங்க நல்லவரா கெட்டவரா’ என்று மன அழுத்த பிசாசை கேட்டால் அது `தெரியலப்பா’ என்று தான் பதில் கூறும்!

அதைத் தெரிந்துகொள்ள அதன் தாக்கத்தை புரிந்துகொள்ள 35 வருடங்களாக முயன்று வருகிறார் மன அழுத்தம் மற்றும் நியூரோசையன்ஸ் துறை நிபுணர் ‘ஹெர்பர்ட் பென்சன்’. அமெரிக்காவில் மாசசூஸெட்ஸ் நகரில் `மைண்ட்/பாடி மெடிகல் இன்ஸ்டியூட்’ என்ற ஆராய்ச்சி நிறுவனம் துவங்கி மன அழுத்தத்தால் விளையும் உடல் மாற்றங்களை கணக்கிடும் எண்ணற்ற ஜனத்தொகை ஆய்வுகள், உடலியல் அளவீடுகள், பிரெய்ன் இமேஜிங், மாலிக்யூளர் பயாலஜி, பயோகெமிஸ்ட்ரி ஆய்வுகளிலிருந்து டேட்டா சேகரித்து ஆராய்ந்து வருகிறார்.

நரம்பியல் ரீதியாக நம் உடம்பில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். பணியில் மன அழுத்தம் தூண்டப்படும் போது அதன் எதிர்மறைத் தாக்கத்தை ஓரளவு வரை சமாளிக்க முடியும். அது அதிகரிக்கும் போது, நீண்ட நேரம் அதன் தாக்கம் இருக்கும் போது நம் உடலில் எபிநெஃப்ரின், நோரெபிநெஃப்ரின், கார்டிசால் போன்ற ரசாயனங்கள் அதிகம் சுரக்கின்றன. இவை நம் ரத்த கொதிப்பை அதிகரித்து, இதயத் துடிப்பை கூட்டி மூளை செயலை பாதிக்கத் துவங்குகிறது. மன அழுத்தம் அதிகரிக்கத் துவங்கும் போது செய்யும் பணியை சற்று மறந்து அதைவிட்டு விலகிச்செல்லும் போது நம் மூளைக்கு சுதாகரித்துகொள்ள நேரம் கிடைக்கிறது. அதனால் அழுத்தத்தின் எதிர்மறை தாக்கம் குறைகிறது. நம்மால் பிரச்சினைக்குத் தீர்வு காண முடிகிறது என்கிறார் பென்சன்.

‘ஏர்க்ஸ்-டாட்ஸன் விதி’ப்படி மன அழுத்தம் உச்சத்தில் இருக்கும்போது செய்யும் பணியை மறந்து மனதிற்கு புத்துணர்ச்சியூட்டும் செயல்களை செய்து ரிலாக்ஸ் செய்யும் போது கெட்ட ரசாயனங்களின் எதிர்மறை தாக்கம் குறைகிறது. மூலக்கூறு ஆய்வுகள் (Molecular studies) படி மனம் அமைதியாய் இருக்கையில் உடலில் நைட்ரிக் ஆக்ஸைட் அதிகரிக்கிறது. இது நரம்பியல் கடத்திகளான (neurotransmitters) எண்டார்ஃபின்ஸ் மற்றும் டோபோமைன் என்னும் நல்ல ரசாயனங்களை அதிகம் சுரக்கச் செய்கிறது. நாம் சந்தோஷமாக இருக்கும் உணர்வை கூட்டும் ரசாயனங்கள் இவை. மூளை சாந்தமடையும் போது கவனம் மற்றும் முடிவாற்றல் செய்யும் பகுதிகளின் செயலாக்கம் அதிகரிக்கிறது. இதை calm commotion என்கிறார்கள். இத்தருணங்களில் நம் படைப்பு நுண்ணறிவு (Creative insights) அதிகரிக்க பிரச்சினைக்கான தீர்வு மனதில் சுயம்புவாய் எழுகிறது!

செயல்பாட்டின் உச்சத்திற்கு மூளையை தயார் செய்து டக்கென்று அதை ரிலாக்ஸ்ட் நிலைக்கு தள்ளும் போது நம் நரம்பியல் செயல்திறனை ஸ்டிமுலேட் செய்யலாம் என்கிறார் பென்சன். இதை திறமையாய் செய்பவர்கள் அதிக நேரம் அதிக திறனுடன் பணி செய்து சாதிக்க முடியுமாம். இதை விளக்கும் செயல்முறையை ‘The Breakout Principle’ என்ற புத்தகமாகவும் எழுதினார் பென்சன். அவர் கூறிய ப்ரேக் அவுட் சீக்வென்ஸின் நான்கு படிகள் இதோ.

