Last Updated : 11 Aug, 2014 10:00 AM

 

Published : 11 Aug 2014 10:00 AM
Last Updated : 11 Aug 2014 10:00 AM

தாமதமாக திருப்தி அடைதல்

ஒருவருடைய வாழ்கையின் வெற்றிக்குப் பெரிதும் உறுதுணையாக இருப்பது தாமதமாக திருப்தி அடைதல் என்று சொன்னால் அது மிகையாகாது. 1960-ம் ஆண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான வால்டர் மைக்கேல் என்பவர் உளவியல் சம்பந்தமாக சில சோதனைகள் மேற்கொண்டார். அவற்றில் மிகவும் பிரபலமான ஒன்று மார்ஷ் மெல்லோ சோதனை.

4 முதல் 5 வயது உள்ள சிறு குழந் தைகளைக்கொண்ட தனித்தனியான அறையில் சாக்லேட்டை அவர்கள் முன்னால் வைத்து நான் வெளியே சென்று 15 நிமிடம் கழித்து வருவேன்; இதை சாப்பிடாமல் இருந்தால் உனக்கு 2 தருவேன். ஒருவேளை சாப்பிட்டுவிட்டால் அந்த ஒன்றுதான் என்று சொல்லப்பட்டது.

100 குழந்தைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சோதனையில் பல குழந்தைகள் அவர் வெளியே சென்ற வுடன் அதை சாப்பிட்டுவிட்டனர். சிலர் கொஞ்ச நேரம் பொறுத்து பின்னர் அந்த உணர்ச்சியைக் கட்டுப்படுத்தாமல் சாப்பிட்டுவிட்டனர். அவற்றில் 5 குழந்தைகளே 15 நிமிடம் காத்திருந்து 2 சாப்பிட்டனர். மிக முக்கிய காரணம், ஒரு வேளை நமக்கு 2 கிடைக்கவில்லை என்றால் நாம் காத்திருந்தது வீணாகி விடுமோ என்ற எண்ணமும்தான்.

இத்துடன் இந்த பரிசோதனை முடியவில்லை. 10 ஆண்டுக் காலம் கழித்து அவர்களுடைய வாழ்கையைப் பார்க்கும்போது அந்த 5 பேர் மற்றவர்களைக் காட்டிலும் எல்லா விதத்திலும் சிறந்து விளங்குகிறார்கள் என்று தெரிய வந்தது.

இத்தகையான நிகழ்வுகளை நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் கண்கூடாக பார்க்கலாம். ஒரு குழந்தை டி.வி. பார்க்காமல், ஹோம் வொர்க் செய்து அன்றாடம் படித்தால் நல்ல மதிப்பெண் வாங்க முடியும். இங்கு தாமதப்படுதல் என்பது ஒரு பெரிய வெற்றிக்கு உண்டான அடித்தளம்.

நீங்கள் எதில் வெற்றி பெறவேண்டு மானாலும் ஒழுக்கம், அதற்கான செயல்பாடு முக்கியம், பல இடையூறுகள் வரும் அதைக் கண்டு கொள்ளக்கூடாது. இதற்கு நாம் சிறிது அட்ஜஸ்ட் செய்து கொள்ளவேண்டும் அவ்வளவுதான். 1. பொறுத்திருந்தால் பெரிய பலன் கிடைக்கும் 2. எனக்கு அந்த வலிமை உள்ளது, அப்படி கொஞ்சம் குறைந்தாலும் என்னால் அந்த வலிமையை உருவாக்கிக் கொள்ள முடியும்.

மேலே சொன்ன தாமதமாக திருப்தி அடைதல் எவ்வாறு நம்முடைய முதலீட்டில் பயன்படக்கூடியது என்று பார்க்கலாம்.

ஒருவரிடம் பணம் இருந்தால் செய்யக் கூடிய எளிதான செயல், அதை செலவு செய்வது. அப்படி பழக்கப்பட்டவர்களை எப்போதுமே நாம் கட்டுப்படுத்த முடியாது. அதேசமயம் ஒருவருக்கு பணம்கம்மியாக இருக்கும்போது அதை மிகவும் பொறுப்பாக செலவு செய்வார்கள்.

ஒருவர் வேலைக்குச் சேர்ந்தவுடன் எல்லாவிதமான பொருளுக்கும் ஆசைப்படாமல், எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேமிக்க ஆரம்பித்து விட்டால் அவருக்கு சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கும். அவ்வாறு உள்ளவர்கள் வாழ்வில் எந்த கடன் தொல்லையும் இல்லாமல் பணத்தை பல மடங்கு பெருக்குகிறார்கள் என்பதை நம்மால் உணர முடியும்.

