ஒரு கிலோ கேரட் ரூ.7-க்கு விற்பனை: கொடைக்கானலில் பறிக்காமல் விட்ட விவசாயிகள்

ஒரு கிலோ கேரட் ரூ.7-க்கு விற்பனை: கொடைக்கானலில் பறிக்காமல் விட்ட விவசாயிகள்
Updated on
1 min read

திண்டுக்கல்: கொடைக்கானலில் விலை வீழ்ச்சியால் கேரட்டை பறிக்காமல் செடியிலேயே விவசாயிகள் விட்டுவிட்டனர். அதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கிளாவரை, கூக்கால், கவுஞ்சி, குண்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 800 ஹெக்டேர் பரப்பளவில் கேரட் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து வெளி மாவட்டங்களுக்கு அதிகம் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. தற்போது மேல்மலை கிராமங்களில் கேரட் அறுவடை தொடங்கியுள்ளது. நல்ல விளைச்சல் காரணமாக வரத்து அதிகரித்துள்ளது.

அதே சமயம், ஊட்டி கேரட் வரத்து அதிகரிப்பால் கொடைக்கானல் கேரட் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. கொடைக்கானல் விவசாயிகளிடம் வியாபாரிகள் ஒரு கிலோ கேரட் ரூ.7 முதல் ரூ.8 வரை கொள்முதல் செய்கின்றனர். இதனால் கேரட் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். ஆனால், வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ கேரட் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து மன்னவனூரைச் சேர்ந்த விவசாயி வேல் வல்லரசு கூறியதாவது: “ஊட்டி கேரட் வரத்து அதிகரிப்பால் கொடைக்கானல் கேரட்டுக்கு மவுசு குறைந்துள்ளது. இதனால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ கேரட் ரூ.7-க்கு விற்றால், கேரட் பறிக்கும் பணியாளர்கள் கூலி, கேரட்டை கழுவி மூட்டையாக்கி விற்பனைக்கு கொண்டு செல்லும் செலவுக்கு கூட கட்டுப்படியாகாது.

அறுவடை செய்த கேரட்டை நல்ல விலை கிடைக்கும் வரை சேமித்து வைக்கவும் முடியாது. சீக்கிரமே அழுகிவிடும் என்பதால் கேரட்டை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுவிட்டனர். விவசாயிகள் சிலர் கேரட்டை அறுவடை செய்யாமலேயே வயலோடு உழுது வருகின்றனர். கேரட் விவசாயிகளை பாதுகாக்க குறைந்தபட்ச ஆதார விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in