Last Updated : 23 Feb, 2024 09:00 AM

2  

Published : 23 Feb 2024 09:00 AM
Last Updated : 23 Feb 2024 09:00 AM

கன்னியாகுமரியில் வீட்டு மனைகளாக மாறும் விளைநிலங்கள்!

நாகர்கோவில் அருகே வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வரும் வயல்வெளிகள்.

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் சமீப காலமாக நீர் நிலைகள் மற்றும் விளை நிலங்கள் படிப்படியாக குறைந்து வருகிறது. 1950- ம்ஆண்டில் 50 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. வீட்டு மனைகளின் தாக்கம் காரணமாக 2010-ல் 10 ஆயிரம் ஹெக்டேர், தற்போது 6 ஆயிரம் ஹெக்டேராக சுருங்கி நெல் விவசாயம் அழிவின் விளிம்பில் செல்கிறது.

இது போல் விளை பொருட்களின் ரகங்களும் அரிதாகி வருகிறது. மாவட்டத்தில் 64 வகை நெல் ரகங்கள் பயிரிடப்பட்ட நிலையில் தற்போது 6 ரகங்களாக குறைந்து விட்டது. 350 மா ரகங்கள், 300 பலா மர ரகங்கள், 45 வகை வாழை ரகங்கள் இருந்த நிலையில் இவற்றில் தற்போது சில ரகங்கள் மட்டுமே எஞ்சியுள்ளது. வயல்கள் உள்ளிட்ட விளை நிலங்களை வீட்டு மனைகளாக்க வேண்டும் என்றால் 3 முதல் 5 ஆண்டுகள் வரை நீர்வர வழியின்றி தரிசாக இருக்க வேண்டும்.

ஆனால், நீர்வரத்து உள்ள பகுதிகள் தரிசாக விடப்பட்டு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் ஆசியோடு வீட்டு மனைகளாக்கப்படுகிறது. சுசீந்திரம், பீமநகரி, ஆளூர், மருங்கூர், தேரூர், தாழக்குடி, வீரநாராயணமங்கலம், புத்தேரி என பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய விளை நிலங்கள் வேக வேகமாக மண் நிரப்பப்பட்டு வீட்டு மனைகளாக மாற்றப்படுகிறது. நகர் ஊரமைப்பு இயக்கத்தால் வழங்கப்படும் அனுமதி விளை நிலங்கள் கபளீகரம் செய்யப்படுவதை தீவிரப் படுத்துவதாக உள்ளது.

தொடரும் விதிமீறல்: வயல்கள், வளம் மிக்க மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்கும் வகையில் மலையோரங்களில் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கும் உரிமை, ஊராட்சிகளிடம் இருந்து பறிக்கப்பட்டு, மலையிட பாதுகாப்பு குழுமத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி மலையோர கிராமங்களில் வீட்டு மனைகள் அமைக்க வருவாய்த் துறை வேளாண் பொறியியல் துறை, வனத்துறை, பொதுப் பணித் துறைகளிடம் தடையில்லா சான்று பெற வேண்டும்.

இருந்த போதும் விதிகளை மீறி அனைத்து துறை அதிகாரிகளையும் சரிக்கட்டி அனுமதி பெற்று காக்கா வில்லேஜ் மற்றும் ராம்சார் பாதுகாப்பு நிலமான பறவைகள் சரணாலய பகுதிகளில் விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி பத்திரப் பதிவு செய்து விடுகின்றனர். எனவே, குமரி மாவட்டத்தை பாதுகாக் கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேளாண் ஆர்வலர் சங்கரபாண்டியன், மனு அனுப்பியுள்ளார்.

அதில், நீர்வரத்து மற்றும் பாசன கால்வாய்கள், நீராதாரங்கள் ஆக்கிரமிக் கப்படுவதால் விவசாயம் அடியோடு அழிவதோடு, நிலத்தடி நீர் மட்டமும் அகல பாதாளத்துக்கு சென்று குடிநீர் தட்டுப்பாடு உருவாகிறது. நிலத்தடி நீர் உவர்ப்பாக மாறும் பரிதாப நிலையை குமரி மாவட்டம் சந்தித்துவருகிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நெற் களஞ்சியமாக திகழ்ந்த கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதி நாஞ்சில் நாடு என்ற சிறப்பு பெற்றது.

அதிகரிக்கும் வெப்ப நிலை: விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றும் போக்கு தொடர்ந்தால் இனி இந்த சிறப்பு மங்கி போகும் சூழல் ஏற்படும். இயற்கை வளம் பாதிக்கப்பட்டு வருவதால் குமரியில் இயல்பை விட வெப்பநிலை அதிகரித்து வருகிறது. வட துருவத்தில் இருந்து குமரிக்கு வருகை தரும் வெளிநாட்டு பறவைகளின் வருகையும் வெகுவாக குறைந்து போனது.

இயற்கையை நாம் அழித்தால் இயற்கை நம்மை அழிக்கும் என்பதை கடந்த மழை வெள்ளப் பெருக்கில் உணர்ந்த போதும், விளை நிலங்களை அழிக்கும் போக்கு தொடருமானால் மீண்டும் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலை வரும். குமரியை பசுமை மாவட்டம் ஆக்குவோம் என்று சொன்னால் மட்டும் போதாது.

அழிவின் விளிம்பில் உள்ள வயல்கள், நிலத்தடி நீராதாரங்களை பாதுகாப்பதில் அக்கறை செலுத்துவது மிகவும் அவசியம். இதற்கு டெல்டா பகுதியைப் போல பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக குமரி மாவட்டத்தை அறிவித்து விளை நிலங்கள், நீராதாரங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். விளை நிலங்களை அழிக்கும் போக்கு தொடருமானால் மீண்டும் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலை வரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x