1. சிக்கலான பிரச்சினைத் தீர்க்கமுடியாமல் அவதிப்படுவது முதல் படி. பிரச்சினையைத் தீர்க்க அதை அறிந்து ஆராயும் போது மன அழுத்தம் அதிகரிப்பதை உணர்வீர்கள். ‘எர்க்ஸ்-டாட்ஸன் விதி’ப்படி உச்ச நிலையை அடையும் போது படாரென்று பிரச்சினையைத் தீர்க்கும் பணியிலிருந்து எஸ்கேப் ஆகுங்கள். உச்சத்தை எட்டிவிட்டோம் என்று எப்படி தெரிந்துகொள்வது? பிரச்சினையைத் தீர்க்கும் வழி தெரியாமல் விழித்து, பரபரப்பு, பயம், கோபம் போன்ற உணர்ச்சிகள் பொங்க பிரச்சினையை தீர்க்க முடியாமல் குடல் இரண்டையும் இழுத்து கட்டி, தொண்டையில் ஒரு குண்டு அமர்ந்து அதை விழுங்க முடியாமல் துப்ப முடியாமல் தவித்து, உள்ளங்கை வியர்த்து, பின் கழுத்தை யாரோ பிடித்து அமுக்குவது போல் தோன்றுகிறது பாருங்கள், அதுவே மன அழுத்த நிலையின் உச்சக் கட்டம். அதுவே பிரச்சினையிலிருந்து கொஞ்ச நேரத்திற்கு எஸ்கேப் ஆக சரியான நேரம்.

2. மன அழுத்தத்திலிருந்து டைம் அவுட் எடுத்து பிரச்சினையின் தாக்கத்திலிருந்து மனதை விடுவிப்பது இரண்டாவது படி. பிரச்சினைக்கு சம்பந்தம் இல்லாத ரிலாக்சேஷன் தரும் செயலை செய்யுங்கள். அருகில் கிரவுண்ட் இருந்தால் ஜாகிங் செல்லுங்கள். நாய் வளர்த்தால் அதோடு வாக்கிங் செல்லுங்கள். இளையராஜாவின் இசை கேளுங்கள். காமெடி சேனல் பார்த்து சிரியுங்கள். சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் புத்தகங்களை வாங்கிப் படியுங்கள். முடிந்தால் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குங்கள். என்ன செய்கிறீர்களோ இல்லையோ மன அழுத்தத்திலிருந்து சட்டென்று விடுதலை பெற முயலுங்கள். மூளை, மனம் சப்தநாடியும் சாந்தம் பெறும். உடல் நைட்ரிக் ஆக்ஸைடை ரிலீஸ் செய்யும். மனம் ரிலாக்ஸ் ஆகி பெட்டராக உணர்வீர்கள்.

3. இப்பொழுது மனதில் நுண்ணறிவு உதிக்கும். மூளையில் பல்ப் எரியும். பார்வையில் தெளிவு பிறக்கும். பிரச்சினைக்கு தீர்வு தானாய் தெரியும். இது மூன்றாவது படி. மன அமைதியும் ரிலாக்ஸ்ட் மூடும் உங்களை அதிக லெவல் செயல்பட வைக்கும்.

4. இனி உங்கள் மனதின் புதிய நிலையே நான்காவது படி. கூடுதல் தன்னம்பிக்கையுடன் பணி புரிவீர்கள். இந்த நிலையே இப்பொழுது உங்கள் நார்மல் நிலையாக மாறும்.

பிரச்சினையைத் தீர்க்க நேரமிருந்தால் இதையெல்லாம் செய்கிறேன். அவசர மீட்டிங்கில் அமர்ந்து துரித நேரத்தில் பிரச்சினையைத் தீர்க்கும் அவசரம் இருக்கும் போது மன அழுத்தத்தை என்ன செய்து தொலைப்பது என்று தானே கேட்கிறீர்கள். ரிலாக்ஸ்.

முதல் காரியமாய் கண்களை மூடுங்கள். மனதை ரிலாக்ஸ் செய்யுங்கள். பிரேக் அவுட் படியின் இரண்டாவது படிக்கு செல்லவேண்டும் என்பதை நினைவில் வையுங்கள். கால் பாதத்திலிருந்து மெல்ல ரிலாக்ஸ் ஆகுங்கள். கால், இடுப்பு, கழுத்து தலை என்று பாதாதிகேசமும் ரிலாக்ஸ் ஆக முயலுங்கள். மெதுவாக மூச்சு விடுங்கள். மூச்சை இழுத்து விடும்போது பிடித்த பாடலை மனதில் பாடுங்கள். உறக்க பாடினால் பக்கத்தில் இருப்பவர்கள் அதை கேட்டு மன அழுத்தம் தோன்றாத வண்ணம் மனதிற்குள் பாடுங்கள். தெரிந்த ஸ்லோகம் சொன்னாலும் தப்பில்லை. மீட்டிங் ரூமில் ஜன்னல் இருந்தால் மரம், செடி, பறவை அட்லீஸ்ட் பக்கத்து மாடியில் துணி காய போடும் பெண்ணைப் பாருங்கள். அழுத்தத்திலிருந்து மனதை விலக்குங்கள். நேரமும், வசதியும் இருந்தால் குளியுங்கள். மீட்டிங் ரூமில் இல்லை சார், பாத்ரூமில். இப்படி செய்கையில் மனம் அமைதியடைவதை உணர்வீர்கள். உணரவேண்டும். உணரும் வரை முயலுங்கள். பிறகு கண்களைத் திறந்து பாருங்கள். பிரச்சினை கழட்டப்பட்டு பார்ட் பார்ட்டாய் பிரிந்திருப்பது போல் தெரியும். தீர்க்கும் வழி ஜகஜோதியாய் தெரியும். தன் மனதை வாட்டிய கேள்விக்கான விடையை ஆர்கிமிடீஸ் குளிக்கும் போது கண்டுபிடித்து யூரேகா என்று கத்திக்கொண்டு கிரேக்க வீதிகளில் ஒட்டுத் துணியில்லாமல் ஓடியது எதனால் என்று இப்பொழுது புரிகிறதா!

satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x