Published : 25 Apr 2018 09:58 AM
Last Updated : 25 Apr 2018 09:58 AM

ஹெச்-1பி விசா நடைமுறையில் மாற்றம் செய்ய திட்டம்; வாழ்க்கை துணைக்கான பணி அனுமதி ரத்து?- ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்பட வாய்ப்பு

தம்பதிகளில் ஒருவர் ஹெச்-1பி விசா வைத்திருந்தால் அவர்களது கணவன் அல்லது மனைவி அமெரிக்காவில் சட்டபூர்வமாக பணி செய்ய இயலும் என்னும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன்மூலம் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தம்பதிகளில் ஒருவர் ஹெச்-1பி விசா வைத்திருந்தால் அவர்களது கணவன் அல்லது மனைவிக்கு ஹெச்-4 விசா அளிக்கப்படுகிறது. இதன்மூலம் சட்டபூர்வமான பணி அனுமதியை கணவன் அல்லது மனைவி பெறமுடியும். கடந்த ஒபாமா ஆட்சிக்காலத்தில் இந்த சிறப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்தியர்கள் மிக அதிக அளவில் இந்த முறையில் அமெரிக்காவில் பணிசெய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கையின் மூலம் ஹெச்-4 விசா வைத்திருக்கும் 70,000 பேர் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

2015-ம் ஆண்டுக்கு முன்பாக ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் நிரந்தர வசிப்பிட நிலையைப் பெறாதவரை அவர்களது கணவனோ, மனைவியோ வேலை அனுமதி பெற முடியாத சூழல் இருந்தது. நிரந்தர வசிப்பிட நிலையைப் பெறுவதற்கு பத்தாண்டுகளோ அதற்கு மேலோ ஆகும் வாய்ப்புகள் உள்ளது. எனவே இந்த விதிமுறையில் ஒபாமா அரசாங்கம் 2015-ம் ஆண்டில் மாற்றம் கொண்டுவந்தது.

இந்த நடைமுறையை இப்பொழுது ட்ரம்ப் நிர்வாகம் முடிவுக்கு கொண்டுவர உள்ளது. விரைவில் இதுதொடர்பான தகவல்கள் வெளிவர இருப்பதாக அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவை (யுஎஸ்சிஐஎஸ்) இயக்குநர் பிரான்சிஸ் சிஸ்னா, அமெரிக்க மேலவையின் மூத்த உறுப்பினர் சக் கிராஸ்லேவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கப் பணியாளர்களை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும், இப்போதுள்ள நடைமுறை ரத்து செய்யப்பட்டு புதிய நடைமுறைகள் உருவாக்கப்படும் எனவும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

93 சதவீதம் இந்தியப் பெண்கள்

ஜூன் 2017 நிலவரப்படி மொத்தம் 71,287 பேருக்கு ஹெச்-4 விசா நடைமுறைப்படி பணி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 94 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் 93 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். 4 சதவீதம் பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x