Published : 23 Feb 2024 04:30 PM
Last Updated : 23 Feb 2024 04:30 PM

பெரும் நெருக்கடியில் பைஜூஸ் நிறுவனர் ரவீந்திரன்... என்னதான் நடக்கிறது? - ஒரு தெளிவுப் பார்வை

அமலாக்கத் துறை சோதனை, முதலீட்டாளர்கள் உடனான பிரச்சினை, ஊழியர்கள் வேலை இழப்பு என தொடர் சர்ச்சைகளில் சிக்கி வரும் பைஜூஸ் நிறுவனத்தின் நிறுவனர் பைஜூ ரவீந்திரனின் தலைவிதியை தீர்மானிக்கும் EGM (வாரியக் கூட்டம்) கூட்டம்தான் வர்த்தக உலகின் இன்றைய டாப்பிக்.

இந்தியாவின் புகழ்பெற்ற எட்டெக் நிறுவனம் பைஜூஸ். 2011-ம் ஆண்டு பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு ஆன்லைன் எட்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமாக தொடங்கிய பைஜூஸ், இன்றைய கல்வி உலகில் மாபெரும் நிறுவனம். கரோனா காலத்தில் இந்நிறுவனம் பெரும் வளர்ச்சியடைந்தது. இதன்காரணமாக போர்ப்ஸ் பணக்கார பட்டியலில் இடம்பித்தார் இதன் நிறுவனர் பைஜூ ரவீந்திரன். அன்று கோடிகளில் புரண்ட பைஜூஸ் கடந்த சில மாதங்களாக ஊழியர்கள் பணி நீக்கம், வருவாய் இழப்பு, கடன் சுமை, அடுத்தடுத்து நிர்வாகக் குழு உறுப்பினர்கள் விலகல் என கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது.

என்ன நடக்கிறது? - பைஜூஸ் நிறுவனம் அந்நியச் செலாவணி விதிமுறைகளை மீறி செயல்படுவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து ரவீந்திரனின் வீடு உட்பட அந்த நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த ஆண்டு ஏப்ரலில் சோதனை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த 2011 முதல் 2023 வரையிலான காலத்தில் ரூ.28,000 கோடிக்கும் அதிகமான அந்நிய முதலீடுகளை அந்த நிறுவனம் பெற்றிருப்பது தெரியவந்தது.

அதே காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு என்ற பெயரில் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பைஜூஸ் நிறுவனம் ரூ.9,754 கோடியை அனுப்பியுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. இத்துடன் ரூ.944 கோடியை விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதல் செலவுகளில் அந்த நிறுவனம் வரவு வைத்துள்ளது. அந்நிய முதலீடுகள் தொடர்பாக போதுமான ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியதன் மூலம் அந்த நிறுவனம் ரூ.9,362 கோடிக்கு அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து அந்நிய நேரடி முதலீடு தொடர்பான ஆவணங்கள் மற்றும் நிறுவனத்தில் முதலீடுகள் குறித்த விவரங்களை தாக்கல் செய்வதில் பைஜூஸ் தாமதம் செய்வதாக அமலாக்கத் துறை குற்றச்சாட்டியது.

அமலாக்கத் துறை நடவடிக்கையை தொடர்ந்து பைஜூஸ் பல சவால்களை சந்திக்கத் தொடங்கியது. அதில் முதலாவது பைஜூஸ் தனது நிதிக் கணக்குகளை சரியான நேரத்தில் தாக்கல் செய்யத் தவறியது, கடனுக்கான வட்டித் தொகையை செலுத்த தவறியது எனத் தொடரப்பட்ட வழக்குகள். அமெரிக்க முதலீட்டாளர்கள் பலர் அரை பில்லியன் டாலர்களை பைஜூஸ் நிறுவனம் மறைத்தது என்று குற்றம் சுமத்தி வழக்கு தொடுத்தன.

இதற்கு அடுத்தபடியாக, பைஜூஸ் நிறுவனத்தில் முதலீடு செய்த நெதர்லாந்து முதலீட்டு நிறுவனமான ப்ரோசஸ் என்வி, “பைஜூஸ் நிறுவனத்தின் அறிக்கை மற்றும் நிர்வாக அமைப்பு போன்றவை இதுபோன்ற ஒரு நிறுவனத்துக்கு போதுமான அளவு வளர்ச்சிய அடையவில்லை. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தேவையான எங்களின் ஆலோசனைகளையும் பைஜூஸ் புறக்கணித்தது” என்று குற்றம்சாட்டியதோடு கடந்த ஆண்டு 22 பில்லியன் டாலராக இருந்த பைஜூஸின் மதிப்பீட்டை இந்த ஆண்டு 5.1 பில்லியன் டாலராக குறைத்தது.

இந்த தொடர் குற்றச்சாட்டுகளால் பைஜூஸின் முதலீட்டாளர்கள் பலரும் பின்வாங்கினர். இதனால் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. நிறுவனங்களின் செலவினங்களை கட்டுப்படுத்த ஊழியர்களை பணிநீக்கியது. இதன்க் கடனை திரும்ப செலுத்த முடியாதது தொடங்கி ஒருகட்டத்தில் வாடகை கூட செலுத்த முடியாமல் பெங்களூருவில் உள்ள தனது பிரம்மாண்ட அலுவலகத்தை காலி செய்தது.

