Published : 25 Oct 2023 05:21 AM
Last Updated : 25 Oct 2023 05:21 AM

தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஆவின் பொருள் விற்பனையை அதிகரிக்க இலக்கு

சென்னை: தீபாவளி பண்டிகை முன்னிட்டு, இனிப்பு, கார வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் விற்பனையை 20 சதவீதம் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் சு.வினீத் தெரிவித்தார்.

தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஆவின் வாயிலாக, தினமும் 30 லட்சம் லிட்டர் மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இப்பாலை பதப்படுத்தி, ஆரஞ்சு, பச்சை, நீல நிறப் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர, பால் உபபொருட்களான வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உட்பட 225 வகையான பால் பொருட்களை தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக, தயாரித்து, ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.

இதற்கிடையில், நிகழாண்டில் ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் சிறப்பு இனிப்பு வகைகள், கார வகைகள் விற்பனையை அதிகரிக்க திட்டமிடப்பட்டது. இதையடுத்து, ஆவின் ஒன்றியங்களில் பால் பொருட்கள், இனிப்பு வகைகள் தயாரிப்பு மற்றும் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது, ஆயுதபூஜை நிறைவடைந்துள்ள நிலையில், ஆவின் பொருட்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் சு.வினீத் கூறியதாவது:

ஆவின் நிறுவனம் சார்பில் பால் உபபொருட்களான வெண்ணெய், நெய், பால்கோவா, மைசூர் பாகு, குலாப்ஜாமுன், ரசகுல்லா, லஸ்சி, மோர், சாக்லெட், தயிர் மற்றும் ஜஸ் கிரீம் போன்ற பால் பொருட்களை தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் மூலமாக விற்பனை செய்து வருகிறது. இதுதவிர, பண்டிகை காலத்தில் இனிப்புவகைகள், கார வகைகள் தயாரித்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயுதபூஜையை ஒட்டி, ஆவின் பொருட்களுக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது எங்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

தற்போது தீபாவளி பண்டிகை நெருங்குகிறது. இதை முன்னிட்டு, ஆவின் பால் பொருட்களுடன் இனிப்பு வகைகள், கார வகைகள் ஆகியவற்றின் விற்பனையை கடந்த ஆண்டைவிட 20 சதவீதம் அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது, சேலம், கோவை, மதுரை, திருவண்ணாமலை, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தயாரிப்பு பணி நடைபெறுகிறது. தனியார் நிறுவனம், பொதுத்துறை நிறுவனங்கள், அதிகாரிகள் குடியிருப்புகளில் ஆவின் பொருட்களை வாங்க முன்பதிவு செய்து வருகின்றனர். வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப ஆவின் பொருட்களை வீடுகளுக்கு நேரடியாக விநியோகம் செய்யவும் திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x