பலரும் முதலீடு செய்தவுடன் பணம் பெருக வேண்டும் என நினைக்கிறார்கள்; அது முடியாத ஒன்று. மேலே சொன்ன மார்ஷ்மெல்லோ சோதனையில் வெகு சிலரே பொறுமையுடன் இருந்ததுபோல, நீண்டகால அடிப்படையில்தான் அந்த பணம் வேண்டும், மேலும் என்னால் முடிந்தவரை சேமிப்பேன் என்ற மன உறுதி உள்ளவர்கள் பணத்தை பல மடங்கு பெருக்கி இருக்கிறார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த, புரிந்த ஒன்று. அப்படி இருக்கும்போது ஏன் செய்வதில்லை என்றால் அவர்களுக்கு உடனடியாக ரிசல்ட் வேண்டும்.

10 வருடம் காத்திருந்தால் நல்ல ரிடர்ன்ஸ் கிடைக்கும் என்றாலும் பலருக்கு அவ்வளவுகாலம் பொறுமை இல்லை மற்றும் நம்பிக்கை இல்லை.

2003ன் தொடக்கத்தில் 900 இருந்த நிப்டி இன்டெக்ஸ், இன்று 11 வருடங்களில் 7700. 8 மடங்கிற்கும் மேல். நாம் கவனிக்க வேண்டியது சதவிகிதமே தவிர அதன் நம்பர் இல்லை. 2003ம் ஆண்டு முதலீடு செய்த பல முதலீட்டு திட்டங்கள் சுமார் 15 முதல் 25 மடங்கு வரை 2014 ஜூன் மாத முடிவில் ரிடர்ன்ஸ் தந்திருக்கிறது. எந்தவிதமான வரியும் கட்ட வேண்டிய அவசியமில்லை.

எந்த ஒரு கால கட்டமாக இருந்தாலும் 10 முதல் 15 வருடம் முடிவில் சந்தையின் ஏற்றத் தாழ்வை சந்தித்து இத்தகைய ரிடர்ன்ஸ் சாத்தியப்படுகிறது. ஆனால் எல்லோருக்கும் பெரிய சந்தேகம் நான் இன்று முதலீடு செய்தால் இதே மாதிரி வருமா?

இதற்கு ஒரே பதில், நிச்சயமில்லை; ஆனால் உங்களுடைய பாதுகாப்பான முதலீடு என்பது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தாது. அப்படி இருக்கும்போது இதில் பாதி கிடைத்தால் கூட நல்ல பலன் தான். இன்று ஆரம்பிக்கப் படக்கூடிய பல நிறுவனங்கள் முன்பு பல காலம் இருந்த நிறுவனங்களை விட நன்றாக செயல் படுவதோடு பல மடங்கு விரைவாக வளர்ந்து வருகின்றன. சந்தை முதலீடு என்பது அவ்வகையான நிறுவனங்களில் பங்குதாரர் ஆவதுதான்.

மேலே சொன்ன உதாரணம் கூட்டு வட்டியில் கணக்கிட்டால் 26.5% முதல் 32.3% வரைதான். ஒரு பாதுகாப்பான முதலீடு 8 முதல் 10% கொடுக்கும்போது, ரிஸ்க்கான முதலீடுகடந்த 6 வருட காலம் வெறும் 3% கூட்டு வட்டியே தந்திருப்பதால் 15% ரிடர்ன்ஸ்கிடைப்பது என்பதற்கான சாத்தியங்கள் அதிகம்.

சாராம்சம்: தாமதமாக திருப்தி அடைதல் என்பது எல்லோராலும் பின்பற்றக்கூடிய ஒன்று. பல ஆண்டுகளாக நம்மிடம் இருந்தது, கடந்த 10 ஆண்டுகளாக மேல் நாட்டுமோகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தொலைத்து கொண்டிருக்கிறோம். அதனால் தான் நிறைய பேர் நன்றாக சம்பாதித்தும் இன்னும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தேவைகளும், பணவீக்கங்களும் தினசரி அதிகரித்து கொண்டிருக்கிற இன்றைய சூழலில் நாம் கடைபிடிக்க வேண்டிய ஒன்று தாமதமாக திருப்தி அடைதல். ஒருவேளை அதற்கு கிடைக்கும் பலனில் நம்பிக்கை இல்லை என்றால் கொஞ்சம் நேரம்ஒதுக்கி அந்த முதலீட்டை உற்றுநோக்கினால் நமக்கு தாமதமாக திருப்திஅடைதலின் முக்கியத்துவம் தெரியும். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது போலகாத்திருப்போம், நிறைய பணம் செய்வோம் வாருங்கள்.

padmanaban@fortuneplanners.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x