லுக் அவுட் நோட்டீஸ்: வெளிப்படையாக நிதி இல்லை என ஒப்புக்கொண்ட பைஜூஸ் அடுத்தடுத்து சிக்கல்களை சந்தித்து வருவதை அடுத்து அதன் நிறுவனர் ரவீந்திரன் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்க அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது அமலாக்கத் துறை. தற்போது அவர் நாட்டில் இல்லை, துபாயில் இருக்கிறார் என்கிறது ஒரு தகவல். எனினும், நாடு திரும்பும் பட்சத்தில் அவர் இந்தியாவில் இருந்து வெளியேற முடியாத வகையில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

EGM கூட்டம்: லுக் அவுட் நோட்டீஸ் என அரசு ஒருபுறம் நெருக்க, பைஜூஸ் பங்குதாரர்கள் மறுபுறம் புதிய நெருக்கடியை கொடுத்து வருகின்றனர். EGM எனப்படும் பைஜூஸ் நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடக்கவுள்ளது. இக்கூட்டமானது பைஜூஸின் பங்குதாரர்களால் கூட்டப்பட்டுள்ளது. எதற்காக என்றால் பைஜூ ரவீந்திரனை தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருக்க நீக்குவதற்காகவும், அவரின் குடும்ப உறுப்பினர்களை நிர்வாக குழுவில் இருந்து விலக்கி வைக்கவும் இந்த கூட்டம் கூட்டப்படவுள்ளது. வாக்கெடுப்பு உடன் நடைபெற இருக்கும் இந்தக் கூட்டமே பைஜூ ரவீந்திரனின் தலைவிதியை தீர்மானிக்கும் கூட்டம் என்றுள்ளார்கள் பங்குதாரர்கள்.

இதனை எதிர்த்து பைஜூ ரவீந்திரன் தரப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகிய நிலையில், நீதிமன்றமோ நிர்வாகக் குழு கூட்டத்தை நடத்த தடை விதிக்கவில்லை என்றாலும், எடுக்கப்படும் முடிவுகளை வழக்கு மறுவிசாரணை வரும் வரை அமல்படுத்த தடை விதித்தது.

பைஜூ ரவீந்திரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மொத்தமாக 26.3 சதவீத பங்குகள் உள்ளன. நிர்வாகக் குழுவில் உள்ள பிற பங்குதாரர்கள் தரப்பிடம் சுமார் 32 சதவீத பங்குகள் உள்ளன. பங்குதாரர்கள் வசமே அதிக பங்குகள் இருக்கும் காரணத்துக்காகவே, நிர்வாகக் குழு கூட்டத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. பைஜூ ரவீந்திரன் குடும்பத்தில் இருந்து அவரது மனைவி மற்றும் இணை நிறுவனர் திவ்யா கோகுல்நாத் மற்றும் சகோதரர் ரிஜு ரவீந்திரன் ஆகியோர் நிர்வாக குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

சறுக்கியது எங்கே? - கேரளாவின் கண்ணூரைச் சேர்ந்து ஆசிரியர் குடும்பத்தில் இருந்து வந்து டியூஷன் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி, 22 பில்லியன்டாலர் மதிப்புள்ள நிறுவனமாக பைஜூஸை உயர்த்தியது ரவீந்திரனின் தொலைநோக்கு பார்வைதான். அதிவேக வளர்ச்சியை ருசித்த அதிவேகத்தில் சரிவையும் சந்தித்துள்ளார் ரவீந்திரன். இந்த சறுக்கலுக்கு பின்னணியாக தொழில் துறை விமர்சகர்கள் பலரும் கூறுவது, அந்த நிறுவனத்தின் கையகப்படுத்தல்களைத் தான்.

பொருளாதார நிபுணரும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் குருவாக அறியப்படும் ஷரத் கோஹ்லி பைஜூஸின் சறுக்கலுக்கான காரணங்களை அடுக்கியுள்ளார். அவரின் கூற்றுப்படி, "கரோனா காலத்தில் கிடைத்த வளர்ச்சியால் முதலீட்டாளர்கள் பலரும் பைஜூஸில் முதலீடுகளை குவித்தனர். இதனால் பைஜூஸின் மதிப்பு 22 பில்லியன் டாலர் எனும் அளவுக்கு உயர்ந்தது. முதலீடுகள் குவிந்தாலும், பைஜூஸை பொறுத்தவரை அதன் செயல்பாடு கரோனா கால மாதிரி என்பதை மறக்கும் வகையில் இருந்தது. கரோனா காலம் முடிந்தபின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட, மாணவர்கள் மீண்டும் பள்ளிக்குச் சென்றனர். இதனால் ஆன்லைனில் படிப்பது நிறுத்தப்பட்டுவிட்டது.

ஆனால், குழந்தைகள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல மாட்டார்கள் என பைஜூஸ் கருதியது. ஆன்லைன் மூலம் படிப்பது குறைந்த உடன் நஷ்டத்தை சந்திக்கத் தொடங்கியது. இதற்கு மத்தியில் 12-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை ஒன்றன் பின் ஒன்றாக பல கோடிகளை செலவழித்து வாங்கியதுடன், தனது செலவினங்களையும் அதிகரித்தது. நிறுவனத்தில் பல ஆண்டுகளாக தலைமை நிதி அதிகாரி பணியமர்த்தப்படவில்லை. ஆரம்பத்தில் இருந்தே பைஜூஸின் வணிக மாதிரியில் அசல்தன்மை இல்லை. இவையே சறுக்கல்களுக்கு காரணம். வருவாய் வரவில்லை எனத் தெரிந்தும் உலகம் முழுவதும் உள்ள 12க்கும் மேற்பட்ட நிறுவனங்களை இவ்வளவு வேகமாக பைஜூஸ் வாங்கியது ஏன் எனத் தெரியவில்லை" என்று காரணங்களை அடுக்கியுள்ளார் ஷரத் கோஹ்லி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x