Last Updated : 20 Apr, 2018 03:24 PM

 

Published : 20 Apr 2018 03:24 PM
Last Updated : 20 Apr 2018 03:24 PM

5 ஆண்டுகளுக்குப்பின் பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு: சென்னையில் எவ்வளவு தெரியுமா?

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.74.08 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.65.31 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்தன. பின்னர், அவற்றின் விலை மாதம் இருமுறை என மாற்றி அமைக்கப் பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையைத் தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயம் செய்ய தொடங்கின.

அதன்பின் நாள்தோறும் சில காசுகள் அளவுக்கு பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டபோதிலும், அது மாதம் முழுவதும் மொத்தமாகப் பார்க்கும் போது, விலை உயர்வு அதிகமாக இருந்தது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி அளித்து வருகிறது. .

இந்நிலையில் இன்று டீசல், பெட்ரோல் விலை கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை உச்சத்தைத் தொட்டுள்ளன. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.74.08க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2013ம் ஆண்டு, செப்டம்பர் மாதத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.74.10 காசுகளாக விற்பனையானது. அதற்குப் பின் இப்போதுதான் இந்த விலை உயர்வு வந்துள்ளது. கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ₹76.78 காசுகளாகவும், மும்பையில் ரூ.81.93 காசுகளாவும் விற்கப்படுகிறது.

டீசலைப் பொறுத்தவரை, டெல்லியில் ஒரு லிட்டர் ரூ.65.31 காசுகளாகும். கொல்கத்தாவில் ரூ.68.01 காசுகளாகவும், மும்பையில் ரூ.69.54 காசுகளாகவும் விற்கப்படுகிறது. இதுவும் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வாகும்.

சென்னையில் எவ்வளவு?

சென்னையைப் பொறுத்தவரை டீசல் ஒரு லிட்டர் ரூ.68.90 காசுகளுக்கும், பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.76.85 காசுகளுக்கும் இன்று விற்பனையாகிறது. இதற்கு முன் சென்னையில் கடந்த 2014ம் ஆண்டு, ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.76.93 காசுகள் விற்பனையானது. அதுதான் அதிகபட்சமான விலையாக இருந்தது. அதன்பின் ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்பின் அந்த விலை உயர்வை எட்டியுள்ளது.

இது உள்மாவட்டங்களில் இந்த விலையோடு போக்குவரத்துச் செலவையும் சேர்க்கும் போது மேலும் அதிகரிக்கலாம். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பெட்ரோல் விலை ஏறக்குறைய லிட்டருக்கு 4 ரூபாயும், டீசல் விலை ரூ.5 முதல் 6 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உற்பத்தியைக் குறைத்து விட்டதால், இந்தக் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பிரண்ட் கச்சா எண்ணெய் தற்போது பீப்பாய் ஒன்றுக்கு 73.56 டாலர்களுக்கு(ரூ.4.859) விற்பனையாகிறது. இது கடந்த 2013ம் ஆண்டு 100 டாலர்களாக(ரூ.6,606) இருந்தது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முக்கியமாகக் கலால் வரி உயர்வு முக்கியமாகக் கருதப்பட்டது. தெற்காசிய நாடுகளிலேயே டீசல், பெட்ரோலுக்கு அதிகமான வரிவிதிக்கும் நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

9 முறை

கடந்த 2014-ம் ஆண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தபோது, சர்வதேச அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை படுவீழ்ச்சி அடைந்தது. ஆனால், அதன்பலனை மக்களுக்கு அளிக்காமல் விலையைக் குறைக்காமல் மாறாக உற்பத்தியை வரியை மட்டும் மத்திய அரசு அதிகரித்துக்கொண்டது. அதன்படி கடந்த 2014 முதல் 2016ம் ஆண்டுவரை உற்பத்தி வரி 9 முறை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

கடந்த 15 மாதங்களில் பெட்ரோல் மீது லிட்டர் ஒன்றுக்கு ரூ.11.77 காசுகள் உற்பத்தி வரி உயர்த்தப்பட்டுள்ளது, டீசல் மீது லிட்டர் ஒன்றுக்கு ரூ.13.47 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு வருமானம் இரட்டிப்பாகியுள்ளது.

கடந்த 2014-15ம் ஆண்டில் ரூ.99 ஆயிரம் கோடி உற்பத்தி வரியில் இருந்து வரிவருவாய் கிடைத்தது. ஆனால், தொடர்ந்து வரி உயர்த்தப்பட்டதன் காரணமாக தற்போது, அரசுக்கு உற்பத்தி வரியின் மூலம் ரூ. 2லட்சத்து 42 ஆயிரம் கோடி கிடைத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல், டீசல் விலை கடுமையாக கடந்த ஆண்டில் இருந்து உயர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உற்பத்தி வரியை 2 ரூபாய் மத்தியஅரசு குறைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x