Published : 28 Feb 2018 08:43 AM
Last Updated : 28 Feb 2018 08:43 AM

பண்டைய நாகரிகத்திலிருந்து நவீன இந்தியாவை உருவாக்க அரசு தீவிரம்: இந்திய-கொரிய வர்த்தக மாநாட்டில் நரேந்திர மோடி பேச்சு

பண்டைய நாகரிகத்திலிருந்து நவீன இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார். டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்திய- கொரிய வர்த்தக மாநாட்டில் பேசிய அவர் மேலும் கூறியதாவது:

இந்தியாவுக்கும் கொரியாவுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக வலிமையான உறவு தொடர்ந்து வருகிறது. நாம் அனைவரும் புத்தமத பழக்க வழக்கங்களை பின்பற்றுகிறோம். நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்கூட 1929-ம் ஆண்டிலேயே கிழக்கின் விளக்கு என்ற கவிதையைப் படைத்துள்ளார். இதில் கொரியாவின் வளம் மற்றும் எதிர்காலவளர்ச்சியை அப்போதே குறிப்பிட்டு புகழ்ந்துள்ளார்.

பண்டைய நாகரிகத்திலிருந்து நவீன இந்தியாவை உருவாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. முறையற்ற பொருளாதார நிலையிருந்து முறையான பொருளாதாரமாக மாற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மத்திய அரசு கட்டுப்பாடுகளைத் தளர்த்தி லைசென்ஸ் முறைகளில் நிலவும் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. தொழில்துறைக்கான அனுமதி வழங்குவது முன்பு 3 ஆண்டுகளாக இருந்தது. இது தற்போது 15 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலுமான காலத்திற்கு வழங்கப்படுகிறது. இந்தியாவில் ஜனநாயக ஆட்சி நடக்கிறது. புவியியல் அமைப்பும் பொருள்களுக்கான தேவையும் இங்கு அதிகமாக உள்ளது.

உலகின் வெகு சில நாடுகளில் மட்டுமே இதுபோன்ற சாதகமான அம்சங்கள் நிலவுகின்றன. தொழில் தொடங்குவதில் நிலவும் முட்டுக்கட்டைகளை நீக்குவதோடு, புதிய திட்டங்களுக்கான முடிவுகள் உடனடியாக எடுக்கப்படுகின்றன. ஸ்திரமான வர்த்தக சூழலை உருவாக்குவதுதான் அரசின் பிரதான நோக்கம். இதனால் தொழில் சச்சரவுகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்படுகின்றன. அன்றாட அலுவல்களில் முன்னேற்றமான சூழலை எதிர்நோக்குகிறோம். பரஸ்பரம் நம்பகத்தன்மையை அதிகரிக்க முயற்சிப்பதோடு சந்தேகம் கொள்வது கிடையாது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் அரசின் மனோநிலை மாறியுள்ளதை வெளிக்காட்டும்.

மிகப் பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து வரும் இந்தியாவில், மக்களின் வாங்கும் திறனும் அதிகம் உள்ளது. விரைவிலேயே ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயரும். இங்கு ஸ்டார்ட் அப்களுக்கு உகந்த சூழலும் உருவாக்கப்பட்டுள்ளது.

கொரியாவில் பயணம் மேற்கொண்டிருந்தபோது அவர்கள் தங்களது தயாரிப்புகளை சர்வதேச பிராண்டாக வளர்ப்பதில் தீவிரம் காட்டியதை பெருமையுடன் மோடி சுட்டிக் காட்டினார். இந்த உலகுக்கு மிகச் சிறந்த தயாரிப்புகளை கொரியா அளித்து வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு இந்த மாநாட்டின் தலைப்பே இந்தியா-கொரியா இடையிலான வர்த்தக, முதலீடுகளில் சிறப்பு உத்திகளை வகுப்பது என்பதாகும். இதற்கேற்ப இரு நாடுகளிடையே ஆக்கபூர்வமான பேச்சு வார்த்தைகள் திறந்த மனதுடன் மேற்கொள்ள இந்த மாநாடு வழிவகுக்க வேண்டும். இரு நாடுகளின் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் பேச்சு நடத்த வேண்டும் என்பதுதான் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

இரு நாட்டு நிறுவனங்களும் எந்தெந்த துறைகளில் இணைந்து பணியாற்றுவதற்கான உடனடி வாய்ப்புகள் உள்ளன என்பதைக் கண்டறிய வேண்டும். குறிப்பாக உள்கட்டமைப்பு, ஐசிடி, மின்சாரம், ஸ்மார்ட் சிட்டி, உற்பத்தித்துறை ஆகியவற்றில் கூட்டாக செயல்படுவதற்கான வாய்ப்புகளை கண்டறிய வேண்டும் என்றார் மோடி.

இந்த மாநாட்டில் கொரியாவிலிருந்து 200 தொழில்துறை, வர்த்தக பிரதிநிதிகள் குழுவும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x