Published : 05 Jan 2024 06:41 AM
Last Updated : 05 Jan 2024 06:41 AM

துவரம் பருப்பு கொள்முதலுக்கு தனி வலைதளம்: மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்

புதுடெல்லி: விவசாயிகள் தங்களது விளைபொருட்களை குறிப்பாக துவரம் பருப்பை விற்பனை செய்வதற்கான தனி வலைதளத்தை மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். இந்த விழாவின் போது அமித் ஷா பேசியதாவது:

தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு லிமிடெட் (நாஃபெட்) மற்றும் இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (என்சிசிஎஃப்) ஆகியவற்றுக்கு விவசாயிகள் தங்களது விளைபொருளான துவரம் பருப்பை நேரடியாக விற்பனை செய்யும் வகையில் புதிய வலைதளத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் குறைந்தபட்ச ஆதரவுவிலை அடிப்படையில் துவரம்பருப்பை அந்த கூட்டமைப்புகளுக்கு விற்பனை செய்யலாம்.

இதேபோன்று, உளுந்து, மசூர் பருப்பு மற்றும் மக்காச்சோள விவசாயிகளுக்கும் பிரத்யேக வலைதளம் விரைவில் தொடங்கப்படும். நாஃபெட் மற்றும் என்சிசிஎஃப் ஆகியவை தங்களது இருப்பை பராமரிக்கும் வகையில் அரசு சார்பில் பருப்பு வகைகளை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்கின்றன.

இந்த புதிய வலைதளம் தொடங்கப்பட்டுள்ளதையடுத்து, விதைப்பு நடவடிக்கைக்கு முன்பாகவே விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் விற்பனை செய்வதற்காக இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், வெளிச் சந்தை விலையானது குறைந்தபட்ச ஆதரவு விலையை விட அதிகமாக இருக்கும்பட்சத்தில் அதனை தனியாக ஒரு சூத்திரத்தின் மூலம் கணக்கிட்டு பருப்புக்கான சராசரி விலை நிர்ணயம் செய்யப்படும்.

விலை உறுதி செய்யப்படாததால் நாட்டில் அதிகமான விவசாயிகள் பருப்பு வகைகளை பயிரிடுவதில்லை. அந்த குறையை இந்த வலைதளம் போக்கும். மேலும், விவசாயத் துறையில் ஒரு பெரிய சீர்திருத்தத்தை கொண்டு வர மத்திய அரசின் இந்த நடவடிக்கை பெரிதும் உதவும். 2027-க்குள் பருப்பு உற்பத்தியில் தன்னிறைவை அடையும் இலக்கும் எட்டப்படும்.

இந்த வலைதளம் மூலம் துவரம்பருப்பு விற்பனை செய்த 25 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.68 லட்சம் ரூபாய் எந்தவித இடையூறுகளின்றி அவர்களது வங்கி கணக்குகளுக்கே அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அமித் ஷா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x