Published : 04 Jan 2018 01:44 PM
Last Updated : 04 Jan 2018 01:44 PM

இன்ஃபோசிஸ் தலைமை செயல் அதிகாரி சலீல் பரேக் சம்பளம் ரூ.18.60 கோடி

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரி சலில் பரேக்கின் மொத்த சம்பளம் ரூ.18.60 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சம்பளம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. முந்தைய தலைமைச் செயல் அதிகாரி விஷால் சிக்கா வாங்கிய சம்பளத்தை விட குறைவாக இவருக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. 2016-17-ம் நிதி ஆண்டில் விஷால் சிக்கா ரூ.45.11 கோடியை சம்பளமாக (சம்பளம், பங்குகள் மற்றும் சலுகைகள் உட்பட) பெற்றார். மேலும் காக்னிசென்ட், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளை விட குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் விப்ரோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியை விட அதிகமாக சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்துக்கு நிலையான சம்பளம் மற்றும் சலுகைகளுடன் மாறுபடும் சம்பளம் ரூ.2.37 கோடி வழங்கப்படும்.

சலில் பரேக்கின் நிலையான ஆண்டு சம்பளம் ரூ.6.5 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல மாறுபடும் சம்பளம் ரூ.9.75 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. மாறுபடும் சம்பளம் அடுத்த நிதி ஆண்டு முடிவில் அவருக்கு கிடைக்கும் என இயக்குநர் குழு உறுப்பினர் கிரண் மஜூம்தார் ஷா தெரிவித்தார். இது தவிர ரூ.3.25 கோடி மதிப்புக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகளும் அவருக்கு கிடைக்கும் என தெரிவித்தார். மேலும் செயல்பாடுகளைப் பொறுத்து ரூ.13 கோடிக்கு பங்குகள் மற்றும் ஒரு முறை மட்டும் 9.75 கோடி அளவுக்கு பங்குகள் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு இவர் தலைமைச் செயல் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். நிறுவனத்தில் இருந்து வெளியேறும் பட்சத்தில் போட்டி நிறுவனத்தில் ஆறு மாதம் வரை பணியில் சேரக்கூடாது. அதேபோல வாடிக்கையாளராக இருக்கும் நிறுவனத்தில் 12 மாதம் வரை இணைய கூடாது என ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. தவிர அவர் வசம் இருக்கும் பங்குகளைத் தற்போதைக்கு பணமாக்க முடியாது. பல கால கட்டங்களில் பணமாக்கிக்கொள்ளும் வகையில் இந்த பங்குகள் வழங்கப்பட்டிருக்கிறது. கடந்த 2-ம் தேதி நிறுவனத்தின் தலைமை பொறுப்பை பரேக் ஏற்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x