Published : 07 Jan 2024 09:00 AM
Last Updated : 07 Jan 2024 09:00 AM

28 மாநிலங்களின் சிறப்பு பொருட்களில் உதகையில் சாக்லெட் தயாரிப்பு

உதகை: நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் ஊட்டி வர்க்கி, யூகலிப்டஸ் தைலம் பிரபலமானவை. அதேபோல், நூற்றாண்டுகளுக்கு மேலாக உதகையில் தயாரிக்கப்படும் ஹோம் மேட் சாக்லெட் உலக பிரசித்தி பெற்றது.

இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், ஹோம் மேட் சாக்லெட்டை விரும்பி வாங்கி செல்வது வழக்கம். வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுவதுடன், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நீலகிரி மாவட்டம் போன்ற குளிர்ந்த பகுதியில் மட்டுமே தயாரிக்கப் படும் இந்த வகை ஹோம் மேட் சாக்லெட்டுகள், சீசன் அல்லாத காலத்தில் மாதம் ஒரு லட்சம் கிலோவும், சீசன் காலத்தில் 5 லட்சம் கிலோ வரையும் விற்பனையாகின்றன. 250 கிராம் சாக்லெட் ரூ.120 முதல் ரூ.400 வரையும், பிரத்யேகமாக தயாரிக்கப்படும் சாக்லெட்டுகள் கிலோ ரூ.2500 முதல் ரூ.5 ஆயிரம் வரையிலும் விற்கப் படுகின்றன.

ஹோம் மேட் சாக்லெட் தயாரிப்பில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புத்தாண்டை முன்னிட்டு உதகையை சேர்ந்த ஹோம் மேட் சாக்லெட் உற்பத்தியாளர் பசலூர் ரஹ்மான், 28 மாநிலங்களில் விளைவிக்கப்படும் பொருட்களைக் கொண்டு, ஹோம் மேட் சாக்லெட் தயாரித்துள்ளார்.

ஆந்திராவின் கோங்குரா மற்றும் மிளகாய், குஜராத்தின் வெல்லம், ஹரியானாவின் அத்திப் பழம், ஜார்க்கண்ட்டின் பலாப் பழம், புளி, கர்நாடகாவின் பில்டர் காபி, மகாராஷ்டிராவின் அல்போன்சா மாம்பழம், தமிழ்நாட்டின் வாழைப் பழம், ஏலக்காய், கேரளாவின் தேங்காய், காஷ்மீரின் குங்குமப் பூ ஆகியவற்றை சாக்லெட்டில் கலந்து உற்பத்தி செய்கிறோம். இதில், குங்குமப்பூவை கொண்டு தயாரிக்கப்பட்ட சாக்லெட் ரூ.500-க்கு விற்கப்படுகிறது. இவ்வளவு சுவைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட சாக்லெட்களை கொண்டு கண்காட்சியும் நடத்தப்படுகிறது.

இது குறித்து பசலூர் ரஹ்மான் கூறும்போது, ‘‘புத்தாண்டையொட்டி, நாட்டிலுள்ள 28 மாநிலங்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக, அந்தந்தமாநிலத்தில் விளையும் சிறப்பான விளைபொருட்களைக் கொண்டு, சிறப்பு ஹோம் மேட் சாக்லெட் தயாரித்துள்ளோம். மேலும், பெண்கள் கழுத்தில் அணியும் டாலர்கள், கம்மல்களில் சாக்லெட் பொருட்கள் இடம்பெற்றிருப்பது, புத்தாண்டுக்கு புது வரவாக உள்ளது.

நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றும் ஹோம் மேட் சாக்லெட்டுகளில், ஒவ்வோர் ஆண்டும் புதுமைகளை புகுத்தி வருவதால், இதற்கான கிராக்கி இன்னும் குறையாமல் உள்ளது ’’என்றார். சுவையும், தரமும் மாறாமல் தயாரிக்கப்படுவதால், சந்தைகளில் நீலகிரி ஹோம் மேட் சாக்லெட் நிலைத்து நிற்பதுடன், இந்த தொழிலை நம்பியுள்ள ஆயிரக் கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது என்று, இத்தொழில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x