Published : 03 Feb 2018 08:56 AM
Last Updated : 03 Feb 2018 08:56 AM

கோவை கொடிசியா வளாகத்தில் சர்வதேச கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி தொடங்கியது: பல்வேறு நாடுகள் பங்கேற்பு: ரூ.100 கோடிக்கு வர்த்தகம் எதிர்பார்ப்பு

கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் சர்வதேச அளவிலான கட்டிட கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி - 'பில்டு இன்டெக் 2018' நேற்று தொடங்கியது. கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் சார்பில் நடைபெறும் இந்தக் கண்காட்சியை கோன் எலிவேட்டர் இந்தியா நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் அமித் கோசைன் தொடங்கி வைத்தார்.

இந்தக் கண்காட்சியில் சுமார் 1.60 லட்சம் சதுரஅடி பரப்பில் 300 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, மஹாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், குஜராத், பஞ்சாப், டெல்லி, ஹரியாணா, கர்நாடகா, தெலங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமான நிறுவனங்கள் மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் இருந்து கட்டிடம் மற்றும் கட்டுமானப் பொருட்கள், இயந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன.

கட்டுமானத் துறையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களான கான்கிரீட்களில் ஏற்படும் விரிசலைத் தடுக்கும் மேக்ரோ செயற்கை ஃபைபர், குர்ஜோன் கேலிபிரேடட் பிளைவுட்ஸ், நவீன குடிநீர் சுத்தகரிப்பு தொழில்நுட்பங்கள், நவீன கட்டுமான இயந்திரங்கள், ஈரான் நாட்டின் நவீன தொழில்நுட்பமான ஜிப்சம் வால் பிளாஸ்ட் உள்ளிட்டவை கண்காட்சி அரங்குகளில் இடம்பெற்றுள்ளன.

மேலும், கட்டுமானத்தின் அடிப்படைத் தேவையான செயற்கை மணல் எம்.சாண்ட் தரத்தை மேம்படுத்தும் நவீன தொழில்நுட்பம் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சோலார் பேனல்கள், இன்வெர்ட்டர்கள், பேட்டரிகள், மின் அமைப்புகள், ஜெனரேட்டர்கள், எல்.இ.டி. விளக்குகள், நீச்சல் குள தொழில்நுட்பம், குளியலறை உபகரணங்கள் உள்ளிட்டவைகளும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

இதுதவிர, மரம் மற்றும் ஸ்டீல் ஃபர்னிச்சர் பொருட்களின் கண்காட்சியும் நடைபெறுகிறது. கட்டுமானப் பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள், கட்டிடக் கலை வல்லுநர்கள், கட்டட அமைப்பாளர்கள் என பல்வேறு தரப்பினர் கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர். கண்காட்சியை 40 ஆயிரம் பேர் பார்வையிடுவர் என்றும், ரூ.100 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 5-ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியை 'தி இந்து' மற்றும் பல்வேறு நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x