

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கேரட் வரத்து குறைவாக இருந்தும் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கிளாவரை, கூக்கால், கவுஞ்சி, குண்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் கேரட் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு அதிகம் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த ஆண்டு மலைப்பூண்டு அதிகமாகவும், கேரட் குறைவாகவும் விவசாயிகள் பயிரிட்டனர்.
அதனால் கேரட் வரத்து குறைவாக இருந்தும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஊட்டி கேரட் வரத்து அதிகரிப்பும் விலை வீழ்ச்சிக்கு ஒரு காரணம். கொடைக்கானல் விவசாயிகளிடம் வியாபாரிகள் ஒரு கிலோ கேரட் ரூ.35 முதல் ரூ.40 வரை கொள்முதல் செய்கின்றனர். ஆனால், வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.70 வரை விற்பனை செய்கின்றனர். விலை கட்டுப்படியாகாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இது குறித்து மன்னவனூரைச் சேர்ந்த விவசாயி வேல் வல்லரசு கூறுகையில், ''வரத்து குறைவாக இருப்பதால் நல்ல விலை கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், எதிர்பார்த்ததை விட குறைந்த விலைக்கே விற்பனையாகிறது. ஒரு கிலோ ரூ.50 வரை விற்றால் கட்டுப்படியாகும். கேரட்டை சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும் போது விற்பனை செய்ய வசதியாக, பூண்டியில் உள்ள சேமிப்பு கிடங்கை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்'' என்று கூறினார்.