

ஓசூர்: சர்வதேச மலர் சந்தையில் போட்டி அதிகரிப்பு மற்றும் நோய்தாக்கம் காரணமாக இந்த ஆண்டுகாதலர் தினத்துக்கு ஓசூர் ரோஜாஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், உள்ளூர் சந்தைகளிர் மலர்களை விற்பனை செய்ய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தளி, கெலமங்கலம், பேரிகை,பாகலூர் உள்ளிட்ட பகுதியில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை மலர் சாகுபடிக்கு கைகொடுத்து வருகிறது. குறிப்பாக, ரோஜா மலர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு, வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.ஓசூர் ரோஜாவுக்கு சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கும்.
இதனால், ஓசூர் பகுதி விவசாயிகள் ஆண்டுதோறும் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பசுமைக் குடில் அமைத்து தாஜ்மஹால் (சிவப்பு), நோப்ளாஸ், கோல்ட் ஸ்டிரைக் சவரன், அவலஞ்சர், பெர்னியர் உள்ளிட்ட 22 வகையான ரோஜா மலர்களை சாகுபடி செய்துவருகின்றனர்.
காதலர் தினம், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஓசூரிலிருந்து அதிக அளவில் ரோஜா மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. குறிப்பாக, தாஜ்மஹால், அவலாஞ்சி மலர்கள் சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு 30 லட்சம் அளவுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கு 10 லட்சம் அளவுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
இந்நிலையில், கடந்த சிலஆண்டுகளாக சர்வதேச சந்தைகளுக்கு பல்வேறு நாடுகளிலிருந்து ரோஜா விற்பனைக்கு வருவதால், கடும் போட்டி நிலவியது. இதனால்,ஓசூர் ரோஜா ஏற்றுமதி படிப்படியாகக் குறைந்து, வரும் 14-ம் தேதி காதலர் தினத்துக்கு ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாகலூரைச் சேர்ந்த ரோஜா சாகுபடி விவசாயிகள் கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளாகச் சர்வதேச மலர் சந்தையில் புதிய வகையிலான ரோஜா மலர்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்ததால், ஓசூர்ரோஜா மீதான ஆர்வம் படிப்படியாகக் குறைந்தது. சில ஆண்டுகளுக்கு முன்னர் 3 கோடி ரோஜாமலர்கள் ஏற்றுமதியான நிலையில், 2023-ல் 30 லட்சம் மலர்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டன.
நடப்பாண்டில் ஒரு கோடி மலர்களை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்தோம். ஆனால், நோய் தாக்கம் காரணமாக 50 லட்சம் மலர்களை மட்டும் உற்பத்தி செய்துள்ளோம்.
தற்போது, வெளிநாட்டு மலர்சந்தைகளில் கடும் போட்டி நிலவுவதாலும், விமானப் போக்குவரத்துச் செலவு அதிகரிப்பாலும் காதலர் தின ஏற்றுமதியை நிறுத்தியுள்ளோம். பெங்களூரு, கேரளா, டெல்லி மற்றும் வட மாநில மலர் சந்தைகளில் ஓசூர் ரோஜாவுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், உள்ளூர் சந்தை வாய்ப்பை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.
ஏற்றுமதியில் இதே நிலை நீடித்தால், வருங்காலங்களில் ஓசூர் பகுதியில் ரோஜா சாகுபடி பாதிக்கப்படும். ரோஜா ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் விமானச் சேவைக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். அல்லது அரசே கொள்முதல் செய்து, வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.